வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (30/08/2017)

கடைசி தொடர்பு:08:13 (30/08/2017)

கொட்டித்தீர்க்கும் கன மழையால் நீரில் மிதக்கும் மும்பை..!

மஹாராஷ்டிராவில் பெய்துவரும் கன மழையின் காரணமாக, மும்பை நகரம் வெள்ளத்தில் ஸ்தம்பித்துள்ளது. மேலும், மழையின் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், நேற்று முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. அந்த மழையின் அளவு சுமார் 300 மி.மீட்டர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இன்றும் கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மும்பையின் முக்கியப் பகுதிகள் மற்றும் புனே நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இந்த மழையின் காரணமாக பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. நிறைய விமானங்கள், வேறு விமானநிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. மும்பையில் பெரும்பாலான பகுதிகளில் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்றும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளதையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க மஹாராஷ்டிரா மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் மற்றும் கடற்படையினர், மீட்புப் பணியில் ஈடுபடுத்துவதற்குத் தயார்நிலையில் உள்ளனர். இந்தக் கன மழையின் காரணமாக, மும்பை மற்றும் புனே பகுதிகளைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.