வெளியிடப்பட்ட நேரம்: 12:14 (05/09/2017)

கடைசி தொடர்பு:13:13 (05/09/2017)

தமிழகத்தைச் சேர்ந்த 22 பேருக்கு நல்லாசிரியர் விருது..! இந்தமுறை குடியரசு துணைத் தலைவர் வழங்குகிறார்

தமிழகத்தைச் சேர்ந்த 22 பேர் நல்லாசிரியர் விருது பெறுகின்றனர். வழக்கத்துக்கு மாறாக, நல்லாசிரியர் விருதுகளை குடியரசு துணைத்  தலைவர் வெங்கைய நாயுடு வழங்குகிறார்.


முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு, குடியரசுத் தலைவர் கையால் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுவருகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில், இந்த விருது வழங்கும் விழா நடைபெறுவது வழக்கம். இத்தனை ஆண்டுகள் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை, இந்த ஆண்டு மாற்றப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள நல்லாசிரியர்களுக்கு, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு விருது வழங்குகிறார். இந்த விழா, விக்யான் பவனில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 219 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், விருதுபெற்ற ஆசிரியர்களுடன் உரையாட உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 22 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. 15 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆறு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும், சிறப்புப் பிரிவில் ஒருவருக்கும் விருது வழங்கப்பட உள்ளது.