வெளியிடப்பட்ட நேரம்: 15:38 (08/09/2017)

கடைசி தொடர்பு:19:51 (08/09/2017)

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் தடை!

தமிழகத்தில், நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்

நீட் தேர்வு குறித்து அறிவிப்பு வந்ததில் இருந்தே, தமிழகத்தில் அதற்கு எதிரான போராட்டங்கள் தொடங்கிவிட்டன. இதனிடையே அரியலூர் அனிதாவின் மறைவையடுத்து, தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. இதையடுத்து, வழக்கறிஞர் ஜி.எஸ். மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், அனிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். அனிதா மரணத்துக்காக நடைபெறும் போராட்டங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல வகுப்புப் புறக்கணிப்பு, சாலை மறியல் போன்ற எந்தப் போராட்டங்களிலும் ஈடுபடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. "கடையடைப்பு, சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். எனவே, தமிழக அரசு சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பொது மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு பிரச்னைகளைக் கையாள வேண்டும். போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இதையடுத்து, வழக்கு விசாரணை வருகின்ற 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.