வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (06/09/2017)

கடைசி தொடர்பு:17:19 (08/09/2017)

“நதிகளை மீட்பதற்கு முன் ஆற்றைப் பிழைக்க விடுவார்களா?” - ஈஷா மையத்தைக் கேள்வி கேட்கும் பழங்குடி மக்கள் தரப்பு

ஈஷா ஜக்கி வாசுதேவ்

“இது போராட்டமல்ல... இது ஆர்பாட்டமல்ல... நம் நதிகள் வற்றி வருவதைப் பற்றிய விழிப்புஉணர்வு பிரசாரம் இது. தண்ணீர் குடிக்கும் ஒவ்வொரு மனிதரும் நம் நாட்டின் உயிர்நாடிகளான நதிகளைக் காக்க வேண்டும்.” 

-சத்குரு 

கோவை வெள்ளியங்கிரி மலையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஈஷா யோகாவின் ஜக்கி வாசுதேவ் அண்மையில் அறிவித்திருக்கும் திட்டம்தான் 'நதிகளை மீட்போம்; பாரதம் காப்போம்'. இவர் இதற்காகக் கட்டமைத்திருக்கும் குழுவில் பங்கேற்றிருக்கும் தன்னார்வலர்கள் சென்னை சாலைகளில், விநியோகித்துக் கொண்டிருந்த பிரசார நோட்டீஸ்களில்தான் மேற்கண்ட வாசகம் தென்பட்டது. 

தன்னார்வலர்கள்

இந்தத் திட்டத்துக்காக கடந்த 3-ம் தேதியன்று (3-9-2017) கோவையிலிருந்து காரில் பிரசாரப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஜக்கிவாசுதேவ், அடுத்த மாதம் 2-ம் தேதியன்று (2-10-2017) டெல்லியில் பயணத்தை நிறைவு செய்கிறார். 

'சுதந்திரம் கிடைத்த 1947-ம் ஆண்டுடன் ஒப்பிட்டால், இன்று தனிமனிதருக்கு 25 விழுக்காடு நீரே கிடைக்கிறது. 2030-ம் ஆண்டில் உயிர்வாழத் தேவையான நீரில் 50 விழுக்காடு மட்டுமே நமக்கு இருக்கும். தற்போதைய இந்தியாவில், 25 விழுக்காடு பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கிறது. இதற்குத் தீர்வு நதிநீர்களை மீட்பது' என்பதுதான் இத்திட்டத்தின் நிலைப்பாடு. இதற்காக அரசின் நிலத்தில் காடுகள் அமைத்தல், தனியார் நிலத்தில் பழ மரங்களை நடுதல், நதிகளின் இரு கரைகளிலும் சுமார் 1 கி.மீ அகலத்துக்கு மரம் நடுதல் என்பதெல்லாம் இதன்படியான செயல்பாடுகள். 

ஈஷா அரசின் ஒப்புதலுடன் ஆக்கிரமித்துள்ள விவசாய இடம்

நதிநீர் மீட்பு பற்றி பேசும் ஜக்கி வாசுதேவ் தன்னளவில் சரியாக இருக்கிறாரா... என்று கேள்வி எழுப்பியுள்ளார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் கலையரசு. கோவை இக்கரைப் போலுவாம்பட்டி பழங்குடி மக்கள் தரப்பு சார்பாக ஈஷா மையத்தின் மீது பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருக்கும் அவர் கூறுகையில்...

கலையரசு''கோயமுத்தூர், இக்கரைப் போலுவாம்பட்டி பழங்குடியின மக்கள் வசிக்கும் ரிசர்வ் காடுகளை அடுத்தே ஈஷா யோகா மையத்தின் கட்டடங்கள் தொடங்குகின்றன. அங்கு கட்டடங்கள் எழுப்பப்பட்டிருக்கும் 800 ஏக்கர் வரையிலான நிலம் அத்தனையும் விவசாய விளைச்சல் நிலங்கள். அவைதான் தரிசாக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.  ஈஷா யோகா மையத்தினர் அண்மையில் கட்டிமுடித்த ஆதியோகி சிலை கட்டுமானத்தின் பின்புறம்தான் ராஜ வாய்க்கால் மற்றும் நீலி வாய்க்கால் என்னும் இரண்டு வாய்க்கால்கள் ஓடுகின்றன. இவை இரண்டும் நொய்யலாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள். கட்டுமானத் தேவைக்காக ராஜ வாய்க்காலை முழுவதுமாக மூடிவிட்டார்கள். அதனால், நொய்யலாற்றிலிருந்து நதிக்குப் போகும் ஆற்று நீரின் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதையடுத்து இக்கரைப் போலுவாம்பட்டி மக்கள் தரப்பிலிருந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக ஜக்கி வாசுதேவ் தரப்பு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை” என்றார். 

பின்குறிப்பு: ஜக்கி வாசுதேவ் பயணிக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் கார் பற்றிய தகவல்கள் இந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருந்தன. நதிகள் மீட்பு பயணத்துக்கு உதவும் வகையில் டி.வி.எஸ். சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்திலிருந்து அந்த காரை அவருக்கு வழங்கியுள்ளனர் என்பது தெரியவருகிறது.

யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடனோ, உள்நோக்கத்துடனோ நாம் அதை எழுதவில்லை. அந்தத் தகவல்களை வெளியிட்டதற்காக வருந்துகிறோம்.

ஆசிரியர்,
vikatan.com

 

 


டிரெண்டிங் @ விகடன்