'கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றத்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையா?' - ப.சிதம்பரம் காட்டம்

'கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றத்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதா?' என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

ப.சிதம்பரம்


ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில், ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் மொத்தமுள்ள 632.6 கோடி எண்ணிக்கையிலான ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 8.9 கோடி எண்ணிக்கையிலான ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்ப வரவில்லை என்று கூறப்பட்டிருந்தது. இது மொத்தத்தில் 1.4 சதவிகிதம் என்றும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2016-17-ம் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து ட்விட்டர் பதிவு மூலம் கேள்வியெழுப்பியுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ’பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.1544,000 கோடியில், ரூ.16,000 கோடி மட்டுமே ரிசர்வ் வங்கிக்குத் திரும்பவில்லை. மொத்தப் பணத்தில் இது ஒரு சதவிகிதம் மட்டுமே. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பரிந்துரை செய்த ரிசர்வ் வங்கியின் செயல்பாடு வெட்கக்கேடானது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ரிசர்வ் வங்கிக்குக் கிடைத்த லாபம் ரூ.16,000 கோடி. ஆனால், புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்காக செலவிடப்பட்ட தொகையோ ரூ.21,000 கோடி. இதைப் பரிந்துரை செய்த பொருளாதார நிபுணருக்கு நோபல் பரிசே கொடுக்கலாம். 99 சதவிகித ரூபாய் நோட்டுகள் சட்ட ரீதியாகவே மாற்றப்பட்டுவிட்டன. எனில், கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றத்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதா?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!