தமிழக பி.ஜே.பி. பொறுப்பை கையில் எடுப்பாரா நிர்மலா சீதாராமன்? - பரபர ஆலோசனை | Nirmala seetharaman to lead the Tamilnadu BJP?

வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (01/09/2017)

கடைசி தொடர்பு:15:40 (01/09/2017)

தமிழக பி.ஜே.பி. பொறுப்பை கையில் எடுப்பாரா நிர்மலா சீதாராமன்? - பரபர ஆலோசனை

நிர்மலா சீதாராமன்

ன்னும் சில தினங்களில் மத்திய அமைச்சரவை, மிகப்பெரிய அளவில் மாற்றத்தைக் காண இருக்கிறது. முக்கிய அமைச்சர்களைக் கட்சிப் பணிகளுக்கு அனுப்ப பி.ஜே.பி மேலிடம் திட்டமிட்டு வருகிறது. கூட்டணிக் கட்சிகளை மத்திய அமைச்சரவையில் இணைத்துக் கூட்டணியை வலுப்படுத்தவும் பி.ஜே.பி தலைமை திட்டமிட்டு வருகிறது. மத்திய அரசின் பதவிக்காலம் 2019-ம் ஆண்டோடு முடிவடையும் அதேவேளையில், 2018-ம்  ஆண்டு குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு மத்திய அமைச்சரவையில் மாற்றத்தைக் கொண்டுவர பி.ஜே.பி மேலிடம் திட்டமிட்டு வருகிறது. மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பி.ஜே.பி ஆட்சியில் இருந்தாலும், அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்த கட்சிகளுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அண்மையில் பி.ஜே.பி-யுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். பீகார் அமைச்சரவையில் பி.ஜே.பி-க்கும் இடம் கொடுக்கப்பட்டது. அதற்குப் பிரதிபலனாக மத்திய அமைச்சரவையில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதள கட்சியைச் சேர்த்துக்கொள்ளும் முடிவுக்கு பி.ஜே.பி மேலிடம் வந்துள்ளது.

அதேபோல், தென் மாநிலங்களிலும் கட்சியை வலுப்படுத்த பி.ஜே.பி மேலிடம் திட்டமிட்டு வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க தனது பலத்தை இழந்துவரும் இந்த நேரத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறது. இந்தத் திட்டத்துக்காக மத்திய அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது. தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நிர்மலா சீதாராமன், ஆந்திராவில் வசித்து வருகிறார். அத்துடன், தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையையும் நன்றாக அறிந்தவர். அவர், அ.தி.மு.க-வில் நடைபெற்றுவரும் குழப்பங்களை  முழுமையாக அறிந்தவர் என்றும் பி.ஜே.பி நினைக்கிறது.மேலும், தமிழக பி.ஜே.பி-யின் பொறுப்பாளாராகச் செயல்பட்டுவரும் முரளிதர் ராவ்  பெரிய அளவில் சோபிக்கவில்லை என்ற எண்ணமும் பி.ஜே.பி-க்கு உள்ளது. இந்த நிலையில், நிர்மலா சீதாராமனைக் கொண்டுவந்தால், தமிழக அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றபடி தகுந்த முடிவுகளை எளிதாக எடுக்க முடியும் என்று அந்தக் கட்சியின் மேலிடம் கருதுகிறது.

பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்தாலும், தமிழக விவகாரங்களில்  அவரைக் கொஞ்சம் தள்ளியே வைத்துள்ளது பி.ஜே.பி தலைமை. தமிழகத்தின் அமைச்சர்கள் டெல்லிக்குச் சென்றாலும், நிர்மலா சீதாராமன் வழியாகவே பி.ஜே.பி மேலிடத்தைத் தொடர்புகொள்ளும் சூழ்நிலைதான் தற்போது உள்ளது. நீட் தேர்வு பிரச்னையில் டெல்லி மேலிடத்தைச் சரிசெய்ய தமிழகத்தின் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனைத்தான் முதலில் சந்தித்தார்கள். தமிழக மாணவர்களின் நிலையை அவரும் அறிந்துகொண்டுதான் “இந்தாண்டு நீட் தேர்வில் விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யும்” என்று நம்பிக்கையும் கொடுத்தார். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வேறு நிலைப்பாட்டைத் தெரிவித்ததால், நீட் தேர்வில் தமிழக அரசின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அ.தி.மு.க இரு அணிகளாகப் பிரிந்து இருந்தபோது, இரண்டு அணியின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதில் நிர்மலா சீதாராமன் பங்கு முக்கியமானது. அதேபோல், அவர் அமைச்சர் செங்கோட்டையனைத் தனிப்பட்ட முறையில் சந்தித்ததும் தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

தமிழக அமைச்சர்கள் டெல்லி சென்றால், நிர்மலா சீதாராமனைச் சந்திப்பதை வழக்கமாக்கிவிட்டனர். தமிழகத்தின்  அரசியல் நிலவரங்கள் அவர் மூலமே பிரதமர் அலுவலகத்துக்குச் செல்லும் நிலை தற்போது உள்ளது. இதையெல்லாம் மனதில் வைத்துதான், தமிழக பி.ஜே.பி பொறுப்பாளாராக நிர்மலா சீதாராமனைக் கொண்டுவர பி.ஜே.பி. மேலிடம் திட்டமிட்டு வருகிறது. ஆனால், மத்திய அமைச்சர் பொறுப்பில் அவர் இருப்பதால் அதை ராஜினாமா செய்துவிட்டு, கட்சிப் பொறுப்புக்குத் திரும்ப நிர்மலா சீதாராமன் விரும்புவாரா என்ற சந்தேகமும் உள்ளது.

இன்று காலை டெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் நிர்மலா சீதாராமன் சில முக்கிய நபர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த ஆலோசனையில் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம். கூடுதல் பொறுப்பாக வேண்டும் என்றால் தமிழகத்தின் பொறுப்பாளர் பதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று நிர்மலா சீதாராமனுக்கு ஆலோசனை சொல்லியுள்ளார்கள். அதை நிர்மலா சீதாராமனும் ஆமோதித்துள்ளார். இதனால், மத்திய அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவை மாற்றிக்கொண்டுவிட்டார். இதுகுறித்த தகவலையும் பிரதமர் அலுவலகத்துக்குச் சொல்லியுள்ளார். ஆனால், தமிழகத்தின் பொறுப்பாளர் என்ற பதவியை நிர்மலா சீதாராமனிடம் கொடுக்கும் முடிவில்தான் மத்திய அரசு உள்ளதாகத் தெரிகிறது.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close