வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (30/08/2017)

கடைசி தொடர்பு:11:52 (30/08/2017)

ஆபரேஷன் தியேட்டரில் மருத்துவர்கள் வாக்குவாதம்- இறந்து பிறந்த குழந்தை!

ராஜஸ்தானின் ஜோத்பூரில், மிக முக்கிய மருத்துவமனை ஒன்றில் நேற்று நடந்த அறுவைசிகிச்சையின்போது, மருத்துவர்களுக்கிடையே வாக்குவாதம் நடந்ததை, மருத்துவமனை ஊழியர் ஒருவர் மறைமுகமாகப் படம்பிடித்தார்.

Photo: NDTV

முக்கிய மருத்துவமனையில், குழந்தை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவசர சிசேரியன் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில், மருத்துவர்களும் செவிலியர்களும் இருந்தனர். அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணின் வயிற்றிலிருந்த குழந்தைக்கு இதயத் துடிப்பு வலிமையாக இருந்ததால், சிகிச்சைக்கு முன்பாக நோயாளி ஏதாவது உணவு எடுத்துக்கொண்டாரா என்று மகப்பேறு மருத்துவர்  நானிவால், மயக்கமருந்து நிபுணரிடம் கேட்டார். அதற்கு, உதவி மருத்துவர் ஒருவரிடம் ஆய்வுசெய்யும்படிச் சொல்லிருக்கிறார். ஆனால், அவர் இதற்கு உடன்படவில்லை. இதனால், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இருவரும் ஒருவருக்கொருவர் பெயரைச் சொல்லி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவத்தை மருத்துவமனை ஊழியர் ஒருவர் மறைமுகமாகத் தனது செல்போனில் படம்பிடித்தார். அங்கிருந்த செவிலியர்கள் அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால், சண்டை தொடர்ந்துகொண்டே போயிருக்கிறது.
இதனிடையே, அந்தப் பெண்ணுக்கு அறுவைசிகிச்சை செய்து பிறந்த குழந்தை, இறந்தே பிறந்தது. இந்தச் சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த இரு மருத்துவர்களும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.