வெளியிடப்பட்ட நேரம்: 10:41 (04/09/2017)

கடைசி தொடர்பு:11:34 (04/09/2017)

ஆந்திர நதிநீர் இணைப்புத்திட்டம் வெற்றுக்கூச்சலா... வெற்றிப்பாய்ச்சலா? - அத்தியாயம் 2

நதிநீர்

அத்தியாயம் - 1

                                                   அத்தியாயம் - 2 -     " பெத்த " நாயுடு போலவரம்... "சின்ன" நாயுடு பட்டீசீமா!!!

திடீரென பரபரப்பு தொற்றிக் கொண்டது. அங்கு தள்ளு வண்டியில் சர்பத் விற்றுக் கொண்டிருந்தவர் வேகவேகமாக தன் தள்ளு வண்டியைத் தள்ளிக்கொண்டு ஓரம் ஓடினார். ஒரே நிமிடத்தில் மொத்த இடமும் அமைதியானது. போலீஸ்காரர்கள் கேட்டைத் திறந்துவிட்டு ஓரம் நின்றனர். முதலில் சில கார்கள். அதைத் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட சாம்பல் நிற டாடா சஃபாரிக்கள் படுவேகமாகக் குறுக்கும், நெடுக்குமாக நுழைந்தபடியே வந்தன. ஒரு நொடி இந்தப் பக்கம் இருக்கும் வண்டி, அடுத்த நொடி மற்றொரு மூலைக்குச் சென்றுவிடுகிறது. இப்படியாக அத்தனை கார்களுமே சர்ப்ப வியூகத்தில் சீறிப் பாய்ந்தபடியே நுழைந்தன. அவ்வளவு தான். மீண்டும் எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பின.  நாம் நின்றுகொண்டிருப்பது ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதி நகர். தலைமைச் செயலகத்திற்குள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நுழைந்த காட்சிதான் அது. சரியாக ஒரு மணி நேரம் கழித்து, முதல்வரின் உதவியாளர் நமக்கு போன் செய்தார். 

"சாருக்கு இந்த வாரம் முழுக்க அப்பாயின்மென்ட்ஸ் நிறைஞ்சு இருக்கு. நீங்க வந்தது குறித்து மகிழ்ச்சிய தெரிவிச்சாரு... நீர்வளத் துறை அமைச்சர சந்திக்க உங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுது. ரெண்டு நாள் மட்டும் காத்திருங்க..." என்று சொன்னார். 

" நன்றி சார்..." சொல்லிவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே நின்று கொண்டிருந்தோம். சர்பத்தின் ஆரஞ்சு நிறம் "தாகம் இல்லாட்டியும் பரவாயில்லை என்னைக் கொஞ்சம் சுவைத்துப் பார் " என்று சொல்வது போல் இருந்தது. தலைமைச் செயலகத்தின் வாசலிலேயே ஒரு சர்பத் வண்டி நின்று கொண்டிருந்தது சற்று ஆச்சர்யமாகத் தானிருந்தது. அப்போது அங்கு சஃபாரி சூட்டில், கையில் க்ரீம் நிற "லேப்ரடார் " மோப்ப நாயைப் பிடித்தபடியே கடுகடுப்புடன் வந்து அமர்ந்தார் ஒருவர். 

" பதினைஞ்சு பேர் இருக்க வேண்டிய இடத்துல என்னை ஒருத்தன மட்டும் போட்டு சாவடிக்குறானுங்க. காலையில 6 மணிக்கு வர்றது, நைட்டு 12 மணிக்குப் போர்றது. நான் என்ன மனுஷனா இல்ல வேறெதாவதா ? " என்று அந்த சர்பத் கடைக்காரரிடம் பொருமித் தள்ளிக் கொண்டிருந்தார் முதல்வரின் பாதுகாப்புப் பிரிவின் " டாக் ஸ்குவாடில்" ( Dog Squad ) இருக்கும் அவர்.  கடுகடு முகத்துடன் நம்மைப் பார்த்து "யார் ? " என்று கேட்டார். நாம் பதில் சொன்னதும், 

"இதோ இப்ப நாம நின்னுட்டிருக்கும் இடமே 'ஃப்ளட் ப்ளைன் ' (Flood Plain) தான். அதாவது வெள்ளம் வந்து தேங்கும் பகுதி. இதன் மேல் தலைமைச் செயலகத்தை அமைக்கக் கூடாதுன்னு கூட இந்தப் பகுதியில நிறைய போராட்டங்கள் நடந்தது. ஆனா, யாராலும் ஒண்ணும் பண்ண முடியல..." என்று அவராக சொல்லிவிட்டு, தன் நாயை இழுத்துக் கொண்டு கிளம்பினார்.

அடுத்ததாக தெலுங்கு தேசம் கட்சியில் பல தடவை எம்.எல்.ஏவாகவும், எம்.பி ஆகவும், மாநில அமைச்சராகவும் இருந்த வத்தே ஷோபனத்ரிஷ்வர் ராவ் அவர்களைச் சந்திக்க, போனில் தொடர்பு கொண்டோம். ’உடனே வரலாம்’ என்று அனுமதி கிடைத்தது. அமராவதியிலிருந்து அவர் இருக்கும் உய்யிரு எனும் கிராமத்தைச் சென்றடைய 75கிமீ தூரம் பயணிக்க வேண்டும். சாலையும் சரியில்லாததால் குறைந்தது 2 மணி நேரமாவது ஆகும். அந்தப் பயண நேரத்திற்குள் போலவரம் மற்றும் பட்டீசீமா குறித்த சிறு அறிமுகங்களைத் தெரிந்து கொள்ளலாம். 

" ஒரு பக்கம் சீறிப்பாய்ந்து ஓடும் கோதாவரி  கடலில் கலக்கிறது. மறு பக்கம் ஒழுகி, ஒடிந்து ஓடும் கிருஷ்ணாவில் நீர் வரத்து மிகக் குறைவு. சரி... இதற்கு என்ன  தீர்வு ? "

ஆந்திராவுக்கு உயிராதாரமாக இருப்பது இரண்டு நதிகள். கிருஷ்ணா மற்றும் கோதாவரி. இதில் கிருஷ்ணா, மகாராஷ்டிராவின், சதாரா மாவட்டத்திலிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து உருவாகி 1400கிமீ தூரம் பயணித்து, ஆந்திராவிற்குள் நுழைந்து இறுதியாக வங்கக்கடலில் கலக்கிறது. இதில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்கள் சிறிதும் பெரிதுமாக 9 நீர்த் திட்டங்களை ( அணைகள், நீர்த் தேக்கங்கள் போன்றவை ) கட்டமைத்திருக்கின்றன. இதனால், ஆந்திராவின் கிருஷ்ணா டெல்டா பகுதிக்கு வரும் தண்ணீரின் அளவு மிகவும் குறைவு. விவசாயத்தை நம்பியிருக்கும் இந்தப் பகுதிகள், ஒவ்வொரு வருடமும் வறட்சியில் வெடித்துச் சிதறுகின்றன. கிருஷ்ணா கொஞ்சம் சாந்தமானவள். 

மகாராஷ்டிராவின், நாசிக் மாவட்டத்திலிருக்கும் திரிம்பகேஷ்வர் பகுதியில், 1067மீட்டர் உயரத்தில் ஊற்றெடுக்கும் கோதாவரி 1465கிமீ பயணித்து, ஆந்திராவில் இறுதியாக வந்து தன் ஓட்டத்தை முடித்துக்கொள்கிறாள். கிருஷ்ணா போல் அல்ல கோதாவரி. இதன் மீது அத்தனை பெரிய நீர்த்திட்டங்கள் ஏதுமில்லை என்பதால் ஆர்ப்பரித்து காட்டுத்தனமாக சீறிப்பாய்ந்து ஓடும் குணம் கொண்டவள் கோதாவரி. வருடத்திற்கு கிட்டத்தட்ட மூன்றாயிரம் டிஎம்சி அளவிற்கான கோதாவரி நீர் கடலில் கலக்கிறது. 

                       நதிநீர்

அத்தியாயம் - 1

ஒரு பக்கம் சீறிப்பாய்ந்து ஓடும் கோதாவரி  கடலில் கலக்கிறது. மறு பக்கம் ஒழுகி, ஒடிந்து ஓடும் கிருஷ்ணாவில் நீர் வரத்து மிகக் குறைவு. இதற்கு என்ன தீர்வு? பழைய ராபின்ஹூட் கதைதான். இருக்குமிடத்திலிருந்து எடுத்து, இல்லாத இடத்திற்கு கொடுப்பது. அந்தக் கால வெள்ளையர் ஆட்சியின் போதே போலவரம் நீர் இணைப்புத் திட்டத்திற்கு திட்டம் தீட்டப்பட்டது. பல மலைகளைக் குடைந்து, மிகப் பெரிய நீர்த் தேக்க அணையைக் கட்டி அதில் சேமிக்கப்படும் கோதாவரி நீரை புவியீர்ப்பு விசையின் அடிப்படையில், இரு கால்வாய்களின் வழி கொண்டு சென்று கிருஷ்ணாவில் சேர்ப்பதுதான் இந்தத் திட்டத்தின் அடிப்படை. ஆனால், இதை சாத்தியப்படுத்துவது அத்தனை எளிதான காரியம் அல்ல.

போலவரம் நீர் இணைப்புத் திட்டத்தின் வேலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. போலவரம் திட்டம் முழுமையாக முடிய இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில் அதற்கு மாற்றாக பட்டீசீமா திட்டத்தைத் தொடங்கினார் சந்திரபாபு நாயுடு. பட்டீசீமா எனும் கிராமத்தில் 24 பம்ப்புகள் கொண்ட ஒரு நீரேற்று நிலையத்தை ஒரு வருட காலத்திற்குள் கட்டினார். இது லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றது. கோதாவரி ஆற்றிலிருந்து இந்த பம்ப்புகள் நீரை உறிஞ்சி எடுத்து அதை 12 குழாய்களின் வழியாக கால்வாயில் சேர்க்கும். அந்தக் கால்வாய்கள் நீரை கிருஷ்ணாவில் கொண்டு சேர்க்கும். 

போலவரம் "பெத்த" நாயுடு என்றால் பட்டீசீமா "சின்ன" நாயுடு.  போலவரம் முழுமையாகத் தயாரானதும் பட்டீசீமாவின் தேவை இருக்காது. இந்த பட்டீசீமா நீரேற்று நிலையத்தை கட்டி முடித்ததை வைத்துதான் சந்திரபாபுவின் சரித்திர சாதனைகள் என்ற பெயரில் விளம்பரங்களும் மீம்களும் சமூகவலைதளங்களிலும் செய்திகளிலும் கொடிகட்டிப் பறந்தன. இதெல்லாம் அரசின் வேலைகளா அல்லது அரசின் ரசிகர்கள் செய்ததா என்ற யூகத்தை உங்களிடமே விட்டுவிடுகிறோம். அதே சமயத்தில், அரசியல் விளம்பரங்களில் மோடிக்கே நாயுடுதான் முன்னோடி என்பதையும் இங்கு பதிய விரும்புகிறேன். 

"Our CM is the Best CM in the World " என்ற பச்சை நிற பேனரைக் கடந்து உய்யிரு எனும் அந்த அழகிய கிராமத்திற்குள் நுழைந்தோம். தோட்டங்களால் நிறைந்திருந்த அந்த வீட்டில் பழைய சாய்வு நாற்காலியில் வந்து உட்கார்ந்தார் வத்தே ஷோபத்ரிஷ்வர் ராவ். அவரின் வலது கை நிற்காமல் ஆடிக் கொண்டேயிருந்தன. நல்ல உயரம். சுருங்கிய முகம். 

"சார்... கட்சியின் சார்பா இல்லாம இந்த நதிநீர் இணைப்புத் திட்டத்தோட உண்மை நிலையைப் பற்றி நீங்க பேசணும்..." என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.

"நான் கட்சியைவிட்டு நீங்கி 5 ஆண்டுகளுக்கும் மேலாகிறது தம்பி... முழுக்க முழுக்க மக்கள் பணிகளில் மட்டும்தான் ஈடுபட்டுள்ளேன். இதோ என் உடலும் தளர்ந்துவிட்டது. இருக்குற கொஞ்ச நாளைக்காவது உண்மையா மக்களுக்கு உழைச்சுட்டுப் போயிடணும். கட்சியில இருந்தா அப்படி எல்லாம் இருக்க முடியாது பாருங்க..." என்று சொன்னவர் திட்டத்தின் அடிப்படைகளை விளக்கிவிட்டு,அதன் சிக்கல்களைப் பேசினார்.

நதிநீர்"பட்டீசீமா மொத்த ஆந்திரத்தின் வறட்சியைத் தீர்த்துவிட்டது என சொல்வது மிகையான பிரசாரம். ஆந்திரத்திற்கு பட்டீசீமா திட்டம் அவசியமற்றது. எங்களுக்குத் தேவை போலவரம்தான். தன் சுயநலத்திற்காகவும், சுயவிளம்பரத்திற்காகவும் தான் சந்திரபாபு நாயுடு பட்டீசீமா திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். மக்களின் வரிப் பணத்தை வீண் விரயமாக்கியிருக்கிறார். முதலில் பட்டீசீமா திட்டத்திற்கான செலவு  1300 கோடி ரூபாய் என்று அறிவித்திருந்தார். பொதுவாக ஒரு அரசு , ஒரு நிறுவனத்திற்கு டெண்டர் விடும்போது 5 சதவிகிதம் வரைதான் அந்த நிறுவனம் லாபத் தொகையை எடுக்கலாம். ஆனால், சந்திரபாபு நாயுடு வெளிப்படையாக இந்தத்திட்டத்தை சீக்கிரம் முடிப்பவர்களுக்குக் கூடுதலாக 17.25 சதவிகிதம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனால், 5 சதவிகித அளவில் லாபம் பார்க்க வேண்டிய கான்ட்ராக்டர்கள், 22 சதவிகிதம் வரை லாபம் பார்த்தார்கள். திட்டச் செலவும் 1600 கோடியைத் தாண்டிச் சென்றது. இதற்கு பதிலாக, இந்தப் பணத்தையும் போலவரம் திட்டத்திலேயே முதலீடு செய்து, அதைத் துரிதப்படுத்தியிருக்கலாம். 

பட்டீசீமா கிருஷ்ணா டெல்டா விவசாயிகளுக்குப் பெரியளவில் கைகொடுக்கவில்லை. அரசாங்கம் சொல்லும் டெல்டா பகுதிகளில் வழக்கமாகவே விவசாயத்திற்கு நீர் இருக்கத்தான் செய்கிறது. நீர்வரத்தின் காலதாமதம்தான் அங்கு பிரச்னையாக இருக்கிறது. கிருஷ்ணா நீர் அந்தப் பகுதிகளில் மே மாத இறுதியிலேயே வந்தால்தான், அவர்கள் பயிரிட்டு நவம்பர் மாதத்திற்கு முன்னரே அறுவடை செய்ய முடியும். ஆனால், தற்போதைய நிலையில் ஜூலை மாத காலத்தில் கிருஷ்ணா வருகிறது. இந்த சமயத்தில் பயிரிட்டால், நவம்பரில் வரும் புயல் மொத்த பயிர்களையும் சேதப்படுத்திவிடும். இந்தப் பிரச்னையை பட்டீசீமா ஓரளவிற்குக் குறைத்திருக்கிறது. ஆனால், இன்றும் கிருஷ்ணா டெல்டாவின் கடைப் பகுதிகளில் விவசாயத்திற்கான நீரில்லாமல், பலரும் விவசாயத்தைக் கைவிட்டு வேறு தொழில்களுக்கு நகரும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதானிருக்கின்றன. " 

"ஆனால், இரண்டு நதிகளையும் ஒன்றிணைத்த போது, ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததாக ஒரு செய்தி கேள்விப்பட்டோமே? "

" ம்ம்ம்... மறைப்பதிற்கில்லை. அது உண்மைதான். ஆனால், அது ஒன்றும் பெரிய பிரச்னை இல்லை. கொஞ்ச நாள்களில் உயிரினங்கள் அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு பழகிவிடும்..." என்று சொல்லி நமக்கு விடை கொடுத்தார். 

அடுத்த இலக்கு எங்கு என்பது தெரியாமல் பயணித்துக் கொண்டிருந்த அந்த இரவு வேளையிலொரு கேள்வி மட்டும் எங்களைத் துளைத்துக் கொண்டேயிருந்தது. அது: ”நீர் இணைப்புத் திட்டத்தின் அரசியல் பிரச்னைகளைப் பேசும் யாருமே அதனால் ஏற்படும் சூழலியல் பிரச்னைகளைப் பேசவில்லை. ஒருவேளை இந்தத் திட்டங்களினால் இயற்கைக்கு எந்த இடையூறுமே நடக்காதோ?” 

இந்தச் சந்தேகத்தைத் தீர்க்க இந்தியாவின் "தண்ணீர் மனிதன் " என்று போற்றப்படும் ராஜேந்தர் சிங்கைத் தொடர்பு கொண்டோம்.

"ஆமாமா நதிகளை இணையுங்க, மலைகள உடையுங்க, இருக்குற மொத்த தண்ணியவும் பம்ப் போட்டு இழுத்திடுங்க, மண்ண திருடுங்க... ஆனா, இயற்கை எதுவும் ஆகாம அப்படியே நல்லா இருக்கும்" என்று சொன்னவர் ”நாளை நான் ஆந்திராவின் விஜயவாடாவிற்குத்தான் வருகிறேன். உங்களை அங்கு சந்திக்கிறேன்” என்று சொல்லி போன் வைத்தார். 

ராஜேந்தர் சிங்கை சந்திக்க வேண்டும். அதற்கு முன்னர் போலவரம், பட்டீசீமா பகுதிகளைப் பார்வையிட அனுமதி வாங்கிப் பார்க்க வேண்டும். அதற்கு முன்னர் சாப்பிட வேண்டும் என்று அந்த ரோட்டுக் கடையில் நிறுத்தினோம். 

"பாட்டில் நீலு காவாலா ? " என்று அந்த அக்கா கேட்டார். 

"இல்லை... வேண்டாம் சாதா தண்ணியே தாங்க..." என்று  சொன்னதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் அந்த பாட்டிலைக் கொண்டு வந்து டேபிளில் வைத்தார்.

" கிருஷ்ணா மினரல் வாட்டர் " என்று அதில் எழுதியிருந்தது. 
                                                                                                                                                                                                                   ( உண்மை தேடலாம் ... )                                                                                                                                  
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்