வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (26/08/2017)

கடைசி தொடர்பு:10:20 (26/08/2017)

பீகாரில் வெள்ளம் பாதித்தப் பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி!

பீகாரில் சில நாள்களுக்கு முன்னர் பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 300 பேர்களுக்கும் மேல் உயிரிழந்தனர். இந்நிலையில், வெள்ளம் பாதித்தப் பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார். 

சமீபத்தில் பீகார், நேபால் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் பெய்த கன மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பீகாரின் 15 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த வெள்ளப் பெருக்கினால் கிட்டத்தட்ட 7 லட்சம் மக்கள் அவர்களின் வசிப்பிடத்தில் இருந்து வெளியேறினர். இதுவரை மட்டும் 300 பேர் உயிரிழந்துள்ளதாக பீகார் அரசுத் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வெள்ளம் பாதித்தப் பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹெலிகாப்டர் வாயிலாக பார்வையிட உள்ளார். 

பிரதமரின் பீகார் வருகை குறித்து ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை பிரதமர் இன்று பார்வையிட வர உள்ளதாக கேள்விப்பட்டேன். இது ஒரு நாடகமாகத்தான் எனக்குத் தெரிகிறது. காரணம், வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் தண்ணீர் வடியத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், அவர் வர வேண்டிய அரசியம் என்ன? 300-க்கும் மேற்பட்டோர் இறந்தபோதும் பல லட்சம் பேர் வசிப்பிடம் இல்லாமல் தவித்தபோதும் அவர் எங்கே போனார்?' என்று விமர்சனம் செய்துள்ளார்.