வெளியிடப்பட்ட நேரம்: 14:52 (31/08/2017)

கடைசி தொடர்பு:15:16 (31/08/2017)

டெல்லி பறக்கின்றனர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் - நாளை குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், நாளை டெல்லி சென்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினகரன் ஆதரவு எம்,.எல்.ஏ-க்கள்


ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைந்ததையடுத்து, அ.தி.மு.க-வில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் வழங்கினர். இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.


இந்த சம்பவங்களால், 'முதல்வர் பழனிசாமியை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்' என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகின்றன. இதை வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை தி.மு.க எம்.பி-க்கள் இன்று காலை சந்தித்தனர்.


இதனிடையே, ஆளுநரைச் சந்திக்க தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் நேரம் கேட்டிருந்தனர். மேலும், ஆளுநர் தங்களை சந்திக்காவிடின், குடியரசுத்தலைவரைச் சந்தித்து முறையிடுவோம் என்றும் அவர்கள் கூறியிருந்தனர். இதனிடையே, ஆளுநரிடம் சரியான பதில் வராததால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் டெல்லியில் நாளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


இதை முன்னிட்டு, இன்று மாலை அவர்கள் டெல்லி செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.