“காஷ்மீர் பிரச்னைக்காக யாரையும் சந்திப்பேன்!'' ராஜ்நாத் சிங் | We need to resolve Kashmir issue, says Rajnath Singh

வெளியிடப்பட்ட நேரம்: 19:57 (12/09/2017)

கடைசி தொடர்பு:19:57 (12/09/2017)

“காஷ்மீர் பிரச்னைக்காக யாரையும் சந்திப்பேன்!'' ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

“காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக அதில் விருப்பம் கொண்டுள்ள யாரை வேண்டுமானாலும் சந்தித்துப் பேசத் தயாராக இருக்கிறேன்'' என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

ந்தியாவின் மிக அழகான மாநிலங்களில் காஷ்மீரும் ஒன்று. அந்த மாநில நிலப் பகுதிகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக  நமது நாடும், நமது அண்டை நாடான பாகிஸ்தானும் அடிக்கடி மோதி வருவது குறிப்பிடத்தக்க ஒன்று. இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரச்னை, சுதந்திரம் அடைந்த நாள்முதல் இன்றுவரை தீர்க்கப்படாததாகவே இருக்கிறது. இது, ஒருபுறமிருக்க... மறுபுறம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 8-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான புர்ஹான் வானி, இந்தியப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு காஷ்மீரில் வன்முறை வெடித்தது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த வன்முறைச் சம்பவத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதன் விளைவாகக் காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு பெரும்பாலான இடங்களில் கடைகள், பெட்ரோல் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள்,  தனியார் வர்த்தக நிறுவனங்கள் போன்றவை சில மாதங்கள் மூடியே கிடந்தன. குறிப்பாக, நான்கு மாதங்களுக்குப் பிறகு காஷ்மீர் சாலைகளில் பயணிகள் வாகனங்கள் ஓடத்தொடங்கியதும், காஷ்மீர் பள்ளிகளில் ப்ளஸ் டூ தேர்வுகளும், பத்தாம் வகுப்பு தேர்வுகளும் தொடங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் நிலவிய பதற்றத்தைத் தணிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு கடந்த ஆண்டு செப்டம்பர்  3-ம் தேதி காஷ்மீர் சென்றது. அப்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், ''காஷ்மீர் நிலை குறித்து ஒவ்வொருவரும் வேதனைப்படுகிறார்கள். அங்கு உள்ள நிலைமையைச் சீராக்கவே நாங்கள் அனைவரும் முயற்சி செய்துவருகிறோம்.

ஜம்மு - காஷ்மீர், இந்தியாவின் உள்ளடக்கிய பகுதி என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. காஷ்மீர் இந்தியாவின் பகுதியாகவே உள்ளது. இனியும் இந்தியாவின் பகுதியாகவே இருக்கும். காஷ்மீரில் நிச்சயம் அமைதி ஏற்படும் என நம்புகிறேன். சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு காஷ்மீர் விவகாரம் குறித்து யார் பேச விரும்பினாலும் அவர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் 300-க்கும் மேற்பட்ட மக்களைச் சந்தித்துள்ளோம். காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புவதற்கு மாநில அரசுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்துவருகிறோம். பிரிவினைவாதிகளுடன் பேசச் சில உறுப்பினர்களை அனுப்பினோம். ஆனால், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டனர். பிரிவினைவாதிகள் விரும்புவது காஷ்மீரத்தை மட்டுமே... மனிதநலத்தை அல்ல. வன்முறைகளைத் தொடர்ந்து கையில் எடுப்பவர்களுக்கு எனது அறிவுரை என்னவென்றால், பேச்சுவார்த்தை மட்டுமே முன்னேற்றத்துக்கான ஒரே வழி. பிரிவினைவாதத் தலைவர்களை அழைத்துப் பேச வேண்டும் எனச் சில கட்சிப் பிரதிநிதிகள் கூறுகிறார்கள். அதை நாங்கள் ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. பெல்லட் குண்டுகளுக்குப் பதிலாக மிளகாய்ப் பொடி கொண்ட கையெறி குண்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் யாரையும் கொல்லவோ, படுகாயம் ஏற்படுத்தவோ இல்லை'' என்றார்.

அந்தக் குழுவில் தி.மு.க-வின் சார்பில் இடம்பெற்றிருந்த மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா, ''காஷ்மீர் வீதிகளில் ஆயுதம் தாங்கிய காவலர்கள், ஆள்நடமாட்டம் அற்ற வீதிகள், வெறிச்சோடிக் கிடைக்கும் கடைகள், கோபாமாகத் திரியும் இளைஞர்கள் என்ற நிலை மாறி பரபரப்பான வீதிகள், சுற்றுலாப் பயணிகள், அங்கிருக்கும் ஆண்களும், பெண்களும் கையில் குல்மோஹர் மலர்களோடு நடமாடும் சூழல் வர வேண்டும்'' என்று தன் ஆசையைத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அந்தச் சம்பவம் நடந்துமுடிந்து ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில்,  ''நிலைமை நன்கு மேம்பட்டு உள்ளதால் காஷ்மீருக்கு வெளிநாட்டவர்கள் சுற்றுலா வரவேண்டும்'' என்று ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். நான்கு நாள் பயணமாகத் தற்போது காஷ்மீருக்குச் சென்றுள்ள ராஜ்நாத் சிங், அங்குள்ள பள்ளத்தாக்குப் பகுதிகளைப் பார்வையிட்டார். பின்னர், போலீஸ் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் அவர் கலந்துரையாடினார். ஜம்முவைப் பார்வையிடுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், '' ‘அமைதியற்ற சூழல் நிலவுவதால் காஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ளது. யாரும் அங்கு சுற்றுலா செல்லவேண்டாம்' என்று இந்தியர்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், நான் காஷ்மீருக்குப் பயணமாக வந்தபிறகு, உலக சுற்றுலாப் பயணிகளுக்கும், சுற்றுலா ஏஜெண்டுகளுக்கும் காஷ்மீருக்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். கடந்த ஓராண்டாக இங்கு நிலைமை மிகவும் நன்றாக மேம்பட்டு உள்ளது. இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இங்குவரும் சுற்றுலாப் பயணிகளைக் காஷ்மீர் மக்கள் வரவேற்கத் தயாராக வேண்டும். பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதால், முதலீட்டாளர்களும் இங்கு தொழில் முதலீடுகளைச் செய்யவேண்டும். இதனால் மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். காஷ்மீரில் சுற்றுலாத் துறையை வளர்ச்சியடையச் செய்வதற்கு மத்திய அரசு விரைவில் சிறப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்'' என்றார். தொடர்ந்து நிருபர்கள், ''காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருக்கிறதா'' என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ராஜ்நாத் சிங், “காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக அதில் விருப்பம் கொண்டுள்ள யாரை வேண்டுமானாலும் சந்தித்துப் பேசத் தயாராக இருக்கிறேன். இதில் முறையான சந்திப்பு, முறையற்ற சந்திப்பு என்ற கேள்விக்கே இடமில்லை. பேச்சுவார்த்தையை விரும்புபவர்கள் அதற்கு முன்வரவேண்டும். இதில் நான் திறந்த மனதுடன் இருக்கிறேன்” என்றார். 

காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் விருப்பமாக உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்