வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (05/09/2017)

கடைசி தொடர்பு:16:59 (05/09/2017)

’இது நாடாளுமன்றத் தேர்தலா என்ன?!’ டெல்லி ஜே.என்.யூ தேர்தல் பரபரப்பு

ஜே.என்.யு.

ஜனநாயகத்தன்மையின் அடிப்படைகளில் ஒன்று தேர்தல். தேர்தலில் போட்டியிடுபவர்கள் , வெற்றிபெறுவோர் குறைந்தபட்ச ஜனநாயகத்துடன் நடந்துகொள்கிறார்களா எனக் கேட்டுப் பார்த்தால்,  உரிய பதில்  கிடைப்பது பெரும்பாலும் சாத்தியமில்லை. இத்தகைய தேர்தல் தன்மையிலிருந்து மாறுபட்ட வடிவத்தைக் கொண்டது, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக- ஜே.என்.யு. மாணவர் அமைப்புத் தேர்தல்.

இங்கு ஜனநாயகத்தின் பல்வேறு எல்லைகளைக் காணமுடியும். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகமானது அடிப்படையில் ஜனநாயகத்தையும் கருத்து சுதந்திரத்தையும் பன்மைத்தன்மையையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.  இந்த வளாகத்திலுள்ள பல்வேறு மாணவர் அமைப்புகள்தான் வளாக ஜனநாயகத்தையும் கருத்துசுதந்திரத்தையும் பன்மைத்தன்மையையும் பாதுகாப்பவர்களாகவும் பல்வேறு சமூகநீதிக்கான போரட்டங்களை வளாகத்துக்குள்ளேயும் வெளியிலும் முன்னெடுப்பவர்களாகவும் உள்ளனர்.  

ஆண்டுதோறும் நடைபெறும் மாணவர் அமைப்பிற்கான தேர்தலானது, கல்விச்சூழலிலும் அரசியல் தளங்களிலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகின்றது. இந்த ஆண்டின் மாணவர் அமைப்புக்கான தேர்தல் இம்மாதம் 8-ம் தேதி நடைபெறவுள்ளது. தற்போது உயர்கல்வியின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என எதிர்ப் போராட்டங்களில் முன்னால் நிற்பவர்கள், ஜே.என்.யு. மாணவர்களே! இந்தியா முழுவதும் உயர்கல்வி நிறுவனங்கள் காவிமயமாகிக்கொண்டிருக்கிறது எனக் குற்றம்சாட்டப்படும் சூழலில், இது மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஜே.என்.யு. தேர்தலில், பல்வேறு மாணவ அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் போட்டியிடுவார்கள். தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், இணைச்செயலாளர், பாடப்பிரிவுகளுக்கான கவுன்சிலர்கள் பதவிகளுக்கான மாணவர் பிரதிநிதிகள் இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இத்தேர்தலின் முக்கியமான சிறப்பம்சம், போட்டியாளர்கள் மாணவர்களின் முன்னிலையில் பொதுவெளியில் தங்களது வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள்.  மாணவர்கள் அவர்களிடம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். குறிப்பிட்ட மாணவ அமைப்பின் மீதான விமர்சனங்கள் அவ்வமைப்பின் சார்பாகப் போட்டியிடும் மாணவரிடம் கேட்கப்படும்.

ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிடுவோர் பிற அமைப்புகளின் மீதான விமர்சனங்களையும் கேள்விகளையும் வைப்பார்கள். பதில்களையும் விளக்கங்களையும் அம்மேடையிலேயே பகிர்ந்துகொள்வார்கள். இத்தகைய விவாதங்களே மாணவத் தலைவரைத் தேர்தெடுப்பதில் அடிப்படையாக அமையும். இத்தகைய தன்மையானது பொது அரசியலில் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது ஒரு நிகழ்வு.

ஜே.என்.யு. என்றவுடன் பெரும்பான்மை அனைவருக்கும் நினைவுக்கு வருவது அங்கே நிலவும் இடதுசாரிச் சிந்தனை வளமும் அதுசார்ந்த செயல்பாடுகளும்தான். இந்தியாவின் வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் இல்லாத தனிச்சிறப்பாக இது அமைந்துள்ளது. உலகின் எந்த மூலையில் பிரச்னை நடந்தாலும் அதற்காகக் குரல்கொடுக்கவும் அதற்காகப் போராடவும் செய்கின்றனர்.

கடந்த 2015-16 ஆம் ஆண்டுத் தேர்தலில் பி.ஜே.பி. மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.,  இணைச்செயலாளர் பதவித் தேர்தலில் வெற்றிபெற்றதைத் தவிர்த்து, ஜே.என்.யு. மாணவர் அமைப்பில் வலதுசாரி அமைப்பினர்களும் காங்கிரஸ் சார்ந்த மாணவ அமைப்பினரும் இதுவரை பெரிய பொறுப்புகளில் வெற்றி பெற்றதில்லை. அந்த ஆண்டுதான் AISF-ஐச் சேர்ந்த கண்ஹையா குமார், ஜே.என்.யு. மாணவர் அமைப்புத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் நடைபெற்ற தேர்தலில் அகில இந்திய மாணவர் அமைப்பு (All Indian Student Association – AISA), இந்திய மாணவர் சங்கம்(Student Federation of India - SFI) ஆகிய இடதுசாரி அமைப்புகள் ஒருங்கிணைந்த இடதுசாரிகள் கூட்டமைப்பை உருவாக்கித் தேர்தலைச் சந்தித்தனர். இவர்களைத் தவிர்த்து பிர்சா அம்பேத்கர் புலே மாணவர் அமைப்பு (Birsa Ambedkar Phule Student Association - BAPSA) என்ற மாணவர் அமைப்பு, காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (National Student Union of India - NSUI), பா.ஜ.க-வின் மாணவ அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் (Akhila Bharatiya Vidyarthi Parsishad - ABVP) ஸ்வராஜ் மாணவர் முன்னணி (Students Front for Swaraj - SFS ) ஆகியவை தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்தன.

பல்கலை. வளாகத்துக்குள் காவல்துறை அத்துமீறி நுழைந்து, மாணவர் அமைப்புத் தலைவரைக் கைதுசெய்தது, மாணவர் போராட்டங்களுக்கு அனுமதி மறுத்தல்,  ShutDownJNU,  மாணவர் நஜீப் மீதான தாக்குதலைத் தொடர்ந்து அவர் காணாமல் போனது, போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது விசாரணைகள் பல்கலைக்கழகத்தைவிட்டு நீக்குதல், அபராதம் விதித்தல், மாணவர்களின் போராட்டங்களுக்குத் துணையாக இருக்கும் ஆசிரியர்கள் மீதும் விசாரணைகள் போன்றவை காரணமாக எதிர்எதிர் துருவங்களாகச் செயல்பட்டு வந்த மாணவ அமைப்புகளான இடதுசாரி அமைப்புகள் ஒன்றுபட்டுத் தேர்தலைச் சந்தித்தனர்.

தேர்தல் முடிவு இடதுசாரிகளின் கூட்டணிக்கே சாதகமாக அமைந்திருந்தது. அனைத்துப் பிரிவுகளிலும் இடதுசாரிகளின் ஒருங்கிணைந்த கூட்டணிக்கே வெற்றி கிடைத்தது. ஆனாலும் கடந்த ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழக நிர்வாகக் கூட்டங்களில் மாணவர்களின் பிரதிநிதிகள், பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளனர்.

பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்களின் போராட்டங்கள் மட்டுப்படுத்தப்படுத்தல், மாணவர் சேர்க்கையில் பெரும்பான்மையான இடங்களைக் குறைத்தல், மாணவர்கள் மீதான தாக்குதல், நூலகத்தில் பெரும்பான்மையான இதழ்களுக்கு சந்தாத் தொகை நிறுத்தப்பட்டு இந்து யோசனா போன்ற இதழ்களுக்கு சந்தாத் தொகை செலுத்துதல் ஆகியவற்றில் மாணவர்களின் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளன. பல்கலைக்கழக வளாகத்தின் நிர்வாகத்தில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள், ஆளும் அரசின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களாக இருப்பதுவும் இதற்கான காரணமாகக் கருதப்படுகின்றது.

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறும் மாணவ அமைப்பிற்கான தேர்தல் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இந்த ஆண்டு இடதுசாரிகளின் ஒருங்கிணைந்த கூட்டணியில் DSF என்ற மாணவ அமைப்பும் சேர்ந்து கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கின்றனர். இந்தக் கூட்டணியின் சார்பாக மாணவர் அமைப்பின் தலைவர் பதவிக்கு கீதா குமாரி (AISA), பாப்சா (BAPSA) சார்பாக சபானா அலி, ஏ.ஐ.எஸ்.எஃப். (AISF) சார்பாக அபராஜிதா ராஜா (மாநிலங்களவை எம்பி டி.ராஜாவின் மகள்), ஏபிவிபி சார்பாக நீதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நான்கு போட்டியாளர்களிடையே தான் கடுமையான போட்டி நிலவுகின்றது.

ஜேஎன்யூ வரலாற்றில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அனைவரும் பெண்களாக இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்தத் தேர்தலின் முடிவுகள், ஜே.என்.யு-வின் ஜனநாயகமான தன்மைக்கும் கொள்கைகளுக்கும் மாணவர்களின் செயல்பாட்டுக்கும் வலுச்சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் தளத்திலும் கல்விச் சூழலிலும் கவனிக்கப்படும் தேர்தலின் முடிவுகளைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்