வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (31/08/2017)

கடைசி தொடர்பு:12:09 (31/08/2017)

குர்மீத் ராம் ரஹீமை சிறைக்கு அனுப்பிய பத்திரிகையாளர்! #WhyInGodsName

ராம் ரஹீம்

ரு பத்திரிகையாளர் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. ஆட்சியை மாற்றுவதில் தொடங்கி, சாமியார்களை கூண்டில் ஏற்றுவது வரை எதையும் பத்திரிகையாளர்களால் செய்ய முடியும். சாமியார்கள் தங்களைக் கடவுள்களாக பாவித்துக்கொண்டு, மக்களை தங்கள்வசம் வைத்திருப்பது இந்தியாவில் ஒன்றும் புதிய விஷயமல்ல. அப்படி ஒரு சாமியார்தான் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் அசைக்க முடியாத ஒரு நபராக இருந்துவந்தார். இப்படி செல்வாக்குடன் வலம் வந்தவருக்கு, இப்போது 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வாங்கிக் கொடுத்திருப்பது ஒரு பத்திரிகையாளர் துணிந்து வெளியிட்ட கடிதம்தான்.

'தேரா சச்சா சவுதா' என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இந்த அமைப்புக்கு உலகம் முழுக்க ஐந்து கோடிக்கும் மேலான தொண்டர்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ் பக்கம் இருந்த ராம் ரஹீம் சிங், தற்போது பி.ஜே.பி பக்கம் சாய்ந்துள்ளார். இவ்வளவு ஆதரவு இருக்கும் இவரை சிறைக்குச் செல்ல வைத்தது, 2002-ம் ஆண்டு 'சாத்விஸ்' என்று சொல்லப்படும் பெண் தொண்டர் ஒருவர், அன்றைய பிரதமராக இருந்த வாஜ்பாய்-க்கும், பல நிறுவனங்களின் தலைவர்களுக்கும் மற்றும் ஹரியானா நீதிமன்றத்துக்கும் எழுதிய ஒரு மொட்டைக் கடுதாசிதான். அவர் எழுதிய கடிதத்தில், "40 முதல் 50 'சாத்விஸ்' சிர்ஸா தலைமயகத்தில் பணியாற்றி வருகிறோம். இந்த தலைமையகத்தின் உள்ளேதான் குர்மீத்தின் வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டுக்கு ஒருமுறை அவர் என்னை அழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். பாலியல் பலாத்காரம் செய்து, இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் எனக்குத் தீட்சை கொடுத்தார். என்னைப்போல் பல பெண்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிரதமராகிய நீங்களும், ஹரியானா நீதிமன்ற நீதிபதிகளும்தான் இதில் தலையிட வேண்டும். நான் என்னுடைய விவரங்களை வெளிப்படுத்தினால், என் குடும்ப உறுப்பினர்களுக்கு தொல்லை தருவார்கள். மேலும், இவர்களை தட்டிக்கேட்க இந்த மாநிலங்களில் யாரும் இல்லை" என்று எழுதியிருந்தார்.ராம் சந்தர் சத்ரபதி

இந்தக் கடிதத்தின் பேரில், குர்மீத் மீது ஹரியானா நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டது. 2008-ம் ஆண்டு மேலும் இரண்டு 'சாத்விஸ்' குர்மீத் ராம் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டனர். அதன் அடிப்படையில் நடந்து வந்த விசாரணையில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது.

சிர்ஸா தலைமையகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களை வெளியில் கொண்டுவர ஒரு 'சாத்வி' முயற்சி செய்திருந்தாலும், அதை பத்திரிகையில் வெளியிட்டு, மக்கள் அனைவருக்கும் கொண்டுசேர்க்கும் பணியைச் செய்தவர் 'பூரா சச்சா' என்ற ஹிந்தி பத்திரிகையில் பணியாற்றிய ராம் சந்தர் சத்ரபதி என்பவர்தான். சாமியார் குறித்த கடிதத்தின் தகவலை வெளியிட்ட பின்னர், கடந்த 2002-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி ராம் சந்தரை, இரண்டு கார்பெண்டர்கள் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். நிர்மல் மற்றும் குல்தீப் லால் ஆகியோருக்கு துப்பாக்கி மற்றும் வண்டி இரண்டையும் வழங்கி ராம் சந்தரை கொலைசெய்ய சாமியார் குர்மீத் அனுப்பி வைத்தது சி.பி.ஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம், அவர் பத்திரிகையில் வெளியிட்ட கடிதம்தான் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

ராம் சந்தர் சத்ரபதியின் இறப்பிற்குக் காரணமாக இருந்தவருக்குத் தண்டனை வாங்கித் தர வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருந்தவர் அவரின் மகன் அன்சுல் சத்ரபதி. அவர் "அப்பாவைக் கொலை செய்தபோது, எனக்கு 21 வயது. அப்போது, இதுபற்றி எங்கு முறையிடுவது என்று எனக்கு தெரியாமல் இருந்தது. பின்னர், 'தேரா சச்சா அமைப்பு' தலைவர் மீது ஹரியானா மற்றும் பஞ்சாப் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். பின்னர், 2003-ம் ஆண்டு இந்த வழக்கு, சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது" என்றார்.  

அவர் தந்தை இறந்து 12 ஆண்டுகள்வரை அந்த பத்திரிகையை நடத்துவதற்கு பல தடங்கல்கள் வந்துகொண்டிருந்தன. "என்னுடைய தந்தை துப்பாக்கியால் சுடப்பட்டு, 28 நாள்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடினார். பின்னர் அவர் உயிரிழந்தார். அவர், போலீஸாரிடம் கொடுத்த புகாரில், 'தேரா சச்சா அமைப்பின்' தலைவரான குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்குதான் பிரச்னையே தொடங்கியது" என்றார் அன்சுல்.

அன்சுல் சத்ரபதிமேலும், தேரா சச்சா அமைப்பு தலைவர் மீது மற்றொரு வழக்கு அதே நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த அமைப்பில் இருந்த ரஞ்சித் என்ற நபரும் கொலை செய்யப்பட்டார். அங்கு நடக்கும் பிரச்னைகள் பற்றி வெளியில் சொன்னது மட்டுமல்லாமல், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றியும் ரஞ்சித் கூறியிருந்தார். இந்த இரண்டு வழக்குகளும் விசாரணையில் இருந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு குர்மீத்துக்கு 20 ஆண்டுகள் தண்டனை  வழங்கப்பட்டுள்ளது. 2002-ம் ஆண்டு தொடங்கிய வழக்கு, 2003-ம் ஆண்டில் அன்சுல் வழக்குப் பதிவு செய்த பிறகு, சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார். அதன் பின்னர், வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. 2007-ம் ஆண்டு குர்மீத் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இப்போது, அந்தக் குற்றத்திற்கான தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கிறது. எனினும், ராம் சந்தர் சத்ரபதி தன்னுடைய தந்தை இறப்புக்கு காரணமாக இருந்தவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று உறுதியாகப் போராடி, அதைச் செய்தும் முடித்திருக்கிறார். தன்னைப்பற்றி யோசிக்காமல் பத்திரிகையாளர் வெளியிட்ட தகவலும், தன் தந்தையின் மறைவுக்குக் காரணமான ஒருவருக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டி அவரின் மகன் மேற்கொண்ட சட்டப்போராட்டமும்தான், மக்களை தொடர்ந்து ஏமாற்றி வந்த குர்மீத் ராம் ரஹீம் சிங்கை சிறைக்கம்பிகளுக்குள் தள்ளியிருக்கிறது. இதுபோன்றோரின் செயல்பாடுகளே, சமுதாயத்தில் இருந்து போலி சாமியார்களை வெளியேற்றுவதற்கான ஒரே வழியாக இருக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்