பத்திரிகையாளர் கொலை விவகாரம்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கண்டனம்!

பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை சம்பவம் தொடர்பாக பா.ஜ.க மீது ராகுல் காந்தி குற்றம் சுமத்தியதுக்கு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரவிசங்கர் பிரசாத்

மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் பெங்களூருவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இதைத்தொடர்ந்து, சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். எளிய மக்களின் உரிமைகள், இந்துத்துவ அரசின் கொடுமைகள் எனப் பல்வேறு தளங்களில் தீவிரமாகக் குரல் கொடுத்தவர் கெளரி லங்கேஷ். 

இச்சம்பவம் குறித்து பல அரசியல் பிரமுகர்கள் தொடர்ந்து கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர். அந்த வரிசையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் கொல்லப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். மற்றொரு பதிவிலும் ராகுல், பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையிலே பதிவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ராகுல் காந்திக்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “விசாரணை முடிவதற்கு முன்னர் இதுபோன்ற கருத்துகளைக் கூறுவது ஒரு அரசியல் தலைவருக்கு அழகல்ல. பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களும் கொல்லப்படுகிறார்கள். அப்போது எல்லாம் இவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?” எனக் கடுமையாகப் பேசியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!