Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“ஹிட்லரும் வீழ்ந்ததுதான் வரலாறு!” - பெண் பத்திரிகையாளர்கள் கொதிப்பு! #GauriLankesh

பத்திரிகையாளர் கௌரி லிங்கேஷ் (GauriLankesh)  கொலை செய்யப்பட்தைச் சேர்த்து, இது கர்நாடகாவில் நடக்கும் நான்காவது படுகொலை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த எழுத்தாளர் கல்புர்கி கொலை வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை. இந்நிலையில், தற்போது கௌரி கொல்லப்பட்டுள்ளார். பெண் பத்திரிகையாளர் கௌரியின் படுகொலை குறித்து தமிழகத்தின் இரண்டு முக்கியப் பெண் பத்திரிகையாளர்களிடம் கருத்துக் கேட்டோம்.  

Gauri Lankesh

“இந்தக் கொலையின் மூலம் பத்திரிகையாளர்களை மிரட்டுவதற்கு முயற்சி செய்கிறார்கள்" என்றார் கவிதா முரளிதரன். "இந்த வரிசையில் நடக்கும் நான்காவது கொலை இது. தொடர்ந்து வலதுசாரி அரசியலை எதிர்த்துப் பேசியும் எழுதியும் வருபவர்களைக் கொலை செய்யும் போக்கு தொடர்கிறது. இந்தக்கொலையின் மூலமாக அரசுக்கு எதிராகவும், வலதுசாரி அரசியல் போக்குக்கு எதிராக எழுதியும் பேசியும் வரும் பத்திரிகையாளர்களை வழிக்குக் கொண்டுவர நினைக்கின்றனர். அதைத்தான் இந்தப் படுகொலை காட்டுகிறது. பத்திரிகை சுதந்திர குறிப்பெண் வரிசையில் இஸ்ரேலை, பாலஸ்தீனத்தை, காங்கோவை, குவைத்தை, ஆப்கானிஸ்தானை, ஏன் மியான்மாரை விடவும் இந்தியா தாழ்வான குறியீட்டு எண் கொண்டுள்ளது. இதுபோன்ற கொலைகளின் மூலம் அது இன்னும் குறையும். தெற்காசியாவிலேயே பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு குறைவான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அரசை விமர்சனம் செய்பவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்" என்றார்.

தீவிர மதவாத எதிர்ப்பு எழுத்துகளை முன்வைத்து வரும் ஜெயராணி "இந்த நிலையில் இருந்து ஒரு மாற்றத்தை ஜனநாயகம் கொண்டுவரும்’’ என்று நம்பிக்கையுடன் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.

கௌரி படுகொலை குறித்து அவர் கூறுகையில் "இந்துத்துவ சர்வாதிகாரத்துக்கு எதிராக எழுதவோ, பேசவோ, போராடவோ வேண்டுமென்பதில்லை. தன் வேலையைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்தால் கூட இந்த ஆட்சியில் யாருக்கு, எப்போதும் எதுவும் நேரலாம் என்ற நிலை எப்போதோ உருவாகிவிட்டது. சமூக வலைதளத்தில் தினம் ஒரு வன்முறை வீடியோ ரிலீஸ் ஆகிறது. விரும்பிய உணவை உண்டதற்காக, விரும்பியவருடன் பேசியதற்காகவெல்லாம் குடிமக்கள் சிதைக்கப்படுவது சாதாரணமாகிவிட்டது. எந்த நாட்டில் குடிமக்களுக்கு ஆபத்து நிறைந்திருக்கிறதோ, அங்கெல்லாம் ஜனநாயக அமைப்புகளுமே ஆபத்தில் இருக்கிறது என்றுதான் அர்த்தம். கெளரியைப் போல மதவாதத்துக்கு/எதேச்சாதிகாரத்துக்கு எதிராகப் போராடுகிறவர்கள் கொல்லப்படுவதெல்லாம் அதன் தொடர்ச்சிதான். 

கௌரியைக் கொலை செய்தவர்கள் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்பது ஏறக்குறைய எல்லோருக்குமே தெரியும். விசாரணையின் முடிவுகள், சொந்தப் பிரச்னை அல்லது முன் விரோதம் அல்லது அவரது கண்ணியத்துக்கும் நேர்மைக்கும் களங்கம் கற்பிக்கிற வகையிலோ வரலாம். மத, சாதியவாதிகளால் கொல்லப்படுகிறவர்கள் மீது அப்படிப்பட்ட பழிகள்தான் சுமத்தப்படுகின்றன. ஆனால், இப்படியான பழிகளோ, கொலைகளோ, அச்சுறுத்தல்களோ நீதியின் பக்கம் நிற்பவர்களை முடக்கிவிடுவதில்லை. கௌரியின் உயிர்ப்பலி எந்தப் பேனாவின் முனையையும் முறித்துவிடாது. 

ஹிட்லர்


கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாத யாருமே கோழைகள்தான். அவர்கள் இதுபோல வன்முறைகளைக் கையிலெடுப்பார்கள். ஒரு கொலையை மறைக்க இன்னொரு கொலை, ஒரு அநீதியை மறைக்க இன்னொரு அநீதி எனப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். நீதிமன்றம், அரசு, ஊடகம், நிர்வாகம் என ஜனநாயகத்தின் எல்லாத் தூண்களும் மதவாதத்தால் அரிக்கப்பட்டிருக்கும்போது யாரிடம் நாம் நீதி கேட்பது? 

எல்லாவற்றையும் மதவாதத்தால் மாசுபடுத்தும், இந்த மதவாத  ஆட்சியின் கொடூரம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கொடூரத்தின் மொத்த உருவாகக் கருதப்படும் ஹிட்லரும் வீழ்ந்ததுதான் வரலாறு. இது ஜனநாயக நாடு. எந்த ஜனநாயகம் உங்களுக்கு வாய்ப்பளித்ததோ அதே ஜனநாயகம் உங்கள் வாய்ப்பைப் பறிக்கவும் செய்யும். நாங்கள் அதற்காகக் காத்திருக்கிறோம்." என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close