Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ஓராண்டில் சாதித்தது என்ன?

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், வெளிப்படைத்தன்மையுடனும் தன்னிச்சையாகவும் இயங்கிவந்தார். அந்த வங்கியின் தற்போதைய ஆளுநரான உர்ஜித் பட்டேல், பத்திரிகையாளர்களைச் சந்திப்பதே இல்லை. பொது இடங்களிலும் பேசாமல் வாய் மூடியாக இருப்பதன் பின்னணி என்ன? 

உர்ஜித் பட்டேல்,

ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே, அவர் மீது பல விமர்சனங்களை எழுப்பினார் பா.ஜ.க-வின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி. ரகுராம் ராஜனின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா, படாதா என்ற சூழலில் அவரே `கவர்னர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை' என அறிவித்தார். ஒருவழியாக ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிந்த நிலையில், பாரத ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் பட்டேல் (53) நியமிக்கப்பட்டார். ரகுராம் ராஜனைப் போலவே உர்ஜித் பட்டேலும் யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பாடப் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் 1986-ம் ஆண்டு எம்.ஃபிலும் 1984-ம் ஆண்டு லண்டன் பல்கலையில் பொருளாதாரமும் படித்தவர். கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை, மத்திய நிதியமைச்சகத்துக்கு ஆலோசகராக இருந்தவர். ரிலையன்ஸ் குழுமத்தில் பணிபுரிந்தவர். கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி பாரத ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகப் பதவியேற்ற உர்ஜித் பட்டேல், 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ம் தேதி நாட்டின் 24-வது ஆளுநராகப் பொறுப்பேற்றார். இன்று இந்தியாவின் கஜானாவைக் கையாளும் உயரிய பொறுப்பு இவரிடம்தான் இருக்கிறது. 

பாரத ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உர்ஜித் பட்டேல் பொறுப்பேற்று, ஒரு வருடம் நிறைவடைந்துவிட்டது. ஓர் ஆண்டில் இவருடைய செயல்பாடுகுறித்து பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானத்திடம் பேசினோம். 

“பாரத ரிசர்வ் வங்கி கவர்னரின் செயல்பாட்டை ஜோதி சிவஞானம்ஆராய, முக்கியமான மூன்று விஷயங்கள் இருக்கின்றன.

1) பாரத ரிசர்வ் வங்கியின் நோக்கங்கள்.

2) விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருப்பது.

3) இந்திய ரூபாயின் மதிப்பை நிலையாக வைத்திருப்பது.

பாரத ரிசர்வ் வங்கியின் நோக்கத்தைப் பொறுத்தவரை முக்கியமானது, சுதந்திரமாகச் செயல்படுவது. ஆர்.பி.ஐ என்பது மத்திய அரசின் ஓர் அங்கம் கிடையாது. அது, தன்னிச்சையாகச் செயல்படும் ஓர் அமைப்பு. ‘மத்திய வங்கிகள் தன்னிச்சையாக இயங்க வேண்டும்' என்றுதான் பலரும் சொல்லிவருகிறார்கள். நம்முடைய ஆர்.பி.ஐ-யும் அப்படித்தான் இயங்கி வந்தது. பீமல் ஜலான், ஓய்.வி.ரெட்டி, டி.சுப்பாராவ் மற்றும் ரகுராம் ராஜன் போன்ற பல கவர்னர்கள் காலத்தில் பாரத ரிசர்வ் வங்கி தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டது. குறிப்பாக, ரகுராம் ராஜன் காலத்தில். அரசியல் காரணங்களுக்காகவும் அரசுக்காகவும் பாரத ரிசர்வ் வங்கியின் கொள்கைகளை மாற்றக் கூடாது. ஆர்.பி.ஐ தன்னிச்சையாகச் செயல்பட வேண்டும் என்பது முக்கியமான நோக்கம். ஆனால், அது நிறைவேறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

ஏனெனில், ரகுராம் ராஜன் கவர்னராக இருந்தபோது, ஒவ்வொரு மாதமும் பத்திரிகையாளர்களை அலுவல்ரீதியாகச் சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதுமட்டுமின்றி, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு இந்தியாவின் பொருளாதாரத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசிவந்தார். ரகுராம் ராஜனுக்கும் அருண் ஜெட்லிக்கும் பல முறை வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. வட்டிவிகிதத்தைக் குறைப்பது தொடர்பாக மத்திய அரசும் அருண் ஜெட்லியும் சொன்ன பிறகும்கூட ரகுராம் ராஜன் கேட்கவில்லை. `வட்டிவிகிதத்தைக் குறைக்க முடியாது' என்ற முடிவில் வெளிப்படையாகவும் சிந்தனையில் தெளிவாகவும் இருந்தார். இவ்வாறு பல இடங்களில் ரகுராம் ராஜன் பேசி வந்தபோது, பாரத ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் தெளிவாகத் தெரிந்தன. ஆனால், உர்ஜித் பட்டேல் இந்த ஒரு வருடத்தில் மொத்தமே மூன்று முறை மட்டுமே பத்திரிகையாளர்களைச் சந்தித்திருக்கிறார். இதனால் பாரத ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளும் திட்டங்களும் மக்களுக்குத் தெளிவாகத் தெரிய வாய்ப்பில்லை.

முக்கியமாக, பணமதிப்பு நீக்கத்தின்போது பாரத ரிசர்வ் வங்கி செயல்பட்டவிதம், இவர் தன்னிச்சையாக இயங்கவில்லை என்பதை வெளிப்படையாகவே காட்டியது. பாரத ரிசர்வ் வங்கியைப் பொறுத்தவரை, வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவது மிகவும் முக்கியம். இந்த வங்கியின் கொள்கைகள் மற்றவர்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும். ஆனால், பணமதிப்பு நீக்கம் நடைபெற்ற 2016, நவம்பர் 8-ம் தேதி அன்று பாரத ரிசர்வ் வங்கியின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ஆனால், இன்றைய தேதி வரை ரிசர்வ் வங்கிக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை வெளியிடவில்லை. ஒருவேளை இவரும் பணமதிப்பு நீக்கம் குறித்த முடிவை மறுத்திருக்கலாம். பாரத ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் கூட்டங்கள் நடைபெறும் விஷயங்கள் வெளியிடாமல் இருப்பதிலிருந்தே இவரிடம் வெளிப்படைத்தன்மையோ, தன்னிச்சையாகச் செயல்படும் தன்மையோ இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மொத்தத்தில் உர்ஜித் பட்டேல் வாய் மூடியாகவே உள்ளார்" என முடித்தார். 

ரகுராம் ராஜன் பதவியேற்றபோது, பணவீக்கம் அதிகமாக இருந்ததைச் சீராக்கினார். ரூபாயின் மதிப்பு அதிகரித்திருந்ததைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். இந்தியாவிலிருந்து அதிகமாக பணம் வெளியேறியதைத் தடுத்து நிறுத்தினார். முக்கியமாக, வெளிப்படையாகவும் தன்னிச்சையாகவும் செயல்பட்டார். ஆனால் உர்ஜித் பட்டேல், வாய் மூடி மௌனமாக இருப்பது பின்னணியை வரக்கூடிய காலம்தான் சொல்லவேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement