Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமைச்சரவை மாற்றம்: மோடியின் அரசியல் கணக்கா? திறமையான நல்லாட்சியா?

நரேந்திர மோடி

த்திய அமைச்சரவையை பிரதமர் மோடி மாற்றியமைக்க முடிவு செய்துள்ளார். அதன் தொடக்கமாக அமைச்சரவையில் இருந்து சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 

2014-ம் ஆண்டில் பி.ஜே.பி. அறுதிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்ததும், பிரதமர் மோடி பல்வேறு அதிரடியான மாற்றங்களுடன் மத்திய அமைச்சரவையை உருவாக்கினார். மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை பி.ஜே.பி. வழிகாட்டும் குழுவில் உறுப்பினர்களாக்கி, மத்திய அமைச்சரவையில் இடம்பெறச் செய்வதைத் தவிர்த்தார்.

பி.ஜே.பி-யின் வெற்றிக்காக தன்னுடன் சேர்ந்து பாடுபட்ட முன்னாள் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கை உள்துறை அமைச்சராக்கினார். பி.ஜே.பி. மூத்த தலைவர் அருண் ஜேட்லி, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த நிதின் கட்கரி, சிவசேனாவில் இருந்து பி.ஜே.பி-க்கு வந்த சுரேஷ் பிரபு, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்மிரிதி இரானி, ஹைதராபாத்தில் இருந்து டெல்லியில் செட்டிலான நிர்மலா சீதாராமன் என்று அமைச்சரவையில் பல்வேறு தரப்பிலானோரை நியமித்தார். கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கரை பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமித்தார். தற்போது கோவாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின், பாரிக்கர் மீண்டும் கோவா முதல்வராகி உள்ளார். 

மத்திய அமைச்சரவை கடைசியாக, 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் மாற்றியமைக்கப்பட்டது. மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு துறைகளில் தேர்தலின் போது சொல்லப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. இதுஒருபுறமிருக்க, விரைவில் கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மத்திய அமைச்சரவையில் தற்போது மீண்டும் மாற்றம் செய்ய மோடி முடிவு செய்துள்ளார். ஏற்கெனவே செய்யப்பட்ட அமைச்சரவை மாற்றம், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அந்த இரு மாநிலங்களிலும் தற்போது பி.ஜே.பி ஆட்சியைப் பிடித்துள்ளது.

அதேபோல், இந்த முறையும், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அமைச்சரவை மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பு செப்டம்பர் 2-ம் தேதி (சனிக்கிழமை) மாலை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

சட்டப்பேரவை நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையிலும், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கும் வகையிலும் இந்த மாற்றம் அமையுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. மோடியின் அமைச்சரவை மாற்றம் தொடர்பான எண்ண ஓட்டத்தில் என்ன இருக்கிறது என்பதை இப்போதே கணிப்பது சற்றே கடினம்தான் என்றாலும், பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படும் என்பது உறுதியான தகவலாக உள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்பார் என்று பல காலமாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அமித் ஷா மத்திய அமைச்சராகும் பட்சத்தில் பி.ஜே.பி-க்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது அமைச்சர்களாக இருப்பவர்களில் செயல்பாடு இல்லாத சிலர், வேறு துறைகளுக்கு மாற்றப்படுவதோடு, சிலர் கட்சிப் பணிக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது.

நரேந்திர மோடிகடந்த முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது, ஐந்து அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டார்கள். இரண்டு அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன. புதிதாக 19 இணை அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர். எனினும், புதிதாக அமைச்சரவையில் இடம்பெற்றவர்களும் பெரிய அளவில் தங்கள் துறைகளில் செயல்பாடுகளை நிறைவேற்றவில்லை என்று மோடி அதிருப்தியில் இருப்பதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவிர, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வளர்ச்சி விகிதம் பாதிப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மக்களிடையே அதிருப்தி, உத்தரப்பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழப்பு, தொடரும் ரயில் விபத்துகள் போன்ற பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகவும் மத்திய அமைச்சரவை மாற்றம் அமையும் என்று மோடி நம்புகிறாராம்.

எனவே, கடந்த முறை அமைச்சரவை மாற்றத்தின்போது மேற்கொள்ளப்பட்ட உத்திகளையே இம்முறையும் மோடி கடைப்பிடிப்பார் என்று கருதப்படுகிறது. அந்த வகையில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் குஜராத், இமாச்சலப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம்பெறக்கூடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

கல்வித்துறையில் சீர்திருத்தம், பிரதமர் அலுவலக அமைச்சர்களின் பணிச்சுமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் அமைச்சரவை மாற்றம் இருக்கக்கூடும் என்றும் தெரியவந்துள்ளது.

மீண்டும் ஒருமுறை சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு அமைச்சரவையில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? அல்லது திறமையான நபர்களை அமைச்சர்களாக்குவதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் எஞ்சியுள்ள இரண்டு ஆண்டுகால ஆட்சியை செம்மைப்படுத்தும் மோடியின் முயற்சியாக இருக்குமா என்பது, மத்திய அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகான நடவடிக்கைகளின் மூலமே தெரியவரும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement