“கெளரி லங்கேஷ் ஓர் அற்புதமான மனிதி” - நெகிழும் முன்னாள் கணவர்! #GauriLankesh | Gauri Lankesh an amazing grace - A tribute letter from her ex-husband

வெளியிடப்பட்ட நேரம்: 08:53 (08/09/2017)

கடைசி தொடர்பு:08:53 (08/09/2017)

“கெளரி லங்கேஷ் ஓர் அற்புதமான மனிதி” - நெகிழும் முன்னாள் கணவர்! #GauriLankesh

கெளரி லங்கேஷ்

பெங்களூரைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல தரப்பினரும் நீதி கேட்டு குரல் கொடுத்துவருகின்றனர். இந்த நேரத்தில் கெளரி லங்கேஷின் முன்னாள் கணவர் சிதானநத் ராஜ்காட்டா, தனது முகநூல் பக்கத்தில் கெளரி லங்கேஷ் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அந்த உருக்கமான நினைவு வரிகள்... 

கெளரி லங்கேஷ் தனது மரணத்தைப் பற்றி வெளிவரும் இரங்கல் செய்திகளைக் கேட்க நேர்ந்தால்... குறிப்பாக, ஆன்மா, சொர்க்கம் போன்ற வார்த்தைகளைக் கேட்க நேர்ந்தால், வாய்விட்டுச் சிரித்திருப்பார். இல்லாவிட்டாலும் சிரிக்காவிட்டாலும், புன்சிரிப்பையாவது அளித்திருப்பார். ஏற்கெனவே, இந்தப் பூமியில் நிறைய சொர்க்கமும் நரகமும் இருக்கின்றன. நாம் கடவுளைத் தனியாக விட்டுவிடுவோம். மற்றவர்கள்போல அவரிடம் இது வேண்டும் அது வேண்டும் எனக் கேட்க வேண்டாம் என, எங்களின் இளம்பருவத்தில் நாங்கள் முடிவுசெய்துவிட்டோம். 

கெளரி லங்கேஷ்நாங்கள் ஐந்து வருடங்கள் காதலித்து, ஐந்து வருடங்கள் திருமண வாழ்க்கையைக் கழித்து, அதன்பிறகு விவாகரத்தாகி 27 வருடங்கள் ஆகின்றன. ஆனால், இருவரும் ஒருவரையொருவர் புண்படுத்திக்கொள்ளவில்லை. நண்பர்களாக இருந்தோம்; மிகச் சிறந்த நண்பர்களாக! 

இந்தியாவில் பகுத்தறிவு தோன்றிய இடத்தில்தான் நாங்கள் சந்தித்துக்கொண்டோம் - நேஷனல் காலேஜில். நாங்கள் இளம் வயதிலேயே மூடநம்பிக்கைகளை, ஏமாற்றுப் பேர்வழிகளை, சாமியார்களைக் கேள்வி கேட்டோம்; அவர்களைத் தோலுரித்து காட்டினோம். இந்தத் தகவல்களை நான் சொல்வதற்கு காரணம் இருக்கிறது. நாத்திகர்களும் மதச்சார்பற்றவர்களும் மதவெறியாளர்களுக்கு நேரெதிரானவர்கள். 

கல்லூரி படிக்கும்போது என்னுடைய புகைபிடிக்கும் பழக்கத்தை அவர் வெறுத்தார். நான் புகைபிடிப்பதை விட்டிருந்த சமயத்தில், அவர் புகைபிடிக்க ஆரம்பித்தார். ஒருமுறை, என்னைப் பார்க்க அமெரிக்காவுக்கு வந்தார். (என் முன்னாள் மனைவி என்னைப் பார்க்கவருவது வேடிக்கையாக இருக்கிறதல்லவா? ஆனால், அவர் என் முன்னாள் மனைவி என்பதைவிட என் தோழி!). எங்கள் வீட்டில் கார்பெட் தரை போடப்பட்டிருந்ததால், அவரைப் புகைபிடிக்க வேண்டாம் என்று கூறினேன். அது குளிர்காலம் வேறு. எங்களுடைய உரையாடல் இப்படி இருந்தது. 

”என்னை என்ன பண்ணச் சொல்றீங்க? 

“உனக்குப் புகைக்க வேண்டுமானால், மொட்டைமாடிக்குச் சென்று புகைக்கவும்” 

”அங்கு மிகவும் குளிராகவும் பனி கொட்டிக்கொண்டும் இருக்கிறது” 

“அலட்சியம்” 

“உன்னால்தான் நான் புகைக்கத் தொடங்கினேன்” 

“மன்னிக்கவும். நான் உன்னைப் புகைப்பதை நிறுத்தக் கேட்கிறேன்” 

“ஆமாம்! நீ அமெரிக்கனாகவே ஆகிவிட்டாய்” 

“இதற்கு அமெரிக்கனாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஆரோக்கியமாக இரு” 

“நான் உன்னைவிட நீண்ட காலம் வாழ்வேன்” 

"பொய் சொல்லியிருக்கிறாய் கெளரி. 

எங்களுடைய நட்பைக் கண்டு பலரும் குழம்பியிருக்கிறார்கள். இந்தியாவில் பிரிவதும் விவாகரத்து பெறுவதும் கசப்பான, சோகமான முடிவாகக் கருதுகிறார்கள். எங்களுக்கும் இனிமையான காலங்கள் இருந்தன. ஆனால், எங்களுக்கு உயர்ந்த லட்சியங்கள் இருந்ததினால், விலகவேண்டியிருந்தது. நீதிமன்றத்தில் நாங்கள் அருகருகே நின்றுகொண்டிருந்தோம், எங்கள் கைகளைக் கோர்த்த வண்ணம். ‘உங்களுக்கு விவாகரத்து வேண்டுமானால், இருவரும் தனித்தனியாக நில்லுங்கள்’ என்று எங்கள் வழக்கறிஞர் மெதுவாகக் கூறினார். 

விவாகரத்து பெற்றபின்னர், நாங்கள் ஒன்றாக ரெஸ்டாரன்ட் சென்று சாப்பிட்டோம். இருவரும் சிரித்தபடி விடைபெற்றோம். நான் டெல்லிக்குச் சென்றேன், பிறகு மும்பை. அதன்பிறகு வாஷிங்டன். அவர் என்னை ஒவ்வோர் இடத்திலும் வந்து சந்தித்தார். நான் எட்டு வருடங்களுக்கு முன்னால், பெங்களூரில் வசித்தேன். அப்போது அவர், “உனக்கு வீட்டு வேலை செய்ய நிச்சயம் ஒருவர் வேண்டும். நான் ஒருவரை அனுப்புகிறேன். அவர் கணவரை இழந்தவர். அவருக்கு இரண்டுப் பெண் குழந்தைகள். அவர்களின் படிப்புச் செலவை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார். 

இப்போதும் அவர் அனுப்பிவைத்த ராமக்கா எங்களுடன் இருக்கிறார். அவரின் குழந்தைகள் படித்துமுடித்து, வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இப்படி நூறு பேரை உருவாக்கியவர் கெளரி லங்கேஷ். இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே, என் மனம் முழுவதும் அவருடன் பயணித்த நினைவுகளால் நிரம்பி வழிகிறது. இடதுசாரி, இந்துத்துவ எதிர்ப்பாளர், மதச்சார்பற்றவர் இதுபோன்ற பட்டங்களை எல்லாம் மறந்துவிடுங்கள். அவரை நினைக்கும்போது இந்த வரிகள் மட்டுமே மீண்டும் மீண்டும் என் மனத்துக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது... 

அவர் அற்புதமான மனிதி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close