வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (01/09/2017)

கடைசி தொடர்பு:17:10 (01/09/2017)

மத்திய அமைச்சரவையில் மாற்றம்?

மத்திய அமைச்சரவையில் மூன்றாவது முறையாக வருகிற ஞாயிற்றுக்கிழமை மாற்றம் செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர்வை மாற்றம்

கோப்புப்படம்


பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி பதவி ஏற்றது. 23 கேபினட் அந்தஸ்து உள்ள அமைச்சர்களும், மத்திய இணை அமைச்சர்களாக 10 பேரும், இணை அமைச்சர்களாக 12 பேரும் அப்போது பதவி ஏற்றனர். அதன் பின்னர், முதல் அமைச்சரவை மாற்றம் 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி நடந்தது. அப்போது 21 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர். (இவர்களில் நான்குபேர் கேபினட் அந்தஸ்து அமைச்சர்கள், மூன்று பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 14 பேர் இணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.) இரண்டாவது முறையாக மத்திய அமைச்சரவை கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி மாற்றப்பட்டது. பிரகாஷ் ஜவ்டேகர் கேபினெட் அந்தஸ்துள்ள அமைச்சராக தரம் உயர்த்தப்பட்டார். இணை அமைச்சர்களாக 19 பேர் பதவி ஏற்றனர். மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சராக ஜவ்டேகர் நியமிக்கப்பட்டதை அடுத்து, ஸ்ம்ருதி இரானிக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பதவி தரப்பட்டது.

தற்போது, 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னர் இறுதியாக மூன்றாவது முறையாக மக்களவை மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில், மத்திய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரதாப் ரூடி ராஜினாமா செய்துள்ளார். மத்திய அமைச்சர் உமாபாரதியும் விரைவில் ராஜினாமா செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சில முக்கிய அமைச்சர்கள் தற்போது கூடுதல் பதவிகளையும் வகித்து வருகின்றனர். இதனால், வருகிற அமைச்சரவை மாற்றத்தில் பல முக்கியத் திருப்பங்கள் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. கூடுதலாக அ.தி.மு.க-வுக்கு இந்த முறை அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற கேள்வியும் பெரிதாக எழுந்துள்ளது.