வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (02/09/2017)

கடைசி தொடர்பு:19:40 (02/09/2017)

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: நளினி சிதம்பரம் வீட்டை முற்றுகையிட்ட இளைஞர்கள்!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை கல்லூரி சாலையில் உள்ள நளினி சிதம்பரத்தின் வீட்டை ’தமிழ்நாடு இளைஞர் கட்சி’யைச் சேர்ந்த இளைஞர்கள் முற்றுகையிட்டனர்.

நீட் எதிர்ப்பு

அரியலூர் அனிதாவின் பெயரை உச்சரித்தபடி தமிழகமே போராட்டக்களமாக மாறியுள்ளது. அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டும்,  நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும்  நடக்கும் தொடர்போராட்டங்களால் விழிபிதுங்குகிறது தமிழகம்.

அரசுப்பள்ளியில் படித்து, 1176 மதிப்பெண் எடுத்த ஏழை மாணவி அனிதாவின் மருத்துவக் கனவை மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வு பறித்தது. மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்த விரக்தியில், மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணத்துக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்கக் கோரி, சென்னையில் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

நீட் தேர்வுக்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்து ‘தமிழ்நாடு இளைஞர் கட்சி’ சார்பில் இளைஞர்கள் நளினி சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட்டனர். சென்னை, நுங்கம்பாக்கம் அருகிலுள்ள கல்லூரி சாலையில் அமைந்துள்ள நளினி சிதம்பரத்தின் வீட்டுக்கு தற்போது போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.