சாமியார் ராம் ரஹிம் குற்றவாளி எனத் தீர்ப்பு: ஆகஸ்ட் 28-ல் தண்டனை அறிவிப்பு

சாமியார் கும்ரீத் ராம் ரஹிம்சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், ராம் ரஹிம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ள ஹரியானா மாநில சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், தண்டனை விவரம் வரும் 28-ம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ராம் ரஹிம்

ஹரியானா மாநிலத்தில், பஞ்சகுலா  நகரத்தில் 'தேரா சச்சா சவுதா' அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவரான கும்ரீத் ரஹிம்சிங் மீது 2002-ம் ஆண்டு, பாலியல் வழக்குப் பதிவுசெய்ய பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றம் சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டது. 50 வயதுடைய கும்ரீத் தன்னுடையப் பக்தர்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்துவந்தது. 

இந்நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், ராம் ரஹிம் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், சாமியார் ராம் ரஹிம்க்கான தண்டனை விவரங்கள் குறித்து வருகிற 28-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என பஞ்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதனால், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் சாமியாருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். தீர்ப்பையொட்டி தேரா சச்சா சவுதா அமைப்பைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் பேர் பஞ்சகுலா நகரில் முகாமிட்டுள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். 

தேரா சச்சா சவுதா அமைப்பைச் சேர்ந்த 35 ஆயிரம் பேரை போலீஸார் கைதுசெய்து, சண்டிகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் தங்க வைத்துள்ளனர். சண்டிகர் நகரில், அதிவிரைவு அதிரடிப்படை (RAF)  மத்திய ரிசர்வ் போலீஸ் (CRPF) இந்தோ திபெத்தியன் போலீஸ் (ITBP) மத்திய தொழில்நிறுவன பாதுகாப்புப் படை வீரர்கள் (CISF)  6 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் உயர் அதிகாரிகளும் முகாமிட்டு, நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணித்து வருகின்றனர். சாமியாரின் ஆசிரமத்தைச் சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!