Published:Updated:

`101 பேரில் ஒருவர்கூட சிறுபான்மையினர் இல்லை!’ -பால்கர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தாக்கரே அரசு

கொலை
கொலை ( மாதிரிப் படம் )

உத்தவ் தாக்கரே, ``பால்கரில் 3 பேர் கொல்லப்பட்டது வெட்கக்கேடான செயல். இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் தப்பிக்க முடியாது' என்றார்.

மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பால்கர் தாக்குதல் சம்பவத்தில் 101 பேர் கைது செய்யப்பட்டதாகவும், இதை தேவையில்லாமல் சிலர் தங்களின் அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்தி போலியான தகவல்களைப் பரப்புவதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

`101 பேரில் ஒருவர்கூட சிறுபான்மையினர் இல்லை!’ -பால்கர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தாக்கரே அரசு

மகாராஷ்டிரா மாநில பால்கர் மாவட்டத்தில், கடக்சின்சாலே என்ற கிராமப் பகுதியில் கடந்த 16-ம் தேதி இரவு 2 சாதுக்கள் உட்பட 3 பேரை குழந்தை திருட வந்தவர்கள் என தவறாக நினைத்து 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கொடூரமாகத் தாக்கினர். இந்தத் தாக்குதலில் இரண்டு சாதுக்கள் மற்றும் வாகன ஓட்டுநர் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மும்பை காந்திவிலி பகுதியைச் சேர்ந்த சாதுக்களான சிக்னி மகாராஜ், சுசில்கிரி மகாராஜ் மற்றும் கார் டிரைவர் நிலேஷ் தெல்கடே ஆகியோர் குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் ஓர் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காகச் செல்லும்போதுதான் இந்தக் கோர சம்பவம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சமூகவலைதளத்தில் பலர் இதை மதக் கலவரமாக மாற்றும் முயற்சியில் இறங்குவதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசு குற்றம் சாட்டியது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே, ``பால்கரில் 3 பேர் கொல்லப்பட்டது வெட்கக்கேடான செயல். இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் தப்பிக்க முடியாது. அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அதேபோல உண்மைக்குப் புறம்பாக மதச் சாயம் பூசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பால்கர் சம்பவத்தை வைத்து இருசமூகத்தினர் இடையே வன்முறையைத் தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் யாராவது கருத்து பதிவிட்டால் நடவடிக்கை எடுக்க மாநில போலீஸார், சைபர் குற்றப் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

இந்த நிலையில், இந்த மூன்று பேரைக் கொலை செய்தவர்களில் பெரும்பாலானோர் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் என்று மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த் குற்றம்சாட்டி உள்ளார். கொரோனா பரவலுக்கு எதிராக ஒரு பெரும் போரே நடக்கும் இந்தச் சூழலில் இதுபோன்ற அரசியல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்,``இதுவரை இந்தக் கும்பல் தாக்குதல் தொடர்பாக 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சிலர் குற்றம்சாட்டுவதைபோல், இவர்களில் ஒருவர் கூட சிறுபான்மையினர் சமூகத்தைச் சேந்தவர்கள் அல்ல. சி.ஐ.டி தீவிரமாக விசாரித்து வருகிறது. விரைவில் குற்றவாளிகளின் பெயர்களும் வெளியிடப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``மொழிப் பிரச்னையே இந்தக் கொலைக்குக் காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இது மதக் காரணங்கள் எதுவும் இல்லை. ஆனால், சிலர் வேண்டுமென்றே மதச்சாயம் பூசுகிறார்கள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு