வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (06/09/2017)

கடைசி தொடர்பு:12:45 (06/09/2017)

ஆந்திர நதிநீர் இணைப்புத் திட்டம் - வெற்றுக் கூச்சலா, வெற்றிப் பாய்ச்சலா ? - அத்தியாயம் 3

 ஆந்திர நதிநீர் இணைப்பு திட்டம்

அத்தியாயம் -1

அத்தியாயம் -2

அத்தியாயம் - 03 - அழியும் பாப்பிகொண்டலா, அழும் கோதாவரி ! 

முந்தைய நாள் இருந்த குளிர் அடுத்த நாள் போலவரம் கிளம்பும் போது இல்லை. வெயில் சற்று உக்கிரமாகவே இருந்தது. அப்போது ரேடியோவில் , " கோதாவரி " படத்திலிருந்து ஒரு பாடல் ஒலிபரப்பானது.... 

" கோதாரம்ம கும்கம்பொட்டு திட்டி மிரப எருப்பு
   லங்கானாதுடினக்கா ஆகனன்டு பன்ட்லு கொருக்கு
    சூஸே சூப்பு ஏம் செப்பினிதி சீத காந்தகி
     சந்தேஹாலா மப்பே பட்டே சூஸி கண்டிகி
      லோகம் காணி லோகம்லோனா ஏகாந்தாலா வலப்பு
        அல பாப்பிகொண்டலா நலுப்பு கடகலேகா நவ்வு தனக்கு ராகா... "

இந்த வரிகளின் அர்த்தத்தை கட்டுரையின் முடிவில் காணலாம். அது தான் சரியாகவும் இருக்கும். கோதாவரி ஒரு ஆவணப்படம் அல்ல. 2006ல் அந்தப் படத்தை நான் பார்த்தது இன்றும் நினைவிலிருக்கிறது. அது ஒரு அழகான காதல் படம். கோதாவரி ஆற்றில் பத்ராச்சலம் போகும் ஒரு படகுப் பயணமும், அந்தப் பயணத்தில் வரும் பல கதாபாத்திரங்களின் கதைகளும் தான் படத்தின் கதை. இதனூடே, கோதாவரி ஆற்றின் அழகை அவ்வளவு நேர்த்தியோடு பதிவு செய்திருக்கும் அந்தப் படம். படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் கோதாவரியில் ஒரு பயணம் போக வேண்டுமென்ற பேராசையை உருவாக்கும். சரி... இப்போது நம் கதைக்கு வருவோம். இந்த வரிகளில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் " பாப்பிகொண்டலா " நம் கதையின் முக்கியக் கதாபாத்திரம். 

ஆந்திர நதிநீர் இணைப்பு திட்டம்

இந்தப் பயணத்திற்கான தரவுகளைத் திரட்டிக் கொன்டிருக்கும் போது ஒரு நாளிதழில் இந்தச் செய்தி கிடைத்தது. "போலவரம் திட்டம் தொடங்கப்பட்டதால் விரைவில் பாப்பிகொண்டலா மலைப்பகுதி முழுவதும் அழியப்போகிறது. அதற்கு முன்னர் கடைசியாக அந்த அழகைப் பார்த்திட ஆந்திர மக்கள் கோதாவரியில் படகுப் பயணம் மேற்கொள்கின்றனர். ஒரு நாளைக்கு 1500லிருந்து 2000 பேர் வரை படகுக்கான முன்பதிவைச் செய்துள்ளனர். பாப்பிகொண்டலா ஆந்திரத்தின் கோதாவரியின் மேல் நெஞ்சம் நிமிர்த்தி, நேர் கொண்ட பார்வைப் பார்க்கும் அழகிய மலைத் தொடர். ஆந்திர மக்கள் வழிபடும் இயற்கை தெய்வம். போலவரம் திட்டத்தால், இந்த மலைத் தொடர் முற்றிலும் அழிய இருக்கிறது. இந்த மலைகளைப் பூர்வீகமாகக் கொண்ட ஆதிவாசிகள், இந்த மலையை ஒட்டி வாழ்ந்துவரும் தலித் மக்கள் என இந்தத் திட்டத்தால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர வேண்டியிருக்கிறது. இந்தத் திட்டத்தால் இவர்களுக்கு ஏதொரு பயனும் இருக்கப் போவதில்லை. ஆனால், இந்தத் திட்டத்திற்கான காவு இந்த குரலற்ற ஒடுக்கப்பட்ட இயற்கைப் பிள்ளைகள்.

இவர்களின் கதைகளும், குரல்களும் அரசாங்கங்களுக்கு ஒருபோதும் பிடிப்பதில்லை. அந்தக் கதைகளைப் பின்னர் பார்ப்போம். முதலில் போலவரம் திட்டத்தின் கதை என்னவென்பதை ஆராய்வோம். டைம்மெஷின் கற்பனைகள் பிடித்தவர்கள் டைம்மெஷினில் பயணிக்கலாம். அது பிடிக்காதவர்கள் இதை ஒரு கதையாக , அதுவும் பிடிக்காதவர்கள் இதை ஒரு செய்தியாகப் படிக்கலாம். எதுவாக இருந்தாலும், நாம் சுதந்திர காலத்திற்கு முன்னர் இருந்து தொடங்க வேண்டும். 

அன்றைய ஆந்திரா, இன்றைய ஆந்திரா இல்லை. 1941யில் மெட்ராஸ் மாகாணத்தைச் சேர்ந்த திவான் பகதூர் எல். வேங்கடகிருஷ்ண ஐயர் தான் இந்தத் திட்டத்திற்கான விதை வித்திட்டவர். இவர்தான் கோதாவரி நதியில் ஒரு நீர்த் தேக்கத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் , அதற்கு ஏதுவான இடம் போலவரம் எனும் திட்ட அறிக்கை ஒன்றை அன்றைய பிரிட்டீஷ் அரசிடம் சமர்ப்பித்தார். இதற்கு "ராமபாத சாகர்" திட்டம் எனப் பெயரிட்டார். கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகும் கோதாவரி, போலவரம் பகுதியில் தான் மலைப்பாதையை விட்டு சமதளத்திற்கு வருகிறது. இதன் காரணமாகத் தான் போலவரம் பகுதியை அவர் தேர்ந்தெடுத்தார். 

அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் எஸ்.எல். சாவேஜ் (S. L. Savage) தலைமையில், அன்றைய உலகின் மிகச் சிறந்த பொறியாளர்களான கார்ல் தெர்சாகி (Karl Terzagi) , ஹார்ப்பர் (Harper) , முர்டாக் மெக்டொனால்ட் ( Murdoch Macdonald )  ஆகியோரைக் கொண்டு ஒரு குழுவை அமைத்தது அன்றைய பிரிட்டீஷ் அரசாங்கம். ஆந்திராவில், கிருஷ்ணாவையும், கோதாவரியையும் இணைப்பதற்கான சாத்தியங்களை ஆராய்வது தான் இவர்கள் பணி. பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ,

" இருவேறு பாதைகளில் ஓடிக் கொண்டிருக்கும் நதிகளின் மடையை மாற்றுவது, மலைகளை உடைத்து அணையைக் கட்டுவது,  மூழ்கவிருக்கும் கிராமங்களை காலிசெய்வது போன்ற சில கடினமான வேலைகளைக் கடந்து, இந்த இரு நதிகளையும் இணைப்பது சாத்தியம் தான் " என்று அறிக்கைக் கொடுத்தனர்.

ஆந்திர அரசின் திட்டக் குறிப்புகளில் எந்த இடத்திலுமே வேங்கடகிருஷ்ண ஐயரின் பெயர் இடம்பெயரவில்லை. சாவேஜ் தான் இந்தத் திட்டத்தின் முன்னோடி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

அந்த அறிக்கை, 1980ல் அறிவிப்பாக உருவெடுத்தது. அன்றைய ஆந்திர முதல்வர் தங்குத்ரி ஆஞ்சேயா இந்தத் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். ஆனால், எந்த முன்னெடுப்புகளும் எடுக்கப்படவில்லை. அந்தத் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் போலவரம் குறித்துப் பேசப்படும். ஆந்திராவில் வறட்சி, வெள்ளம் என எது வந்தாலும் "போலவரம் மட்டும் வந்துவிட்டால் இந்தப் பிரச்னைகள் நம்மை நெருங்கவே நெருங்காது" என ஒட்டுமொத்த ஆந்திர மக்களும் தொடர்ந்து நம்ப வைக்கப்பட்டனர். இன்றும் அதே நம்பிக்கையில் தான் இருக்கிறார்கள். 

1980ல் தங்குத்ரி ஆஞ்சேயாவின் முயற்சிக்குப் பின்னர்,  24 வருடங்கள் கழித்து 2004ல் ராஜசேகர் ரெட்டி இந்தத் திட்டத்தை தூசு தட்டினார். "ராம பாத சாகர் " திட்டமாக இருந்த இது, இவரின் ஆட்சிக்காலத்தில் "இந்திரசாகர் திட்டம்" என்ற பெயர் மாற்றம் கண்டது. தொழில்நுட்ப ரீதியிலும், அரசியல் ரீதியிலும், பல துறைகளின் அனுமதி வாங்கும் வகையிலும் இந்தத் திட்டம் மிகவும் சிக்கலானது. ஆதலால், ரெட்டி ஒரு புதுத் திட்டத்தைத் தீட்டினார். போலவரம் நீர்த் தேக்க அணைக்கு முன்னர் அந்தத் தண்ணீரைக் கொண்டு செல்லும் கால்வாய்களை வெட்ட ஆரம்பித்தார். வலது முக்கிய கால்வாய் ( Right Main Canal ), இடது முக்கிய கால்வாய் ( Left Main Canal ) என இரண்டுக் கால்வாய்களை வெட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. 

ஆந்திர நதிநீர் இணைப்பு திட்டம்

வலது முக்கிய கால்வாய்  ( Right Main Canal ) :

போலவரத்திலிருந்து 174கிமீ தூரம் ஓடும் இந்தக் கால்வாய் மேற்கு கோதாவரி மாவட்டம் மற்றும் கிருஷ்ணா மாவட்டத்திலிருக்கும் 3.2 லட்சம் ஏக்கருக்கு பாசன நீரை வழங்கும். மேலும், கோதாவரியிலிருந்து 80 டிஎம்சி நீரை கிருஷ்ணாவிற்கு திருப்பிவிடும். இதன்மூலம் 8 லட்சம் ஏக்கர் இந்த நீரைப் பயன்படுத்தலாம். (ஆந்திர அரசின் அதிகாரப் பூர்வத் தகவல்) .

இடது முக்கிய கால்வாய் ( Left Main Canal ) :

181.5 கிமீ தூரம் ஓடும் இந்தக் கால்வாய் கிழக்கு கோதாவரி மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டத்திலிருக்கும் 4 லட்சம் ஏக்கருக்குப் பாசன நீர் வழங்கும். மேலும், விசாகப்பட்டின நகரம் மற்றும் விசாகப்பட்டின ஸ்டீல் ப்ளாண்ட் ( Vishakapattinam Steel Plant ) ஆகியவற்றிற்கும் 23.44 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படும்.  (ஆந்திர அரசின் அதிகாரப் பூர்வத் தகவல்) .

போலவரம்  பகுதியிலிருக்கும் பாப்பிகொண்டலா மலைத் தொடர்களை வெட்டி, அதன் மடியில்  ஒரு மிகப்பெரிய நீர் தேக்க அணையைக் கட்டுவது. 150 அடி உயரம் இருக்கும் அதில், பாய்ந்து வரும் கோதாவரி நீரை சேமித்து வைத்து, பின்னர் இடம் மற்றும் வலமாக வெட்டப்பட்டிருக்கும் கால்வாய்களில் புவி ஈர்ப்புச் சக்தியின் அடிப்படையில்  பாய்ச்சி, அதை ஒரு கட்டத்தில் கிருஷ்ணாவோடு இணைத்து ஆந்திராவின் மூலை முடுக்குகளுக்கும் நீரைக் கொண்டு சேர்ப்பது தான் இந்தத் திட்டத்தின் அடிப்படை என்று சொல்கிறது ஆந்திர அரசு. 

1941யில் வேங்கடகிருஷ்ண ஐயர் இந்தத் திட்டத்திற்குத் தோராயமாக ஆறரைக் கோடி ரூபாய் செலவாகும் என்று சொல்லியிருந்தார். 2004யில் திட்டத்திற்கான மொத்த செலவாக 14 ஆயிரம் கோடீ ரூபாய் ஆகும் என்றது ராஜசேகர ரெட்டி தலைமையிலான அரசு. 2014யில் சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றவுடன் 40 ஆயிரம் கோடி இந்தத் திட்டத்தின் செலவு என்று அறிவித்தார்.  கடந்த மாதம் இறுதியாக மொத்த திட்டத்திற்கு 60 ஆயிரம் கோடிகள் செல்வாகும் என்று சொல்லியிருக்கிறார்.

இந்தக் கால்வாய் வெட்டும் பணிகளில் 80 சதவீத பணிகள் ராஜசேகர ரெட்டியின் காலத்திலேயே முடிக்கப்பட்டுவிட்டது. எதிர்பாராத விதமாக ராஜசேகர ரெட்டியின் மரணம், அதைத் தொடர்ந்து ஆந்திர அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், ஆந்திரா - தெலுங்கானா பிளவு என பல பிரச்னைகளின் காரணமாக இந்தத் திட்டம் கிடப்பிலேயே கிடந்தது. ஆந்திரா - தெலுங்கானா பிரிக்கப்பட்ட போது, மத்திய அரசாங்கம் போலவரம் நீர் இணைப்புத் திட்டத்தை தேசிய திட்டமாக அறிவித்து, அதற்கான முழு செலவுகளையும் தானே ஏற்பதாக கூறியது. 2014ல் சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்றதும் மிக துரிதமாக இந்தத் திட்டத்தை முன்னெடுத்தார். அதுவும், தற்போது தேசிய நதிநீர் இணைப்பிற்கு 6 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கப்போவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள சூழலில் இந்தத் திட்டம் தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது. 

போலவரம் திட்டத்தின் பயன்கள் : ( ஆந்திர அரசின் குறிப்புப்படி ) 

1. 15.2 லட்சம் ஏக்கருக்கு பாசன நீர் வசதி.
2. 960 மெகாவாட் நீர் மின்சாரம் உற்பத்தி.
3. 540 கிராமங்களுக்கு குடிநீர் வசதி.
4. செயற்கை முறை மீன் வளர்ப்பு மற்றும் மீன் ஏற்றுமதிக்கான வசதிகள்.
5. ஒடிஷா மாநிலத்திற்கு 5 டிஎம்சி, சட்டீஸ்கருக்கு 1.5 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படும். 

அரசின் சாதனை அறிவிப்புகளை சில நிமிடங்கள் தொடர்ந்துப் படித்தால், இது போன்ற ஒரு ஆகச்சிறந்த திட்டம் இதுவரை உலகில் எங்குமே மேற்கொண்டதில்லை என்ற எண்ணமே மேலெழுகிறது. அரசின் அறிவிப்புகளைக் கடந்து கொஞ்சம் உற்று நோக்கினால் , களத்தில் நின்று பார்த்தால் எதிர்காலம் குறித்த பெரும் பயம் சூழ்கிறது.

நமக்கு, ஒரு வழியாக போலவரம் திட்டத்தைப் பார்வையிட அனுமதிக் கிடைத்தது. பாய்ந்தோடும் கோதாவரியின் மேல் கட்டப்பட்டிருக்கும் பாலங்களைக் கடந்து ரிப்பீட் மோடில் "கோதாவரி" படத்தின் பாடலைக் கேட்டபடியே வேகமாகப் போய்க்கொண்டிருந்தோம்.

" மிளகாயின் சிகப்பு கோதாவரிக்கு பொட்டு இட்டதாக அலங்கரிக்கிறது,
   ராவணன் பொறுமையை இழந்து கடுங் கோபத்தில் பல்லைக் கடுத்துக் கொண்டிருக்கிறான்,
   அவன் பார்வை சீதைக்கு என்ன சொன்னது ? அவன் கண்களில் சந்தேக மேகங்கள் சூழ்ந்திருந்தன,
   இந்த தனிமையான இடத்தில் , ஓர் தனிமையான, இனிமையான  உணர்வு,
   இதோ... இந்த கோதாவரியின் அலைகள் எள்ளி நகையாடுவது போல் இருக்கின்றன - 
    பசுமைப் போர்த்திய இந்த பாப்பிகொண்டலா மலையின் பச்சையை நீக்கமுடியாத காரணத்தால் ! " 

இன்னும், இன்னும் இந்தப் பாடலில்  கோதாவரியின் அழகை வர்ணிக்கும் எத்தனையோ வரிகள் இருந்தன.

" இந்தத் தூய்மையான நதி , அந்த அடர்த்தியான மலையின் பக்கம் வளைந்து, நெளிந்து ஓடிக் கொண்டிருக்கிறது. தன்னைக் காத்து நிற்கும் நண்பனுக்கு நன்றி சொல்லியபடியே அந்த நதி அந்த மலைகளின் கால்களை வருடிப் பாய்கிறது. ஓர் ஆத்மார்த்தமான , அழிவில்லா நட்பிற்கான சாட்சியாய் அதன் உறவு இருந்தது..."

ஆனால், பாப்பிகொண்டலாவுக்கும் கோதாவரிக்குமான உறவை இத்தனை நாசம் செய்ய முடியுமா, இப்படியும் நாசம் செய்ய முடியுமா,  என்கிற அதிர்ச்சி போலவரம் திட்ட இடத்தைப் பார்க்கும் போது ஏற்பட்டது. இது வளர்ச்சியா? இது தான் வளர்ச்சியா? இதுவும் வளர்ச்சியா? இதுவா வளர்ச்சி? - போன்ற கேள்விகள் எழுந்தன. அதுவரை கோதாவரி ஆனந்தத்தில் ஆர்ப்பரித்து ஓடுவதாக தோன்றியது. ஆனால், தன் நண்பனின் இழப்பைத் தாங்கமுடியாது, அடக்க முடியா கண்ணீரில் அழுது கொண்டு தான் ஓடுகிறது என்பது புரிய ஆரம்பித்தது.

அத்தியாயம் -1

அத்தியாயம் -2


                                                                                                                                                                                                     ( உண்மைத் தேடலாம்...)  

 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்