Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சண்டை முதல் சமாதானம்வரை...' -பிரிக்ஸ் மாநாட்டில் கைகோத்த இந்தியா-சீனா!

இந்தியா - சீனா

சில வாரங்களுக்கு முன்பு, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே போர் மூளுமோ என்னும் அளவுக்கு அபாயகரமான சூழல் இருந்து வந்தது. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன் இரு நாடுகளின் தூதரக அதிகாரிகள் கலந்துபேசி, எல்லையில் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

இதையடுத்து, சீனாவில் நடைபெற்று முடிந்த பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள முடிவெடுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஸியாமென் நகரில் நடந்த மாநாட்டில் பங்கேற்றார். மாநாட்டிற்கு இடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, பிரேசில் அதிபர் மிச்செல் தெமர் ஆகியோரை தனித்தனியே சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார். அதுமட்டுமின்றி, சீன அதிபர் ஸீ ஜின் பிங்கையும் மோடி சந்தித்துப் பேசினார். இந்தியப் பிரதமர் - சீன அதிபரின் இந்தச் சந்திப்பு, பிரிக்ஸ் மாநாட்டை விடவும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக, பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில், உலகளாவிய தீவிரவாதத்தை அனைத்து உறுப்பு நாடுகளும் இணைந்து ஒழிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மாநாட்டின் நிறைவாக, தீவிரவாத ஒழிப்பு தொடர்பான பிரிக்ஸ் கூட்டு பிரகடனமும் வெளியிடப்பட்டது. அதில், "தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள், அதற்கான விளைவுகளை எதிர்கொள்வதுடன், தங்களின் செயல்பாட்டிற்குப் பதில் அளித்தே ஆகவேண்டும்" என கூறப்பட்டிருக்கிறது.

இந்த மாநாட்டில் தீவிரவாத எதிர்ப்பு குறித்த கோரிக்கையை பிரதமர் மோடியே முன்வைத்தார். அதற்கு அனைத்து பிரிக்ஸ் நாடுகளின் ஆதரவும் கிடைத்து, அதுதொடர்பான பிரகடனமும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், தீவிரவாதத்துக்கு எதிராக சீனா வாய் திறக்காது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், பிரகடனம் முற்றிலும் தலைகீழாக அமைந்திருந்தது.

இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு கோரிக்கையை ஏற்ற பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், 43 பக்கங்கள் கொண்ட கூட்டு பிரகடனத்தை வெளியிட்டு தீவிரவாதத்துக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை உறுதி செய்தனர். இதில் தீவிரவாதம் என்ற வார்த்தை 17 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் சர்வதேச தீவிரவாத அமைப்புகளிடமிருந்து, அந்த அமைப்புகளினால் பாதிப்புக்கு உள்ளாகும் நாடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களும், ஆதரவு தருபவர்களும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 

கோவாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில், பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகள், இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளன என்பதை இந்தியா முன்வைக்க நினைக்கையில், சீனா அதனை தடுத்துவிட்டது. ஆனால், இந்த ஆண்டு இந்தியா தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான தன் கோரிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. 

சீனாவில் முடிவடைந்த பிரிக்ஸ் மாநாட்டில், மோடி ஆற்றிய உரையில், சர்வதேச தீவிரவாதம், சட்டவிரோதச் செயல்களை ஒடுக்குவது போன்ற விஷயங்கள் இடம் பெற்றிருந்தன. இறுதியாக, இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்தமைக்காக, சீனாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் சீன அதிபரைச் சந்தித்த மோடி, இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை குறித்தும், டோக்லாம் பிரச்னை, எல்லையில் படைகள் குவிக்கப்பட்டதை அடுத்து எழுந்த பதற்றத்திற்கு சுமுகத் தீர்வு போன்றவை குறித்து விவாதித்ததாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவும், சீனாவும் இணைந்து நட்பு பாராட்டுவதெல்லாம் சரி; இன்னமும் சீனா, இலங்கைக்கு ஆதரவளித்து தமிழக மீனவர்கள் பிரச்னையில் தலையிடுவதும், சர்வதேச கடல் பகுதியில் அத்துமீறுவதும் தொடர்கதையாகவே நீடிக்கிறது. இந்தப் பிரச்னைக்கு சீனாவிடம் பதில் இருக்கிறதா என்பதுதான் கேள்வி...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement