பணமதிப்பு நீக்கம் குறித்து கேள்வியெழுப்பும் ரகுராம் ராஜன்... பதிலளிப்பாரா மோடி? | Raghuram Rajan warned Narendra Modi against demonetisation

வெளியிடப்பட்ட நேரம்: 07:31 (05/09/2017)

கடைசி தொடர்பு:07:31 (05/09/2017)

பணமதிப்பு நீக்கம் குறித்து கேள்வியெழுப்பும் ரகுராம் ராஜன்... பதிலளிப்பாரா மோடி?

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அதிகம் பேசியதில்லை. இதனால், அவரைப் பிரதமர் மோடியும், பா.ஜ.க-வினரும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால், இன்று பிரதமர் மோடியும் எந்த ஒரு முக்கிய பிரச்னைக்கும் பதிலளிக்காமல் மெளனம் சாதிப்பது சரிதானா?

மோடி

இந்திய ரிசர்வ் வங்கியின் 23-வது கவர்னராக (2013 - 2016 ) பதவி வகித்து வந்தவர் ரகுராம் ராஜன். இவருடைய பதவிக் காலத்தில் இருக்கும்போதே பணமதிப்பு நீக்கம் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக பேசப்பட்டது. ஆனால், `பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கியிடமோ, அப்போதைய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஆகிய என்னிடமோ அரசு கலந்து ஆலோசிக்கவில்லை’ என ரகுராம் ராஜன் கருத்துத் தெரிவித்துள்ளார். 

பணமதிப்பு நீக்கம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,"பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் சாதகங்களை விட பாதகங்களே அதிகம். பணமதிப்பு நீக்க நடவடிக்கை எதிர்காலத்தில் சில நன்மைகளை அளித்தாலும் அதன் பாதிப்புகளே அதிகமாக இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் பணமதிப்பு நீக்கத்தால் பொருளாதாரம் வெற்றியைப் பெறவில்லை. ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 1 சதவிகிதம் முதல் 2 சதவிகிதம் வரை சரிந்திருக்கிறது. பணத்துக்காகப் பல கோடி மக்கள் வரிசையில் காத்திருந்தனர். புதிதாக அச்சடிக்கும் கரன்ஸிகளுக்கு ஆகும் செலவு, பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளை வங்கிகள் கையாளுவதற்கு உண்டான செலவு என இதற்கு நாம் அதிகம் விலை கொடுத்து விட்டோம்.

பணமதிப்பு நீக்கத்துக்கான யோசனையை முன்வைத்தவர்கள், இந்த நடவடிக்கை வெற்றிபெறவில்லை என்றால் என்ன செய்வது என்பது குறித்து யோசித்திருக்க வேண்டும். 99 சதவிகித பணம் திரும்ப வந்திருப்பதில் இருந்து, நோக்கம் நிறைவேறவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். நான் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தபோது பணமதிப்பு நீக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், முடிவெடுக்கும் சமயத்தில் நான் இல்லை. அதேசமயம் தனியாக புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க திட்டமிட்டோம். அதற்கும் பணமதிப்பு நீக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை. பணமதிப்பு நீக்கத்தை திட்டமிடுவதற்கு முன்பாகவே புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வைத்திருக்க வேண்டும். ஆனால், பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததன் காரணம் எனக்குப் புரியவில்லை" எனப் பணமதிப்பு நீக்கம் குறித்து சில கேள்விகளை ரகுராம் ராஜன் எழுப்பியுள்ளார்.

`கணக்கில் வராத பணத்தை வைத்திருப்போர் வங்கியில் அதைச் செலுத்த மாட்டார்கள். அதனால் சட்ட விரோதப் பணம் பெருமளவில் ஒழியும். கள்ள நோட்டுகளையும், கணக்கில் வராத கறுப்புப் பணத்தையும் ஒழிப்பதே பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கம்’ என்றார் பிரதமர் மோடி. ஆனால், பணமதிப்பு நீக்கத்தைப் பொறுத்தவரை அந்த அறிவிப்பை வெளியிட வேண்டியது ரிசர்வ் வங்கி. அதற்கேற்ப ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தால், மறுநாளே புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்திருக்கும். தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு மக்கள் அல்லலுக்கு உள்ளாகி இருக்க மாட்டார்கள். ஆனால், எல்லாம் நானே என இறுமாப்பில் பலரையும் கலந்தாலோசிக்காமல் தான்தோன்றித் தனமாக பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டதால் இந்த அறிவிப்பின் நோக்கமும் நிறைவேறவில்லை. மக்களும் இன்னலுக்கு ஆளாக நேரிட்டது. 

99 சதவிகித பழைய நோட்டுகள், ரிசர்வ் வங்கிக்குத் திரும்ப வந்துவிட்டது என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது என்றால், கறுப்புப் பணம் எங்கே? கறுப்புப் பணம் வெள்ளையாகிவிட்டதா அல்லது கறுப்புப் பணமே இல்லையா? பணமதிப்பு நீக்கம் குறித்து பிரதமர் மோடி இன்னும் வாய் திறக்காமல் மெளனமாக இருப்பது ஏன்? பணமதிப்பு நீக்கம் மட்டுமன்றி டோக்லா எல்லை விவகாரம், உத்தரப் பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் குழந்தைகள் பலி மற்றும் மாட்டிறைச்சி பிரச்னையால் முஸ்லீம்கள் மீது தாக்குதல் என நம் நாட்டில் நடைபெறும் முக்கியமான எந்த ஒரு பிரச்னைக்கும் வாய் திறக்காமல் மெளனமாக இருப்பது சரிதானா பிரதமரே?


டிரெண்டிங் @ விகடன்