12 ஆண்டுகளில் இல்லாத கனமழை... வெள்ளத்தில் மிதக்கும் மும்பை! #MumbaiRains

நாட்டின் வர்த்தகத் தலைநகர் என்று அறியப்படும் மும்பை நகரம் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத மழையை எதிர்கொண்டு வருகிறது. 


மகராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் இன்று மதியம் வரை மட்டுமே 125 மி.மீ. அளவுக்கு மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட பத்து மடங்கு அதிகம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கும் கனமழை நீடிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் 3.2 மீட்டர் உயரத்துக்கு எழக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் பெய்துவரும் மழையால், புகழ்பெற்ற கிங் எட்வர்டு நினைவு மருத்துவமனை, பந்த்ரா உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தாதர், பைக்குலா, மாதுங்கா மற்றும் பரேல் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள போலீஸார், வாகனங்களில் பயணிக்கும்போது மழைநீர் சூழ்ந்தால் உடனடியாக அந்த வாகனங்களை விட்டு வெளியேறுமாறும் கூறியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க மாநில பேரிடர் மீட்புப் படையினருடன், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் களமிறங்கியுள்ளனர். சூழலைக் கண்காணிக்கும் மாநில பேரிடர் மீட்புப் படையின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆய்வு மேற்கொண்டார். சூழல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் மும்பை மாநகராட்சி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களில் பெய்த கனமழையால், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!