வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (08/09/2017)

கடைசி தொடர்பு:14:30 (08/09/2017)

கெளரி லங்கேஷ் கொலைச் சம்பவம்: துப்புக் கொடுத்தால் பரிசு!

'பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான குற்றவாளிகள்குறித்து துப்புக் கொடுத்தால், 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனக் கர்நாடக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

கெளரி லங்கேஷ்

தீவிர இந்துத்வா விமர்சகராக அறியப்பட்ட கௌரி லங்கேஷ், பெங்களூரு ராஜேஸ்வரி நகர் பகுதியில் வசித்துவந்தார். சமூக ஆர்வலரான கௌரி லங்கேஷ், தீவிர வலதுசாரி எதிர்ப்பாளராக அடையாளம் காணப்பட்டவர். 'லங்கேஷ் பத்திரிகே' என்ற கன்னடப் பத்திரிகையை நடத்திவந்த கௌரி லங்கேஷ், ஆங்கிலம் மற்றும் கன்னடப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதியும் வந்தவர். மதவாதத்துக்கு எதிராக, வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துவந்த கௌரிக்கு, பல்வேறு சமயங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 5-ம் தேதி, ராஜேஷ்வரி நகரில் உள்ள கௌரி லங்கேஷ் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 4 பேர், அவரை சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மதவாதத்தைத் தீவிரமாக எதிர்த்துவந்த கௌரியின் கொலை தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

கர்நாடகாவில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பத்திரிகையாளர் கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டது போன்றே, கௌரி லங்கேஷும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். 'கெளரி லங்கேஷ் கொலைக் குற்றவாளிகள்குறித்து யாரேனும் துப்புக் கொடுத்தால், அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' எனக் கர்நாடக  உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.