Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாரா ஆப் மூலம் பாலியல் வன்முறைக்கு எதிராகச் செயல்படும் சென்னை அமைப்பு!

சாரா ஆப்

”என்னோட சின்ன வயசுல பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருக்கேன். அதுலேருந்து இன்னும் மனசளவுல வெளிய வரல...''

''என் பொண்ணு பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருக்காளானு எப்படிக் கண்டுபிடிக்கிறது?''

''என் சகோதரனே என்னைப் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கினார். அந்த வயதில் அதை உணர முடியவில்லை. இப்போது நினைத்தாலும் அவமானமாக இருக்கிறது''

- இவையெல்லாம் 'சாரா ஆப்' -ல் வந்து குவியும் முகமறியாதவர்களின் வார்த்தைகள், சோகங்கள், வலிகள்... ஆன்லைனில் தற்போது வைரல் ஹிட்டாகியிருக்கும் ஒரு ஆப். டீன் ஏஜ்களின் பேவரைட் ஆப் சாரா. யார் வேண்டுமானாலும் நம்மிடம் கேள்வி கேட்கலாம். கேட்பது யாரென்று நமக்குத் தெரியாது. இதன் மூலமாக பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள் சென்னையைச் சேர்ந்த அவேர் (Aware) அமைப்பினர். சாரா ஆப்-ல் கேட்கப்படும் கேள்விகளை எடுத்து தங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதற்குத் தேவையான விளக்கங்களையும் நிபுணர்களின் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள்  ‘அவேர்’ (Aware)  அமைப்பின் சந்தியன்  திலகவதி மற்றும் அவருடைய குழுவினர்.

சாரா ஆப்“பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு தொடர்பான பல்வேறு விஷயங்களுக்கு விழிப்பு உணர்வு பிரசாரங்கள் செய்ய, 2013-ம் ஆண்டு ’அவேர்’ சமூகவலைதளப் பக்கத்தைத் தொடங்கினோம். முழுக்க முழுக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய பதிவுகளை மட்டுமே பதிவிட்டுக்கொண்டிருந்தேன். அவற்றுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. அந்த வரவேற்பு  நல்ல விஷயத்தைக் களத்துல இறங்கி செய்ஞ்சா என்னனு என்கிற தைரியத்தைக் கொடுத்துச்சு. குறிப்பா, குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறை தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்த, 2016-ம் ஆண்டு ‘Save the Smiles' பிரசாரத்தைத் தொடங்கினோம். சென்னையில இருக்கிற நொச்சிக்குப்பம், செம்மஞ்சேரி போன்ற  இடங்களுக்குப் போய் பாலியல் வன்முறைக்கு குழந்தைகள் ஆளாகாம இருக்க பெற்றோர்கள் என்ன செய்யணும்னு பிரசாரம் பண்ணுவோம். 'குட் டச்', 'பேட் டச்', பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகளை எப்படிக் கண்டுபிடிக்கணும், அவங்களை எப்படி வழிநடத்தணும்னு பேசுவோம். எங்க நிகழ்ச்சிக்கு பொதுமக்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சது . 

நம்ம நாட்டுல ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு குழந்தை பாலியல் துன்புறத்தலுக்கு ஆளாக்கப்படுறாங்க. ஆனா, இதைப் பத்தி வெளிப்படையா பேசுறதுக்கும், விவாதிப்பதற்கும் மக்கள், பெற்றோர் தயங்குறாங்க. நாங்க ஒவ்வொரு இடத்துக்கும் போய் நடத்துற விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில கலந்துக்க வர்றவங்க, பார்வையாளர்கள் மறைமுகமாச் சந்தேகம் கேட்பாங்க. நாங்களும் அதைப் புரிஞ்சிக்கிட்டு ஆலோசனை சொல்வோம். ஆனா, வெளிப்படையா பேசத் தயங்குவாங்க. அப்படிப்பட்டவங்களுக்குப் படிவம் கொடுத்து அதில் நிரப்பச் சொல்லி அதன் மூலமா ஆலோசனை வழங்கி தேவைப்பட்டா நிவாரணமும் கொடுப்போம்.

சாரா ஆப்பாலியல் சீண்டல்/வன்முறை குறித்து மக்கள்கிட்ட இன்னும் நெருங்கிப் பழக நினைச்சோம். அவங்க மனசுல உள்ள சந்தேகங்களைக் களைய நினைச்சோம். அப்பதான் 'சாரா ஆப்' வைரலாச்சு. உடனே நாங்களும் ‘Savethesmiles.saarahah.com' ஆப்ல சேர்ந்தோம். நாங்க சேர்ந்த சில மணி நேரங்களிலேயே  குறுஞ்செய்திகள் வர ஆரம்பிச்சது. இது கிட்டதட்ட மொட்டக் கடுதாசி மாதிரிதானே. அதனால, மெசேஜ் அனுப்பினவங்க தைரியமா தங்களுக்கு நடந்த அநீதி, சந்தேகம், பயம்னு அத்தனையையும் கொட்டித் தீர்த்தாங்க. அந்தக் கேள்விகளை எல்லாம் எங்களோட முகநூல் பக்கத்துல ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப்போட்டு அதுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க ஆரம்பிச்சோம். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது.

சில சமயம் சிக்கலான கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்கள்கிட்ட பேசி அவங்க ஆலோசனைகளோட பதில் சொல்வோம். நிச்சயமா எங்க விழிப்பு உணர்வு மூலமா நிறைய பேர் பயனடைவாங்கனு நம்புறோம். சமூக வலைதளம், ஒரு டெக்னாலஜி மூலமா மக்கள் மனசுல உள்ள குறைகளை நிவர்த்தி பண்ண முடியுது, அவங்க சந்தேங்களை களைய முடியுது, பாலியல் வன்முறைக்கு எதிரான பிரசாரத்தை பரப்ப முடியுதுங்கிற நிம்மதி கிடைச்சிருக்கு. எங்களோட செயல்களால நிறைய பேர் பயனடைஞ்சிருப்பாங்கனு நம்புறோம்'' என்கிறார் உறுதியான குரலில்.

நல்லது எதன் மூலம் வேண்டுமானாலும் தொடர நம் வாழ்த்துகள். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement