'அமித்ஷா மிஷன் 350' டார்கெட் ஸ்டார்ட்! | Amith sha mission 350 target start..!

வெளியிடப்பட்ட நேரம்: 18:54 (25/08/2017)

கடைசி தொடர்பு:18:54 (25/08/2017)

'அமித்ஷா மிஷன் 350' டார்கெட் ஸ்டார்ட்!

மூன்றாண்டு கால ஆட்சியை முடித்து, நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு! மூன்றாண்டு ஆட்சியைத் தோழமைக் கட்சிகள் பாராட்ட, எதிர்க்கட்சிகளோ விமர்சிக்க, இவை குறித்துக் கவலைப்படாமல், தமது இலக்கை நோக்கி வேகமாய் முன்னேறுகிறது பி.ஜே.பி.! அடுத்து வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் பி.ஜே.பி தேசிய தலைவர் அமித்ஷா. மறுபுறம் இதையொட்டி  தில்லியில், தேசிய நிர்வாகிகள், மூத்தத் தலைவர்கள், மந்திரிகள், கட்சியின் மையக் குழு நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. கடந்த வாரத்தில் பி.ஜே.பி தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில், தில்லியில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு 'அமித்ஷா மிஷன்-350' என்று பெயரிட்டுள்ளார்கள் பி.ஜே.பி நிர்வாகிகள்.

அமித்ஷா

 

அமித்ஷா மிஷன்-350

''2014 நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 328 எம்.பி-க்களைப் பெற்று, தனிப் பெரும்பான்மையோடு வென்றது. இதில் பி.ஜே.பி-யின் பங்கு என்பது 282 எம்.பி-க்கள். தனித்து ஆட்சியமைக்க 272 எம்.பி-க்கள் தேவை. அதைவிட 10 தொகுதிகள் கூடவே பெற்றாலும், அடுத்து வருகின்ற 2019 தேர்தலில் ஆட்சியை நீடிக்கச் செய்ய வேண்டும். அந்த ஆட்சி, கட்சியின் சொந்தப் பலத்தை மேலும் பெருக்கிக்கொள்வதன் மூலம் பெறப்பட்ட ஆட்சியாக இருக்க வேண்டும், என்பதற்கானத் திட்டமே  'அமித்ஷா மிஷன் -350' '' என்கின்றனர் பி.ஜே.பி தில்லி நிர்வாகிகள்.  மேலும், கூட்டத்தில் அலசப்பட்ட தகவல்களையும் தொடர்ந்து அவர்களே விவரிக்கத் தொடங்கினர்.

''தேசியத் தலைவர் அமித்ஷா, நிறைய செயல் உத்திகளை வழங்கினார்.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், நெருங்கி வந்து தோல்வியுற்ற தொகுதிகள் மட்டும் 113 ஆகும். வேட்பாளர் பிரச்னையா? இல்லை கட்சி நிர்வாகிகள் ஒழுங்காக வேலை செய்யவில்லையா? என்றெல்லாம் 2016 செப்டம்பர் மாதத்தில் கூடிய தேசிய மையக் குழு நிர்வாகிகள் கலந்துரையாடினர். இதன் தொடர்ச்சியாக இம்முறை அந்தத் தொகுதிகளைப் பட்டியலிட்ட அமித்ஷா, 'இங்கெல்லாம்  இம்முறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார்.  இந்த 113 தொகுதிகளில் கூடுதலாக  சில தொகுதிகளைச் சேர்த்து, 150 எம்.பி தொகுதிகள் டார்கெட் கொடுத்துள்ளார். வெற்றிபெற்ற சிட்டிங் தொகுதிகள், நெருங்கி வந்து தோற்ற தொகுதிகள் என இதிலிருந்து மொத்தமாக 350 தொகுதிகளை வருகின்ற தேர்தலில் அறுவடை செய்ய வேண்டும். இதற்கெனவே  தேசிய நிர்வாகிகள், மந்திரிகள், மூத்த தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா நான்கு எம்.பி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

அமித்ஷா தலைமையில் தில்லியில் நடந்த பி.ஜே.பி முதல்வர்கள் மாநாடு

இதுதவிர, அமைச்சர்களுக்கு மாநில அளவிலான டார்கெட் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி நட்டாவுக்கு மேற்கு வங்காளம் கொடுக்கப்பட்டுள்ளது. சட்ட அமைச்சர் ரவிஷங்கருக்கு அஸ்ஸாம் ஒதுக்கப்பட்டுள்ளது. வர்த்தகத் துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமனுக்கு கர்நாடகா ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களில் குறைந்தது நான்கு எம்.பி-களை உறுதியாக வெற்றிபெற வைக்க வேண்டும் என்று டார்கெட் கொடுத்துள்ளார். இப்படி வெற்றிக்காக ஒதுக்கப்பட்ட குழுவினர் ஒவ்வொருவருமே குறைந்தது 40 முறை அந்த மாநிலங்களில், குறிப்பாக சாதகமான தொகுதிகளுக்கு  விசிட் அடிக்க வேண்டும். அங்கு கட்சிக்கான ஆதரவாளர்களை முதலில் சந்தித்து, அவர்களுடன் நெருக்கத்தை உண்டாக்கிக்கொள்ள வேண்டும். பிறகு, தொழிலாளர் பிரிவினர், விவசாயப் பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரையும் சந்திக்க வேண்டும். இந்த சந்திப்பின் போது எக்காரணத்தைக் கொண்டும் அரசு வாகனத்தைப் பயன்படுத்தாமல் கட்சி கார் அல்லது சொந்தக் காரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  சொகுசான நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதைத் தவிர்த்து, சிறிய ஹோட்டல்களில் தங்கவேண்டும். ஏற்கெனவே கணிசமான வெற்றிகளைக் கொடுத்த மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், சட்டிஸ்கர் போன்ற மாநிலங்களையும் மெத்தனமாக விட்டுவிடக் கூடாது. அங்கும் கவனத்தைச் சிதறவிடாமல் இருக்க வேண்டும் என கட்டளையிட்டுள்ளார் அமித்ஷா'' என்றார்கள் மூச்சுவிடாமல். தொடர்ந்து பேசிய நிர்வாகிகள், "இங்கு அலசப்பட்டதையே, தில்லியில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த பி.ஜே.பி மாநில முதல்வர்கள் மாநாட்டிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், இந்தக் கூட்டத்தில், தென் இந்தியாவுக்குத் தனியான சில திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன'' என்றவர்கள் அதுகுறித்தும் விவரிக்கத் தொடங்கினர்.

அமித்ஷா மிஷன் சவுத்-150

''தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட தென் இந்தியாவில் இருந்து 150 எம்.பி தொகுதிகளை வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயலை நியமித்துள்ளது தலைமை. இங்கு கூடுதலாக சாதி சங்கங்கள், கிராம அளவிலான பஞ்சாயத்துத் தலைவர்கள் என வட்டார செல்வாக்குள்ள நபர்களைச் சந்திக்கும்படி உத்தரவிட்டுள்ளது தலைமை. மீனவர் பிரிவு உள்ளிட்ட எளிய மக்கள் பிரிவினரிடம் கூடுதல் நெருக்கம் காட்டவும்,  அவர்களை பி.ஜே.பி பக்கம் திருப்பும் பணிகளையும் தொடர வேண்டும் என்று வழிகாட்டப்பட்டுள்ளது. ஆக எங்கள் அமித்ஷாவின் யுக்திகள் வடக்கில் 200, தெற்கில் 150 என மொத்தம் 350 தொகுதிகளை அறுவடை செய்யும். அவரின் டார்கெட்டை சக்ஸஸ் ஆக்க, பணிகளைத் தொடங்கிவிட்டனர் எங்கள் கட்சியினர்" என்றனர் நம்மிடம் பேசிய தில்லி மூத்த நிர்வாகிகள்.

ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைக்கும் இலக்கை வெல்ல, அணுஅணுவாக முன்னோக்கி நகர்ந்து வருகிறது பி.ஜே.பி! எதிர்க்கட்சிகளும் சிந்திக்க வேண்டிய தருணம்.

 

 

 

 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close