வெளியிடப்பட்ட நேரம்: 00:35 (08/09/2017)

கடைசி தொடர்பு:08:04 (08/09/2017)

’ஓராண்டுக்குள் ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகளுக்கு மூடுவிழா’ - அமைச்சர் அதிரடி

நாடு முழுவதும் உள்ள ஆளில்லா ரயில்வே கேட்டுகளை ஓராண்டுக்குள் மூட ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ரயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டார். 


அதிகரித்துவரும் ரயில் விபத்துகளைத் தடுப்பதற்காக பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடந்தது. ரயில்வே உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் ரயில் விபத்துகளின் முக்கியமான காரணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆளில்லா ரயில்வே கேட்டுகள் மற்றும் இருப்புப் பாதைகளில் ஏற்படும் பழுதுகளே விபத்து ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகளாகக் கூறப்பட்டது. ஆளில்லா ரயில்வே கேட்டுகளை ஓராண்டுக்குள் மூட ரயில்வே வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டார். பனிப்பொழிவுகளால் விபத்து ஏற்படுவதைத் தடுப்பதற்காக ரயில் இன்ஜினில் சக்திவாய்ந்த எல்.இ.டி. விளக்குகள் பொருத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், கன்வென்ஷனல் கோச்சுகள் எனப்படும் பழைய முறை ரயில் பெட்டிகள் தயாரிப்பை நிறுத்திவிட்டு, அதிநவீன ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய எல்.ஹெச்.பி. ரக ரயில் பெட்டிகள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். விபத்துகள் அதிகம்  நடைபெறும் இடங்களில் புதிய இருப்புப் பாதை அமைக்கவும் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. சமீபகாலமாக அதிகரித்து வரும் ரயில் விபத்துகளுக்குக் காரணம், போதிய பாதுகாப்பின்மையே என்று விமர்சனம் எழுந்தநிலையில், இந்த அதிரடி நடவடிக்கைகளை ரயில்வே துறையின் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பியூஷ் கோயல் எடுத்துள்ளார்.