வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (12/09/2017)

கடைசி தொடர்பு:10:25 (12/09/2017)

''ஸ்டாலின், அகிலேஷ் அரசியல் வாரிசுகள்தாம்'' - ராகுல் காந்தி பேச்சு

'ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் ஆகியோரும் அரசியல் வாரிசுகள்தாம். என்னை மட்டும் ஏன் கேட்கிறீர்கள்' என கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி கேள்வி.


கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “ இன்று அமைதிக்கு எதிராகத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. வெறுப்பு, கோபம் மற்றும் வன்முறை நம்மை அழித்துவிடும். நான், எனது பாட்டி மற்றும் தந்தையை வன்முறையால் இழந்தவன். என்னைவிட யார் வன்முறையைச் சிறப்பாகப் புரிந்துகொள்ள முடியும்? 

காங்கிரஸின் கொள்கை, உரையாடல்கள்மூலம் நிகழ்த்தப்படுவது. அது திணிக்கப்படுவது இல்லை. வாரிசு அரசியல் பற்றி என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். உலகின் பல நாடுகளில் இது நடப்பதுதான். ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் போன்றோரும் அரசியல் வாரிசுகள்தாம். 

பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த 1,000 பேர் கணினி முன்பு இருந்துகொண்டு, என்னைப் பற்றி உங்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்னைப் பற்றி தவறான கருத்துகளைக் கூறுகிறார்கள். நாட்டை வழிநடத்துபவர்தான் இந்த 1,000 பேரையும் வழி நடத்துகிறார். 
நான், ஒன்பது வருடங்களாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சிதம்பரம், ஜெயராம் ரமேஷ் போன்றோருடன் காஷ்மீர் பிரச்னையின் போது உடன் இருந்துள்ளேன். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, காஷ்மீரில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை ஒழித்தோம். ஆனால் இன்று, காஷ்மீரில் வன்முறைகள் அதிகரித்துவிட்டன” என்றார்.