Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எத்தனை கொலைகள் நடந்தாலும் பேனாக்களை உடைக்க முடியாது! #GauriLankeshMurder

கௌரி லங்கேஷ்

பெங்களூரில் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் மீது பி.ஜே.பி-யைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் அவதூறு வழக்கைப் பதிவு செய்திருந்தார். கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், அவரது இழப்பு அளவிட முடியாதது. கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை கர்நாடக மாநில அரசு அமைத்துள்ளது. 

கௌரி மட்டுமல்ல; உலகம் முழுவதும் 2016-ம் ஆண்டில் மட்டும் 122 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 93 பேர் குறிவைத்து தாக்கப்பட்டு கொல்லப்பட்டவர்கள். இந்தியாவில் மரணமடைந்தவர்கள் ஐந்து பேர். உலக அளவில் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்படுவதில், 2016-ல் இந்தியா எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 23 நாடுகளில் பத்திரிக்கையாளர்கள் குறிவைத்துத் தாக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்தப் பட்டியலில் ஈராக் முதலிடம் வகிக்கிறது.

2015-ம் ஆண்டில் 112 பேர் கொல்லப்பட்டனர். ஈராக்கில் அதிகபட்சமாக 15 பேரும், ஆப்கானில் 13 பேரும், மெக்ஸிகோவில் 11 பேரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வரிசையில் ஏமன் (8), குட்டமாலா மற்றும் சிரியா (6), இந்தியா (5), பாகிஸ்தான் (5) என இடம்பெறுகிறது. 

கடந்த 1993-ம் ஆண்டில், குறிவைத்து தாக்கப்பட்ட நிகழ்வுகளில் பிரேசிலைச் சேர்ந்த விளையாட்டுப் பத்திரிகையாளர்கள் 20 பேர், கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்டனர். 2015-ல் அங்கு மூன்றுபேராக இருந்த பத்திரிக்கையாளர் படுகொலை, அதற்கு அடுத்த ஆண்டில், அதாவது 2016-ல், 20 ஆக உயர்ந்தது. இதே ஆண்டில் ரஷ்ய பத்திரிகையாளர்கள் ஒன்பது பேர் ராணுவ விமானத் தாக்குதலில் உயிரிழந்தனர்.

இந்தியாவில் 2016-ம் ஆண்டில் உயிரிழந்த ஐந்து பத்திரிகையாளர்கள் பற்றிய விவரம்:

*பிப்ரவரி 14, 2016 - ஜன் சந்தேஷ் டைம்ஸ் இதழின் தலைமைச் செய்தியாளர் தருண் மிஸ்ரா அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார்.

*மே 16, 2016  தாஸா டி.வி. பத்திரிகையாளர் இந்திரதேவ் யாதவ்

உள்ளூரில் நடந்த சட்டரீதியான குற்றங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக சுட்டுக் கொல்லப்பட்டார்.

*மே13, 2016 - தைனிக் இந்துஸ்தான் தலைமைச் செய்தியாளர் ராஜ்தோ ரஞ்சன்,

ராஷ்டிரிய ஜனதா தள முன்னாள் எம்.பி குறித்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வந்ததால், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று தெரியவந்தது. 

*ஆகஸ்ட் 22, 2016 - ஜெய் ஹிந்த் பத்திரிகையின் தலைமை செய்தியாளர் கிஷோர் தவே, போக்குவரத்துத் தொழிலில் பங்குதாரருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

*நவம்பர் 12, 2016 - டைனிக் பாஸ்கர் இதழின் நிருபர் தர்மேந்திர சிங், உள்ளூர் மாஃபியாக்கள் பற்றி எழுதியதால், வாக்கிங் சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார்.

இப்படி ஒவ்வொரு வருடமும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. 

கெளரி லங்கேஷை அவரின் வீட்டின் முன்பு இரவு ஏழு மணிக்கு அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். 

'பத்திரிக்கையாளர்களுக்கான சுதந்திரம்' எனும் விஷயத்தில் சென்ற வருடம் உலக அளவில் 133-வது இடத்தில் இருந்த இந்தியாவின் தரவரிசை இந்த ஆண்டு, மூன்று இடங்கள் பின்தங்கி 136-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. 

பத்திரிகையாளர்களின் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் சூழலே இதுபோன்ற படுகொலைச் சம்பவங்களுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பேனா முனையை கத்திமுனையால் அடக்கி விடமுடியும் என்றரீதியில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. கத்தி முனையைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், பேனாக்கள் தொடர்ந்து கூர்தீட்டப்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் பத்திரிகையாளர்களின் பேனா அஞ்சப்போவதில்லை; அடக்குமுறைகளுக்கும், அநியாயங்களுக்கும் எதிரான விமர்சனங்கள் தொடரும் என்பது திண்ணம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close