Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”பாகிஸ்தானாக மாறிவருகிறதா இந்தியச் சூழல்?” - அருணா ராய் பேட்டி

ட்சிப் பணியில் இருப்பவர்களால் மட்டும் தனித்து எதையும் சாதித்துவிட முடியாது, மக்களுடன் சேர்ந்து இயங்கினால் மட்டுமே அவர்களால் எதையும் கட்டமைக்க முடியும் என்கிறார் அருணா ராய். தனது இருபத்து எட்டு வயதில் தான் ஆறு வருடங்கள் பதவிவகித்த இந்திய ஆட்சிப் பணியை உதறித்தள்ளிவிட்டு மக்களுக்காக இயங்கக் களமிறங்கியவர். மஸ்தூர் கிஸான் சக்தி கேந்திரா என்ற அமைப்பை நிறுவி அதன் வழியாக அரசாங்க ஆவணங்கள் தொடர்பான மக்களுக்குத் தெளிவில்லாத கேள்விகளை முன்வைக்கத் தொடங்கினார். விளைவு 2005ம் வருடம் அப்போது இருந்த காங்கிரஸ் அரசால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வரையறுக்கப்பட்டது. அண்மையில் தமிழகம் வந்திருந்த அருணா ராய்,  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்  தற்கால தேவை குறித்துப் பேசினார். 

அருணா ராய்

தாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக நிறைய ஆர்.டி.ஐ.களை தாக்கல் செய்துள்ளீர்கள் என்கிற அடிப்படையில்... தற்போது ஜந்தர் மந்தரில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

“ உண்மையில் அது முக்கியமான அரசியல் பிரச்னையாகப் பார்க்கப்பட வேண்டும். ஆனால் தனது மாநிலத்தில் வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த ஹர்திக் பட்டேல் என்பவர் அனைத்து விவசாயிகளை ஒன்றினைத்து கூட்டம் கூட்டியபோது அவர்களைக் கைது செய்யச் சொன்னவர் நம் நாட்டின் பிரதமர். அதனால் இந்த பிரச்னை கவனிக்கப்படாததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.''     

ஆனால் வடஇந்தியாவில் இருக்கும் சூழலும் தென்னிந்தியச் சூழலும் ஒன்றில்லையே?

''இரண்டும் ஒன்றில்லைதான், ஆனால் அங்கே நிலைமை மோசமாகிவிட்டது, மதச்சார்பு அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ஸின் ஆயத்தக் களம் அதுதான். எதிர்காலத்தில் தெற்கு இப்படித்தான் ஆகும் என்பதற்கான சாட்சியமாகத்தான் வடமாநிலங்கள் மாறிவிட்டிருக்கின்றன. அதைப் பார்த்து இங்கே தெற்கே மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்....அங்கே மாடுகளுக்காக மனித உயிர்களைக் கூட்டமாக வந்து கொன்றுகொண்டிருக்கிறார்கள், அண்மையில் ராஜஸ்தானில் சூனியக்காரி என்று கூறி ஒரு தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தி மரத்தில் கட்டிவைத்து கூட்டமாகத் தாக்கினார்கள். ஆனால் இந்த நாட்டில் தலித்களே இல்லை என்று என்னிடம் வாதம் செய்தார் மத்திய மந்திரி பியூஷ் கோயல்.  இப்படி கும்பலாகச் சென்று தாக்குவதற்கு சற்றும் சலைத்தது அல்ல இங்கே தெற்கெ நடக்கும் சாதி ஆணவப் படுகொலைகள். இப்படியான சமூக சீர்கேடுகள் அரசின் பார்வைக்கு வராமல் நிகழ வாய்ப்பில்லை. 
ஒரு கையால் அரசியலமைப்பை நொறுக்கிவிட்டு மற்றொரு கையால் அம்பேத்காரைத் தூக்கிப் பிடிப்பதில் எவ்வித பயனும் இல்லை.''  

இது போன்ற சாதி ஆணவப் படுகொலைகளுக்கும், கூட்டமாக நடத்தப்படும் தனிமனித வன்முறைத் தாக்குதல்களுக்கும் தனிச்சட்டம் தேவை என்று கருதுகிறீர்களா? 

''இருக்கும் சட்டங்களே இங்கே பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்  போதுமானது. ஆனால் இங்கே நிர்வாகம் சீர்கேடு அடைந்துள்ளதுதான், சட்டங்களும் செயலற்றுப் போவதற்குக் காரணம். அதனால் அரசு நிர்வாகத்தை சீர்செய்வதே முதல் தேவையாகிறது.'' 

ஜனநாயகத்தை மீட்டெடுப்பது என்பதை மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறீர்கள், நடைமுறையில் அது எப்படிச் சாத்தியப்படும்?

''வரலாற்றை தெரிந்துகொள்ளவில்லை என்றால் நமது எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும். பள்ளிகள் இங்கே கற்பிப்பது என்ன என்கிற கேள்வி எழுகின்றது. காந்தி, அம்பேத்கர் மற்றும் பகத்சிங் ஆகியோரை பள்ளிக்கூடங்களின் வழியாக மறுவாசிப்பு செய்வது அவசியமாகிறது. அம்பானியும் அதானியும் மட்டுமே இந்தியா இல்லை. இந்தியா என்னும் கட்டமைப்பை உடைக்கும் எதையும் அரசியல், பண்பாட்டு எல்லைகளில் மட்டுமல்லாமல் பொருளாதார எல்லையில் எதிர்த்தால் மட்டுமே முழுமையாக மக்களைக் காப்பற்ற முடியும்.'' 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தற்காலத் தேவை என்ன?

“எனக்குப் பாகிஸ்தானில் சில கவிஞர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள்.  அண்மையில் அவர்களில் ஒருவரான ஃபெமிதா ரியாஸ் ஒரு கவிதை எழுதியிருந்தார், “ நீங்களும் எங்களைப் போல ஆகிவிட்டீர்களே...” என்கிற ஒற்றை வரிக் கவிதைதான் அது. இந்தியா, மிகவும் அழகான நாடாக இருந்தது. ஆனால் அது தற்போது அப்படியில்லை என்பது வருத்தமளிக்கிறது. வாழத் தகுதியற்ற எங்கள் பாகிஸ்தான் போல் ஆகிவிட்டிருக்கிறது என்றார்.  லண்டன் பொருளாதாரப் பள்ளியில் ஒரு கருத்தரங்கம் நடந்தது,”இந்தியாவிற்கு தற்காலச் சூழலில் அரசியலமைப்பே தேவையில்லை” என்பதே அந்த கருத்தரங்கத்தின் விவாதப் பொருள். காரணம், நாம் விடுதலைப் பெற்றதும் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாகதான் நாம் உருவாகிவந்தோம், ஒவ்வொரு தனிமனிதனும் தான் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம், கடவுள் நம்பிக்கை அற்றவராகவும் இருக்கலாம் அதற்கு அரசியலமைப்புச் சட்டம் முழு உரிமை அளிக்கின்றது. அதே சமயம் அரசியலமைப்பானது எந்தவித மதச்சார்பு நிலையும் எடுக்காது என்பதே மதச்சார்பற்ற இந்திய நாட்டின் அடிப்படை கட்டமைப்பு. இன்றைய சூழலில் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்கிற முப்பரிமாணமும் இங்கே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானைப் போலவே மாறிக் கொண்டுவருகிறது.  அதனால்தான் என் பாகிஸ்தானிய கவி நண்பர் அப்படியாக எழுதினார், லண்டன் பொருளாதாரப் பள்ளியில் அந்த தலைப்பு விவாதிக்கப்பட்டது. இங்கே தற்போது நிலவிவரும் மதச்சார்புத் தன்மையை அவர்கள் மக்களின் பொருளாதாரத்தின் மீதுதான் கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே பொருளாதாரத்தை, நம் கையில் ஆயுதமாக எடுத்தால் மட்டுமே இந்த சூழலில் இருந்து தப்பிக்க முடியும் இங்கே 29 மில்லியன் பேர் வரை வேலைவாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அரசோ வேலைவாய்ப்பு நிறைய அளித்திருப்பதாகக் கூறுகிறது. இது போன்ற முரண்பட்ட தவறான தகவல்களை களைத்தெறிய தகவல் அறியும் உரிமை சட்டம் தேவையாய் இருக்கிறது. இந்த ஆபத்தான சூழலில் காங்கிரஸ் இடதுசாரிகள் என அனைத்து தரப்புமே தேவையான செயல்பாடுகளற்று அமைதியாக இருக்கிறது, இந்தச் சூழலை காப்பாற்ற மக்கள் அமைப்புகளால் மட்டுமே சாத்தியப்படும்”.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement