வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (27/08/2017)

கடைசி தொடர்பு:17:45 (27/08/2017)

பா.ஜ.க-வுக்கு எதிராக பிரமாண்ட பேரணி...! கெத்து காட்டிய லாலு பிரசாத் யாதவ் #Patna

பீகாரில், லாலு பிரசாத் யாதவ் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன், நிதிஷ் குமாரின் ஜக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து அங்கு ஆட்சி அமைத்தது. நிதிஷ் குமார் அம்மாநிலத்தின் முதல்வரானார். லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி துணை முதல்வரானார். இதனிடையே தேஜஸ்வி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதால், அவரது வீடு மற்றும் அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் சி.பி.ஐ ரெய்டு நடத்தியது. இதனால், நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அடுத்த நாளே பாரதிய ஜனதா கட்சியின் உதவியுடன் மீண்டும் முதல்வரானார்.

பாட்னா பேரணி

இந்நிலையில், பா.ஜ.க-வுக்கு எதிராக பாட்னாவில் மிகப்பெரிய பேரணி நடத்த  லாலு திட்டமிட்டார். இதற்காக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  அதன்படி, 'பா.ஜ.க-வை விரட்டுவோம், நாட்டை காப்போம்' என்பதை வலியுறுத்தி, பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இன்று பேரணி நடந்தது. லாலுவின் இந்தப் பேரணியை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், காந்தி மைதானமே மக்கள் வெள்ளத்தில் நிரம்பியது. லட்சக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பேரணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகிய சரத் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தேஜஸ்வி தனது ட்விட்டர் பக்கத்தில், "பா.ஜ.க-வை தோற்கடிக்க முடியாது என்று நினைப்பவர்கள் காந்தி மைதானத்துக்கு வாங்க... 30 லட்சம் பேர் காத்துக்கொண்டிருக்கிறோம்' என கூறியுள்ளார்.