வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (03/09/2017)

கடைசி தொடர்பு:15:40 (03/09/2017)

பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அரசு கலந்து ஆலோசிக்கவில்லை : மனம் திறக்கிறார் ரகுராம் ராஜன்!

’பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கியிடமோ, அப்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகிய என்னிடமோ அரசு கலந்து ஆலோசிக்கவில்லை’ என மனம் திறந்துள்ளார் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.

ரகுராம் ராஜன்

இந்திய ரிசர்வ் வங்கியின் 23-வது ஆளுநராக கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையில் பதவி வகித்து வந்தவர் ரகுராம் ராஜன். ரகுராம் ராஜனின் மூன்று ஆண்டுகால பணி நிறைவடைந்து கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ம் தேதி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பல்வேறு கட்டங்களுக்கும் முன்னெடுத்துச் சென்ற ரகுராம் ராஜன் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாளையுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

இந்தியாவில் பலத்த சர்ச்சைகளுக்கு இதுநாள் வரையில் உள்ளாகி வரும் ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை’ ரகுராம் ராஜனின் ஆளுநர் பதவிக்காலத்திலேயே நடைபெற்றது. அரசு, மக்கள் எனப் பல கட்டங்களிலும் விமர்சனங்களைச் சந்தித்த ரகுராம் ராஜன் தற்போது அந்த ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை’ குறித்தே வெளிப்படையாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.

விரைவில் வெளியாகவிருக்கும் அவரது நான்காவது புத்தகமான ‘'I Do What I Do: On Reforms, Rhetoric and Resolve' குறித்து பேசிவருகிறார் ரகுராம் ராஜன். அதில், “பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அரசு ஒருபோதும் ரிசர்வ் வங்கியிடம் முறையாகக் கலந்து ஆலோசிக்கவில்லை. இந்த நடவடிக்கை மூலம் நாடு சந்திக்கவிருக்கும் குறுகிய கால பிரச்னைகள் குறித்தும் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கான நீண்ட கால ஆலோசனை குறித்தும் மத்திய அரசிடம் வாய்வழித் தகவல்கள் தந்த போதும், அந்தக் கருத்துகள் ஏதும் ஈடேறவில்லை; எனக் கூறியுள்ளார்.

மேலும், வெளியாகவிருக்கும் ரகுராம் ராஜனின் புத்தகம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த முழு அலசலாக இருக்கும் எனக் கருதுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.