பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் சுட்டுக்கொலை! | Journalist Gauri Lankesh shot dead in Bengaluru

வெளியிடப்பட்ட நேரம்: 22:06 (05/09/2017)

கடைசி தொடர்பு:22:06 (05/09/2017)

பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ்


தீவிர ஹிந்துத்வா விமர்சகராக அறியப்பட்ட கௌரி லங்கேஷ், பெங்களூரு ராஜேஸ்வரி நகர் பகுதியில் வசித்து வந்தார். சமூக ஆர்வலரான கௌரி லங்கேஷ், தீவிர வலதுசாரி எதிர்ப்பாளராக அடையாளம் காணப்பட்டவர். லங்கேஷ் பத்திரிகே என்ற கன்னட பத்திரிகையை நடத்தி வரும் கௌரி லங்கேஷ், ஆங்கிலம் மற்றும் கன்னடப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதி வந்தவர். மதவாதத்துக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துவந்த கௌரி லங்கேஷுக்கு பல்வேறு சமயங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ராஜேஷ்வரி நகரில் உள்ள கௌரி லங்கேஷ் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 4 பேர், அவரை சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதவாதத்தை தீவிரமாக எதிர்த்து வந்த கௌரியின் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

கர்நாடகாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பத்திரிகையாளர் கல்புர்கி சுட்டுக்கொல்லப்பட்டது போன்றே, கௌரி லங்கேஷும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். கௌரி லங்கேஷுக்கு எதிராக பா.ஜ.க. தலைவர்கள் இரண்டு பேர் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்குகளில், அவர் குற்றவாளி என்று கர்நாடக நீதிமன்றம் கடந்தாண்டு நவம்பரில் தீர்ப்பளித்தது. அவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையுடன், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.


[X] Close

[X] Close