Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பள்ளிக்குள் கழுத்தறுத்து கொல்லப்பட்ட 7 வயது மாணவர்..! - கொந்தளிக்கும் அரியானா

Hand

மிழ்நாட்டு வீதிகளில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் அனல்பரப்பிக்கொண்டிருக்கும் அதேவேளையில் ஹரியானா மாநிலம் குர்கானில், ரயான் இன்டர்நெஷனல் பள்ளிக்கு (சி.பி.எஸ்.இ பள்ளி) எதிராக அம்மாநில மக்கள்  கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். கடையடைப்பு, தீவைப்பு, போலீஸ் தடியடி என்று உக்கிரமாகக் காட்சி தருகிறது அப்பகுதி. கடந்த வெள்ளிக்கிழமை, இரண்டாம் வகுப்புப் படிக்கும் ஏழு வயது பிரதுமான் எனும் மாணவன், பள்ளிக்கூடக் கழிவறையில் கழுத்து அறுபட்டு பிணமாகக் கிடந்ததே ஒட்டுமொத்த பெற்றோர்களையும், பொதுமக்களையும் கொந்தளிக்கச் செய்தது. "எப்பவும் சிரிச்சுக்கிட்டு சந்தோஷமா இருப்பான். இன்னைக்கு அவனைப் பிணமாகப் பார்க்க முடியல. சின்னப் பிஞ்சுன்னுகூட பார்க்காம, கழுத்தை அறுத்துக் கொன்னுருக்காங்களே"  சிறுவனின் தந்தை வருண் தாக்கூரின் கதறல், அந்தப் பள்ளி வளாகம் முழுவதையும் உலுக்கியது.

சிறுவனைக் கொன்றது யார்?

பள்ளி இருந்த பகுதியில் நிலைமை மோசமடைந்ததையொட்டி, குர்கான் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். ஆசிரியர்கள், பள்ளியில் பணியாற்றும் ஊழியர்கள் என அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். பிரதுமான், உடன் படித்த மாணவர்களையும் விசாரித்தனர். கொல்லப்பட்ட சிறுவனின் ரத்த மாதிரி, அவன் கொல்லப்பட்டு கிடந்த இடத்தில் இருந்த கைரேகை ஆகியவற்றைப் பரிசோதனை செய்தனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியைக் கைப்பற்றி அதையும் ஆய்வகத்திற்கு அனுப்பினர் போலீஸார். அங்கிருந்த 30-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் வைத்து விசாரணை செய்து, இறுதியாக அந்தப் பள்ளியின் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிய அசோக்குமாரை (42) கைது செய்தனர். 

எதற்காக நடந்த கொலை?

"கழிவறையில் பிரதுமான் தனியாக இருந்தான். சிறுவனை பாலியல்ரீதியாக நெருங்கினேன். அதற்கு ஒத்துழைக்க மறுத்து தப்பியோட அவன் முயற்சி செய்யவே, அவனைக் கீழே தள்ளினேன். அவனுக்கு அடிபட்டவுடன் பயந்துபோய் அவன் கழுத்தை அறுத்துக் கொன்றேன். கத்தியை அங்கேயே கழுவி தூக்கிப் போட்டுவிட்டு வந்தேன்" என்று அசோக்குமார் வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. மேலும், "சிறுவனைக் கொலை செய்துவிட்டு, எதுவும் தெரியாததுபோல் மற்றவர்களுடன் சேர்ந்து, பிரதுமானைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார் அசோக்குமார். கழிவறைக்குள் அசோக்குமார் சென்றதை சில மாணவர்கள் பார்த்துள்ளனர். கேமராவிலும் அது பதிவாகியுள்ளது" என்கின்றனர் காவல்துறையினர்.

வெடித்த வன்முறை!

அதேநேரம், “காவல்துறையின் விசாரணையில் நம்பகத்தன்மையில்லை; பள்ளியின் அலட்சியமும், அங்கு வேறு ஏதோ மறைந்திருக்கும் மர்மமும்தான் எங்கள் மகனைக் கொன்றுவிட்டது. எனவே வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்" என்கின்றனர் சிறுவனின் பெற்றோரும், பிற மாணவர்களின் பெற்றோர்களும். இந்தக் கோரிக்கையோடு பள்ளிக்கூடத்தின் முன் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களின் போராட்டம் ஒருகட்டத்தில் உச்சமடைந்தது. பள்ளியருகே இருந்த மதுக்கடைக்குத் தீவைத்துக் கொளுத்தும் அளவுக்குச் சென்றது அந்தப் போராட்டம். பள்ளியின் வகுப்பறைகள் அடித்து நொறுக்கப்பட்டன. மிகப்பெரிய வன்முறையாக வெடிக்கவே, போலீஸார் தடியடிப் பிரயோகம் நடத்தினர். இதில் இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

 

கைது

விளக்கமளித்த கல்வி அமைச்சர்!

நிலைமை மோசமடைந்ததை ஒட்டி, தன் அரசின் மீதான விமர்சனங்களை முறியடிக்கும் வேலையில் இறங்கியது ஹரியானாவில் ஆளும் பி.ஜே.பி அரசு. ஊடகங்களிடம் பேசிய அம்மாநில கல்வி அமைச்சர் ராம் பிளாஸ் ஷர்மா, "மாணவர் பிரதுமான் கொலை மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. காவல்துறை விரைந்து செயல்பட்டுக் குற்றவாளியைக் கைது செய்துள்ளது. பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும். இதில் யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களால் தப்பிக்க முடியாது. அதையும் மீறி, அந்தச் சிறுவனின் பெற்றோருக்கு மாநில அரசின் விசாரணையில் திருப்தி இல்லை என்றால், அவர்கள் கேட்கும் சி.பி.ஐ விசாரணைக்கும் உத்தரவிட மாநில அரசு தயாராகவே உள்ளது" என்று நீண்ட விளக்கமளித்துள்ளார்.

குற்றத்தை மறுக்கும் அசோக்குமார் தரப்பு!

இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் ஓட்டுநர் சவுரப்  ராகவ்.

"என்னை விசாரித்த போலீஸார், எங்கள் பேருந்து டூல்-கிட்டில் இந்த கத்தியையும் வைத்திருந்ததாக என்னை வாக்குமூலம் கொடுக்கும்படி மிரட்டினர். அப்போது போலீஸுடன் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள் சிலரும் இருந்தனர். ஆனால், உண்மையில் எங்கள் டூல்-கிட்டில் கத்தி வைத்திருக்கவில்லை. அசோக்குமார் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல், இயல்பாகத்தான் இருந்தார். ஒரு கொலை செய்தவரால் எப்படி அவ்வாறு இருக்கமுடியும்?" என்று பத்திரிகையாளர்களிடம் கேள்வி எழுப்பினார் அவர். மாணவனின் தந்தை வருண் தாக்கூர், "என் மகனை காலை 7.55-க்கு பள்ளியில் விட்டுவிட்டுத் திரும்பினேன். மெயின் கேட்டுக்கும், உள்ளேயுள்ள மெயின் பள்ளிக்கும் சுமார் 500 மீட்டர் தொலைவு இருக்கும். அதைக் கடக்க சுமார் ஐந்து நிமிடங்களாவது ஆகும். 8 மணிக்கு கழிவறை சென்றவன், 8.10-க்கு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளான். இடைப்பட்ட இந்த நேரத்துக்குள் துரத்திச் சென்று அசோக்குமார் கொன்றாரா?  இல்லையென்றால் கழிவறைக்குள்ளேயே காத்திருந்து கொன்று இருக்க வேண்டும். எனவே, போலீஸாரின் தகவலில் எங்களுக்கும் சந்தேகம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

சி.பி.எஸ்.இ பள்ளியான ரயான் இன்டர்நெஷனல் பள்ளியின் வட இந்தியப் பொறுப்பாளர் ஃபிரான்சிஸ் தாமஸ், மனிதவள ஆற்றல் பிரிவின் ஜியூஸ் தாமஸ் ஆகியோரை சிறுவர் சீர்திருத்த சட்டப் பிரிவு 75-ன் கீழ் கைது செய்துள்ளது மாநில அரசு. பள்ளியின் சி.இ.ஓ ரயான் பின்டோ, மும்பை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் உச்ச நீதிமன்றம், மாணவனின் கொலை தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய - மாநில அரசுகளுக்கும், சி.பி.எஸ்.இ நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போது அந்தப் பள்ளி மூடப்பட்டுள்ளது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இருந்தாலும் நிலைமை இன்னமும் சீராகவில்லை. பதற்றமான சூழ்நிலையே தொடர்ந்து நிலவுகிறது. 

அந்த மாணவனின் கொலைக்குப் பின்னால் உள்ள மர்மம் தொடர்கிறது.... உண்மையான காரணம் என்ன என்பதை போலீஸார் கண்டுபிடிப்பார்களாக என்பதே பெற்றோர் மட்டுமல்லாது, பொதுமக்களின் எண்ணமாக உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close