Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கனல் எழுத்து முதல் துப்பாக்கிக் குண்டு மரணம் வரை... யார் இந்த கெளரி லங்கேஷ்?

கெளரி லங்கேஷ்

மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் பெங்களூரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். எளிய மக்களின் உரிமைகள், இந்துத்துவ அரசின் கொடுமைகள் எனப் பல்வேறு தளங்களில் தீவிரமாகக் குரல் கொடுத்தவர் கெளரி லங்கேஷ். அவரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே... 

* கெளரி லங்கேஷின் தந்தை பி.லங்கேஷ், கர்நாடகாவில் பிரபலமான பத்திரிகையாளர், கவிஞர், திரைப்பட இயக்குநர். ‘லங்கேஷ் பத்ரிகே’ என்ற பிரபல கன்னட தினசரியை நடத்திவந்தார். இது, விளம்பரங்களே இல்லாமல், முழுக்க முழுக்க வாசகர்களை நம்பி நடத்தப்பட்ட பத்திரிகை என்பது குறிப்பிடத்தக்கது. 

* 1962-ம் ஆண்டு பிறந்தவர் கெளரி லங்கேஷ். இவருக்குக் கவிதா லங்கேஷ் என்ற சகோதரியும், இந்திரஜித் லங்கேஷ் என்ற சகோதரரும் உள்ளனர். இருவருமே திரைப்பட இயக்குநர்கள். 

* தந்தையின் வழியில் பத்திரிகைத் துறையில் நுழைந்தவர் கெளரி லங்கேஷ். 1980-ம் ஆண்டு முதல் டைம்ஸ் ஆப் இந்தியா, சண்டே மேகஸின் போன்ற பத்திரிகையில் பணியாற்றி வந்தார். 

* 2000-ம் ஆண்டு இவரின் தந்தை காலமானார். தொடர்ந்து பத்திரிகையை யார் நடத்துவது என்பதில் கெளரி லங்கேஷூக்கும், சகோதரர் இந்திரஜித் லங்கேஷூக்கும் சில கருத்து வேறுபாடுகள் எழுந்தன. அதன்பிறகு, ‘கெளரி லங்கேஷ் பத்ரிகே’ எனத் தனது பெயரில் பத்திரிகை தொடங்கி, ஆசிரியராகப் பொறுப்பேற்றார் கெளரி. 

* ஊடகங்களில் சுதந்திரத்தைப் பற்றி தொடர்ந்து குரல் கொடுத்தவர். அரசியல் தத்துவங்களின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட மக்கள் ஒடுக்கப்படுவதைத் தனது எழுத்துகள் மூலம் கண்டித்தவர். 2016-ம் ஆண்டு, “இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து கருத்துச் சுதந்திரத்தை முடக்கிவருகிறது” என்று ஒரு பேட்டியில் அழுத்தமாகத் தெரிவித்தார். 

* டெல்லி ஜவஹார்லால் நேரு பல்கலைக்கழத்தில் போராடிய கன்ஹையா குமாருக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்தார் கெளரி லங்கேஷ். குஜராத் மாநிலத்தில், பசு காவலர்கள் தலித் மக்கள் மீது நடத்தும் வன்முறைகளை எதிர்த்து வருபவர், ஜிக்னேஷ் மெவானி (Jignesh Mevani). கன்னையா குமாரையும், ஜிக்னேஷையும் தன் சொந்த மகன்போல கருதினார் கெளரி. 

* இந்தியாவில் நிலவிவரும் சாதி அமைப்பு பற்றியும், மதச்சார்புடைய அரசியல் அமைப்பைப் பற்றியும் கெளரி தொடர்ந்து தனது அனல் பறக்கும் எழுத்துகளில் வெளிப்படுத்தினார். 

* 2016-ம் ஆண்டு நவம்பரில், கர்நாடக பி.ஜே.பி கட்சியைச் சேர்ந்த ப்ராஹலாத் ஜோஷி மற்றும் உமேஷ் துஷி பற்றி இவர் எழுதிய கட்டுரை பெரும் சர்ச்சையில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து, கெளரி மீது அவதூறு வழக்குப் பதிவுசெய்தனர். இந்த வழக்கில் கெளரிக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், தண்டனை வழங்கப்பட்ட அதே நாளிலேயே பெயிலில் வெளியில் வந்தார். 

* 2015-ம் ஆண்டு, மூத்த பத்திரிகையாளர் எம்.எம்.குல்பர்கி கொல்லப்பட்டபோது, “இந்துத்துவ அமைப்புகளும் மோடி ஆதரவாளர்களும் அவர்களுடைய தத்துவத்தை எதிர்ப்பவர்களைக் கொலை செய்வதை வரவேற்கின்றனர்’ என்று ஓங்கிக் குரல் கொடுத்தவர் கெளரி லங்கேஷ். 

* கெளரி கொல்லப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு, சிலர் அவரைப் பின்தொடர்ந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அவருக்குப் புதிய எண்ணிலிருந்து அழைப்புகள் வந்ததாகவும், அவர் வசிக்கும் தெருவில் வெள்ளை நிற கார் கடந்த சில நாள்களாகச் சுற்றிவந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

* நேற்று அவர் தனது அன்றாட பணியை முடித்துக்கொண்டு, காரில் வீடு திரும்பினார். வீட்டு வாசலை நெருங்கியபோது, அவரை நோக்கி ஏழு துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. அதில் மூன்று குண்டுகள் அவர் மீது பாய்ந்தன. 

* தனது வாழ்நாள் முழுவதும் அச்சமின்றி செயல்பட்ட கெளரி லங்கேஷின் மரணத்துக்குப் பதில் அளிக்குமா மோடி அரசு?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement