வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (25/08/2017)

கடைசி தொடர்பு:15:26 (25/08/2017)

நாளை தமிழகம் வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்!

அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் கடிதம் கொடுத்துள்ள நிலையில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளும்கட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள நிலையில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை தமிழகம் வருகிறார்.

வித்யாசாகர் ராவ்

அ.தி.மு.க-வில் உட்கட்சி பூசல் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஆறு மாதங்களாகப் பிரிந்திருந்த பன்னீர்செல்வம் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் சில நாள்களுக்கு முன்பு இணைந்தன. இருப்பினும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். குறிப்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். இதனால் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம்' என்று கூறி ஆளுநரை நேரில் சந்தித்து கடிதம் அளித்தனர்.

இதையடுத்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 'எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையை இழந்து விட்டது. எனவே, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். தொடர்ந்து பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் இதே கோரிக்கைளை முன்வைத்துள்ளனர். இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் நாளை தமிழகத்துக்கு வருகிறார்.