ஆந்திர நதிநீர் இணைப்புத் திட்டம் - வெற்றுக் கூச்சலா, வெற்றிப் பாய்ச்சலா ? - அத்தியாயம் 5 | Episode - 05 - Andhra River Linking

வெளியிடப்பட்ட நேரம்: 20:43 (11/09/2017)

கடைசி தொடர்பு:15:53 (14/09/2017)

ஆந்திர நதிநீர் இணைப்புத் திட்டம் - வெற்றுக் கூச்சலா, வெற்றிப் பாய்ச்சலா ? - அத்தியாயம் 5

விளம்பரத்தில் பச்சை... ஆனால் நிஜத்தில் ??!! 

 ஆந்திர நதிநீர் இணைப்புத் திட்டம்    

 | அத்தியாயம் 1  |  அத்தியாயம் 2 |  அத்தியாயம் 3  |  அத்தியாயம் 4  |

போலவரம் தந்த வலியோடு நாமும், சாம்பல் நிற படிமத்தோடு நம் காரும் பட்டீசீமாவை நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம். கடுமையான வெயில். போலவரத்துக்கு முன்னரே இருக்கும் ஊர்தான் பட்டீசீமா. அதைத் தாண்டித்தான் போலவரம் போனோம் என்பதால், வழி தவறாமல், அதிகம் விசாரிக்காமல் பட்டீசீமா திட்டம் அமையப்பட்டிருக்கும் இடத்தை வந்தடைந்துவிட்டோம். போலவரத்தில் பாதியாவது இருக்கும் என்ற நினைப்பில் வந்துப் பார்த்தால், மொத்தத் திட்டமும் இந்த ஒரு ஷெட் தான் என்று ஒரு நீல நிற ஷீட் போட்ட ஷெட்டைக் காட்டினார்கள். 

உள்ளே சென்று நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, வந்த விஷயத்தைச் சொல்ல,

"ஒரு அஞ்சு நிமிஷம் உட்காருங்க... இன்ஜினீயர வரச் சொல்றேன்" என நம்மிடம் சொல்லிச் சென்றார் அந்தப் பெண்.  

இரண்டே நிமிடத்தில் சிரித்த முகத்தோடு வந்தார் சிரஞ்சீவி. வயது 25. மொத்த பட்டீசிமாவிலும் சிரஞ்சீவி போன்ற இளம் இன்ஜினீயர்கள்தான் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். 

சிரஞ்சீவியோடு பட்டீசீமா நீரேற்று நிலையத்தைச் சுற்றிப் பார்க்கும் முன்னர் பட்டீசீமா திட்டம் குறித்து கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம் .

ஆந்திர நதிநீர் இணைப்புத் திட்டம்

போலவரம் திட்டம் முடிவு பெறக் குறைந்தது ஐந்து அல்லது ஆறு வருடங்கள் ஆகும் என்ற நிலையில், அதற்கிடையில் கடந்த வருடம் “பட்டீசீமா ஏற்றுப் பாசனம்” (Pattiseema Lift Irrigation) எனும் புதுத் திட்டத்தை ஆரம்பித்தார் சந்திரபாபு நாயுடு. அதாவது, கோதாவரியிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து அதைக் கிருஷ்ணாவில் கொண்டு சேர்ப்பதுதான் இந்தத் திட்டத்தின் அடிப்படை. 

இந்த நீரேற்று நிலையத்தில் மொத்தம் 24 பம்ப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பம்ப்பும் தலா 354 கியூசெக்ஸ் (தோராயமாக நொடிக்கு 10 ஆயிரம் லிட்டர்) அளவுக்கான நீரை வெளியேற்றும். 24 பம்ப்புகளின் வழியிலிருந்து வெளியேறும் நீர், 12 பைப்களின் வழி பயணிக்கத் தொடங்கும். 2 பம்ப்புகளுக்கு ஒரு பைப் என்ற விகிதத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பைப்பின் விட்டம் (Diameter) 3.2 மீ, நீளம் (Length) 3.925 கிமீ. 12 பைப்களில் பயணிக்கும் கோதாவரி நீர், பட்டீசீமா நீரேற்று நிலையத்திலிருந்து 1.5 கிமீ தூரத்திலிருக்கும் "வெளியேற்றுத் தொட்டிக்கு" வந்து, அங்கிருந்து வலது முக்கிய கால்வாயில் கலக்கும். போலவரம் திட்டத்துக்காக கட்டப்பட்ட இந்த வலது முக்கிய கால்வாய் (Right Main Canal) தற்போது பட்டீசீமாவுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கால்வாயில் பயணிக்கும் கோதாவரி நீர் 177 கிமீ தூரம் பயணித்து "பவித்ரசங்கமம்" எனப் பெயரிடப்பட்டிருக்கும் இடத்தில் கிருஷ்ணாவில் கலக்கும். 

29-03-2015 - "பட்டீசீமா நீரேற்றுப் பாசனத் திட்டத்திற்கான" அடிக்கலை நாட்டினார் சந்திரபாபு நாயுடு. 

16-09-2015 - இந்த நிலையத்தின் முதல் பம்ப்பை நிறுவினார்கள்.

28-03-2016 - மொத்த திட்டமும் கட்டி முடிக்கப்பட்டது. 

06-07-2016 - முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். 

ஓராண்டிற்குள்ளாகவே கட்டி முடிக்கப்பட்ட திட்டம் என்பதால் இது லிம்கா புக் ஆஃப் ரிக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளது. 24 பம்ப்புகளோடு இயங்கும் இதுதான் ஆசியாவின் மிகப்பெரிய நீரேற்று நிலையம். இந்தத் திட்டம்தான் சமீபகாலங்களில் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்தது. அந்த விளம்பரங்கள் மொத்த ஆந்திராவும் பசுமையில் மிதப்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கியது. திட்டத்தின் முழு முகம் தெரியாத அரைவேக்காடுகள் மூலம் அது எங்கும் பரவியது. நிஜத்தை விடவும் பொய்த்தகவல்களோடு அது பரவியது. அதுதான், முதல் அத்தியாயத்தில் நாம் பார்த்த அந்த தாபா அக்காவை "எங்க பாபுகாரு கின்னஸ் ரெக்கார்டெல்லாம் பண்ணியிருக்காரு..." என்று சொல்ல வைத்தது. தண்ணீருக்காக தவித்துக்கொண்டிருந்தாலும், தான் நம்பும் அரசு, தனக்கான தண்ணீர்த் தேவையை நிச்சயம் பூர்த்தி செய்திடும் என்ற நம்பிக்கையை அவரிடம் விதைத்துள்ளது. வெடிப்புகளால் சிதறுண்ட அந்தக் கால்களில் செருப்புக் கூட இல்லாமல், வெடித்துச் சிதறிய அந்த நிலத்தின் வழி குடம் சுமந்துச் செல்லும் அந்தப் பெண்களுக்கு அதீத நம்பிக்கையைக் கொடுக்கின்றன இந்தப் பொய்ப் பிரசார விளம்பரங்கள். 

ஆந்திர நதிநீர் இணைப்புத் திட்டம்

இது கடுமையான குற்றச்சாட்டாகப்படலாம். ஆனால், உண்மையை அலசி ஆராய்ந்துப் பாருங்கள். ஆந்திர அரசின் ஆவணத்திலிருக்கும் இந்த விளம்பரத்தைப் பாருங்கள். பட்டீசீமா மூலம் கோதாவரி கிருஷ்ணாவோடு இணைந்தால் "இப்படி இருக்கும் ராயலசீமா, அப்படி ஆகிடும்" என்று "சிவாஜி" ரஜினி பாணியில் சொல்கிறது. ஆனால், யதார்த்தத்திலோ சந்திரபாபு நாயுடுவின் செயல்பாடு "நிஜ" ரஜினியை ஒட்டியே இருக்கிறது. கோதாவரி கிருஷ்ணாவோடு இணைந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் ராயலசீமாவின் இன்றைய நிலை என்னவாக இருக்கிறது என்பதை முதல் அத்தியாயத்தில் பார்த்தோம். 

"திட்டம் தொடங்கி ஒன்றரை ஆண்டுகள்தானே ஆகியிருக்கிறது? அதற்குள் எப்படி தீர்வை எட்டிவிட முடியும்?" என்று ஒரு கூட்டம் இதற்கு வக்காலத்து வாங்கலாம். ஆனால், ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். பட்டீசீமாவின் ஆயுளே மூன்றாண்டுகளுக்கும் குறைவுதான். அதன்பின்னர், போலவரம் வந்துவிடும். போலவரம் வந்துவிட்டால் அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்து விடுமா என்பது வேறு விஷயம். ஆனால், பட்டீசீமா அப்போது இருக்காது. ஆனால், வெகுஜன மக்களுக்கு ஒவ்வொரு முறையும் தவறான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களைத் தொடர்ந்து ஏன் ஏமாற்ற வேண்டும்?... இல்லை இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மிச்சமிருக்கின்றன அதற்குள் ராயலசீமா செழித்துவிடும் என்று நம்பச் சொல்லுகிறீர்களா? 

ஆந்திர நதிநீர் இணைப்புத் திட்டம்


ஆந்திர அரசின் ஆவணப்படி,

2015யில் 8.98 டிஎம்சி அளவிற்கான கோதாவரி நீர் கிருஷ்ணாவில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

2016யில் 55.60 டிஎம்சி நீர் கிருஷ்ணா டெல்டாவிற்கு மடைமாற்றப்பட்டு அதன் மூலம் 10.74 லட்சம் எக்கர் நிலத்திற்கு பாசன நீர் கிடைத்துள்ளது. 

25-07-2017 நாள் வரையில் இந்த வருடம் 19.70 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. 

2017யில் ஜூன் மாதமே கோதாவரி நீர் கிருஷ்ணா டெல்டாவை அடைந்துவிட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

ஆவணங்களில் இதைப்படிக்கும்போது மெய்சிலிர்க்கிறதல்லவா? ஆனால், கள நிலவரமோ வேறு மாதிரியானதாக இருக்கிறது. 

ஆந்திர அரசோடு நெருங்கிப் பயணித்தாலும், நினைத்த நேரத்தில், நினைத்த அமைச்சர்களை சந்திக்கும் அளவுக்கான ஆளுமைஆந்திர நதிநீர் இணைப்புத் திட்டம்கொண்ட மனிதராக இருந்தாலும், விமர்சிக்க வேண்டிய விஷயங்களில் ஆந்திர அரசைத் தொடர்ந்து விமர்த்தும், எதிர்த்தும் வருபவர் ஆந்திர விவசாய சங்கத் தலைவர் நாகேந்திரநாத். சந்திரபாபு நாயுடுவோடு பல விஷயங்களில் ஒன்றிணைந்து செயல்பட்டாலும், போலவரம் மற்றும் பட்டீசீமா திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறார். அவரை நேரில் சந்தித்துப் பேசினோம்...

" கடந்த வருடம் 70 சதவிகித அளவுக்கான விவசாய நிலங்களில் விவசாயம் நடைபெற்றன. ஆனால், இந்த வருடம் வெறும் 35 சதவிகித அளவுக்குத்தான் பயிர்களே விதைக்கப்பட்டிருக் கின்றன. அனந்த்பூர் மாவட்டத்தில் வழக்கமாக 20 லட்சம் ஏக்கரில் நிலக்கடலைப் பயிரிடப்படும். இந்த வருடம் வெறும் 1.5 லட்சம் ஏக்கரில்தான் பயிரிடப்பட்டிருக்கின்றன. கிருஷ்ணா டெல்டா விவசாயிகள் பலரும் தண்ணீரில்லாமல், மீன் வளர்ப்பு, இறால் பண்ணை என வெவ்வேறு தொழில்களுக்குச் சென்றுவிட்டனர். இந்த நிலையில், ஏதேதோ கணக்குகளைக் காட்டி, ஆந்திர விவசாயிகள் செழித்து ஓங்குவதுபோல் பிம்பத்தைச் சந்திரபாபு நாயுடு கட்டமைத்திருக்கிறார். 

பட்டீசீமா அவசியமே இல்லாத ஒன்று. கடந்த முறைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தோல்வியுற்றதற்கு முக்கியக் காரணமே, விவசாயம் சார்ந்த பிரச்னைகளை அவர் கையில் எடுக்காததுதான். இந்தத் தடவை அந்தத் தவறு நிகழக் கூடாது என்ற எண்ணத்தில், விவசாயத்தின் மீது அதீத அக்கறை இருப்பதுபோல் செயல்படுகிறார் முதல்வர். நதிநீர் இணைப்பதால் என்ன சூழலியல் பிரச்னைகள் வரும் என்பது இன்றுவரை சரியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால், எங்களுக்குக் கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்பு அவசியம் வேண்டும்.

போலவரம் எங்கள் ஆந்திரத்தின் கனவுத் திட்டம். ஆனால், அதை இந்த அரசாங்கம் செயல்படுத்தும் முறைகளில்தான்  நிறைய கோளாறுகள் இருக்கின்றன. போலவரம் திட்டம் புவிஈர்ப்பு விசையை மட்டுமே பயன்படுத்தி நீரை மடைமாற்றம் செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டத் திட்டம். ஆனால், தற்போது பட்டீசீமாவில் மோட்டார் போட்டு நீரை உறிஞ்சி எடுப்பதெல்லாம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை’’ என்கிறார். 

தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் இந்த போலவரம் திட்டத்துக்கு மாற்றாக ஒரு திட்டத்தையும் முன்வைக்கிறார் நாகேந்திரநாத். அது தற்போது செயல்படுத்தப்படவிருக்கும் திட்டத்தை விடவும் செலவு குறைவானது. இதை இவர் பலமுறை அரசிடம் முன்வைத்தும், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்கிறார். இந்தத் திட்டத்தின் வழி செயல்படுத்தினால், அவர்களுக்கு வரும் கமிஷன் வருமானம் குறைந்துவிடும் என்றும் சொல்கிறார்.  முதலில் பட்டீசீமா திட்டத்துக்கான செலவு 1300 கோடி ரூபாய் என்று அறிவித்திருந்தார். 
பொதுவாக ஒரு அரசு, ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் விடும்போது 5 சதவிகிதம் வரைதான் அந்த நிறுவனம் லாபத் தொகையை எடுக்கலாம். ஆனால், சந்திரபாபு நாயுடு வெளிப்படையாக இந்தத்திட்டத்தை சீக்கிரம் முடிப்பவர்களுக்கு கூடுதலாக 17.25 சதவிகிதம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனால், 5 சதவிகித அளவில் லாபம் பார்க்க வேண்டிய கான்ட்ராக்டர்கள், 22 சதவிகிதம் வரை லாபம் பார்த்தார்கள். திட்டச் செலவும் 1600 கோடியைத் தாண்டிச் சென்றது. 

கோதாவரியில் குறைந்தபட்சமாக 15 அடி அளவை எட்டும் வரை பட்டீசீமா பம்ப்புகள் நீரை எடுக்கும். 15 அடிக்கும் கீழாக நீரின் அளவு சென்றுவிட்டால், நீர் எடுப்பது நிறுத்தப்படும். 
 

இந்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மேலாக ஒரு பெரிய குற்றச்சாட்டை முன்வைக்கிறார் சர்மா எனும் சூழலியலாளர்.

“போலவரம் திட்டம் சரியான முறையில் இந்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதிச் சான்றிதழைப் பெறவில்லை. ஆந்திரா தனியாகப் பிரிக்கப்பட்டதும், இது தேசிய திட்டமாக அறிவிக்கப்பட்டதும் அதற்குரிய தடையில்லா மற்றும் அனுமதிச் சான்றிதழ்களை வாங்க வேண்டும். அதை இவர்கள் சரியாகச் செய்யவில்லை. மேலும், போலவரம் திட்டத்தின் காசை எடுத்து பட்டீசீமா திட்டத்துக்கு செலவழித்துள்ளார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, போலவரத்துக்கு வாங்கிய அனுமதிச் சான்றிதழ்களைக் கொண்டே பட்டீசீமாவையும் கட்டிமுடித்துள்ளார்கள். இதன் அர்த்தம் பட்டீசீமாவுக்கு இவர்கள் எந்த துறையின் அனுமதியையும், சுற்றுச்சூழல் துறையின் தடையில்லாச் சான்றிதழையும் வாங்கவேயில்லை என்பதுதான்." என்பதோடு அதற்கான அத்தனை ஆவண ஆதாரங்களையும் எடுத்துக்காட்டுகிறார். 

அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் நாகேந்திரநாத் கேட்டார், “அரசின் சார்பில் யாரையாவது சந்திக்கிறீர்களா?”

“நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டிருக்கோம்.” என்று சொன்னோம்.

தன் போனை எடுத்து நீர்வளத்துறை அமைச்சரின் உதவியாளரிடம் பேசினார். அமைச்சர் ஐதராபாத்திலிருந்து வந்துகொண்டிருப்பதாகவும் அன்று மாலையே அவரைப் பார்க்க ஏற்பாடு செய்து தருவதாகவும் சொன்னார். 

மாலை 4 மணியளவில் நீர்வளத்துறை அமைச்சர் அலுவலகத்தைச் சென்றடைந்தோம். மணி பத்தாகியிருந்தது. அவரைப் பார்ப்பதற்காகத் தொடர்ந்து காத்திருந்தோம்... 
                                                                                                                                                                                           ( உண்மை தேடலாம்)


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்