Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குற்றம் நடந்த ஆசிரமத்தை ரஹீம் மகன் தொடர்ந்து நடத்தவிருப்பது சரியா?

குர்மீத் ராம் ரஹீம் சிங்

வாரிசுகள் தலைமை இடத்தைப் பிடிப்பது அரசியலில், மட்டுமல்லை; ஆசிரமங்களிலும் தொடரும் என்பதை நிரூபித்திருக்கிறது தேரா சச்சா அமைப்பு. ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கவைத்த பெயர் ஹரியானா மாநிலத்தில் இருந்து செயல்பட்டு வரும் 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். அவர் செய்த குற்றங்களுக்காக மக்கள் ஒருபக்கம் அவரைத் திட்டித் தீர்த்தாலும், இன்னொரு பக்கம் அவரை ஆதரிப்போர், அவர் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து வன்முறையில் ஈடுபட்டனர். பாலியல் பலாத்கார வழக்கில் ரஹீம் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அவர் சிறை சென்றதால், அவரின் தேரா சச்சா அமைப்புக்கு அடுத்த தலைமையை யார் ஏற்க வேண்டும் என்ற விவாதங்களும், கூட்டங்களும் நடந்து வந்தன. 

குர்மீத் ராம் ரஹீம் சிங் அமைப்பில் இருந்த இரண்டு பெண்கள் அளித்த பாலியல் புகாரின் பேரில் நடைபெற்ற வழக்கில் சி.பி.ஐ நீதிமன்றம் அவருக்கு இந்தத் தண்டனையை வழங்கி தீர்ப்பளித்தது. இந்நிலையில், அவரின் மகன் ஜஸ்மீத் இன்சான் 'தேரா சச்சா' அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குர்மீத் ராமுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டபோது, அவருடைய வளர்ப்பு மகளும், பெண் துறவியுமான ஹனிபிரீத்தோ, மற்றொரு பெண் துறவியான விபாசனாவோ அந்த அமைப்பில் அடுத்தத் தலைவராகத் தேர்தெடுக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில், குர்மீத்தின் தாய் நசிப் கவுர் 'தேரா சச்சா' அமைப்பின் மத்தியக் குழுக் கூட்டத்தை கூட்டினார். 45 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக்குழுவின் கூட்டம் கடந்த புதன்கிழமை 'தேரா சச்சா' தலைமை இடத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், குர்மீத் ராமின் மகன் ஜஸ்மீத் இன்சான் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜஸ்மீத் இன்சான் பின்னணி?

1984-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி பிறந்தவர் ஜஸ்மீத். ஆறாம் வகுப்புவரை ராஜஸ்தான் மாநிலம் ஶ்ரீகங்காநகர் மாவட்டத்திலுள்ள குருசர் மோடியா என்ற கிராமத்தில் படித்து வளர்ந்தார். இந்தக் கிராமம்தான் குர்மீத் சிங்கின் சொந்த ஊராகும். பின்னர், அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிர்ஸாவுக்குக் குடிபெயர்ந்தனர். மேற்படிப்பு மற்றும் கல்லூரிப் படிப்பு வரை தேரா அமைப்பின் பள்ளி கல்லூரிகளில்தான் படித்தார் ஜஸ்மீத். இவரின் பாதுகாப்புக்காக சேவா சிங் மற்றும் பிரவீன் குமார் என்ற இருவர் இருந்தனர். ஜஸ்மீத்துக்கு 19 வயதில் திருமணம் முடியும்வரை, இவர்கள்தான் உடனிருந்துள்ளனர். 2003-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ஹர்மிந்தர் ஜாஸியின் மகள் ஹுசான்மீட்டை ஜஸ்மீத் திருமணம் செய்துகொண்டார். அப்போதுதான் அவரைப் பற்றி அனைவரும் தெரிந்துகொண்டனர். "இவர்கள் திருமணத்துக்குப் பிறகு, ஒரு பங்களா கட்டுவதற்காக ஆறு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதில், கழிப்பறை மற்றும் குளியல் அறை அமைக்க ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது" என குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

குர்மீத் ராம்

ஹனிபிரீத் மற்றும் விபாசனா

குர்மீத் சிங்கின் வளர்ப்பு மகளான ஹனிபிரீத்தின் இயற்பெயர் பிரியங்கா. அவர் குர்மீத்தைத் தொடர்ந்து, தேரா சச்சா அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுக்கத் தொடங்கினார். தன்னை அவர், 'அப்பாவின் செல்ல மகள்' என்று குறிப்பிட்டுக் கொள்வார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னை "கொடையாளர், நடிகை, இயக்குநர்" என்றும், தன்னுடைய அப்பாவை இயக்குநரில் இருந்து நடிகராக்க முயற்சி செய்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஒரு பெண்ணை ஆணோடு தங்க சிறை விதிகள் அனுமதிக்காது. இருந்தும், சிறைத்துறையினர் ஹனிபிரீத்தை தேரா தலைவரோடு தங்க அனுமதித்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவர் குர்மீத்துடன் விருந்தினர் மாளிகையில் இருந்துள்ளார்.

துறவியான விபாசனாவின் வயது 35. தேரா சச்சா சவுதா அமைப்பில் நடக்க வேண்டிய தினசரி வேலைகளைப் பட்டியலிட்டு வந்தார். அந்த அமைப்பின் 250-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு இவர் தலைமையேற்றிருந்தார். தண்டனையைத் தொடர்ந்து குர்மீத் ராம் சிறை செல்வதற்கு முன்புகூட சில முக்கிய விஷயங்கள் பற்றி ஹனிபிரீத்துடன் கலந்து பேசினார்.

இப்படி ஹனிபிரீத், விபாசனா ஆகிய இருவரும் குர்மீத்துக்கும், தேரா அமைப்புக்கும் முக்கியமான நபர்களாக இருந்த நிலையில், இவர்களில் ஒருவர்தான் நிச்சயம் தேரா சச்சா அமைப்பின் அடுத்தத் தலைவராக பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், குர்மீத்தின் தாயார் ஜஸ்மீத்தை தலைவராக நியமித்துள்ளார். 

'தேரா சச்சா சவுதா' என்னும் அமைப்பை 1948-ம் ஆண்டு, ஷா மஸ்தானா பலுசிஸ்தானி என்பவர் தொடங்கினார். அவரை அடுத்து, ஷாஜி சத்னம் தலைமை பொறுப்பேற்றார். அவர், குர்மீத் சிங்கை தலைவராக நியமித்தார். இப்போது, ஜஸ்மீத் இன்சான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 'தேரா சச்சா' அமைப்புக்கு ரத்த சம்பந்தமான ஒருவர் தலைமைப் பொறுப்பேற்றிருப்பது இதுவே முதல்முறையாகும்.

பாலியல் பலாத்கார குற்றங்களுக்காக தேரா சச்சா அமைப்பின் தலைவரான ஒருவரைக் கைதுசெய்து, அவருக்குச் சிறைத் தண்டனை வழங்கியிருக்கும்போது, அந்த அமைப்புக்குத் தண்டனை பெற்றவரின் மகனே தலைவராக நியமிக்கப்படுகிறார். இதனால், அந்த அமைப்பில் இனிமேலும் தவறு நடக்காமல் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தலைவராகி உள்ள ஜஸ்மீத், அடுத்து என்ன செய்யப்போகிறார்? சர்ச்சைக்குள்ளான ஆசிரமத்தைப் பாதுகாக்க நினைப்பது யார்? இப்படி பல கேள்விகளுக்கு நடுவில் தலைவராகியிருக்கிறார் ஜஸ்மீத்... குற்றம் செய்த நபரை தண்டித்திருக்கும் நீதிமன்றம், குற்றம் நடந்த இடத்தை எப்படி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கிறது?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement