''வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் புல்லட் ரயில்!'' - நனவாகிய மோடியின் கனவு!  | 'Bullet train implemetation will increase employment opportunities' - PM Modi

வெளியிடப்பட்ட நேரம்: 17:28 (14/09/2017)

கடைசி தொடர்பு:17:28 (14/09/2017)

''வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் புல்லட் ரயில்!'' - நனவாகிய மோடியின் கனவு! 

ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே... இந்தியப் பிரதமர் மோடி

PIC Credits : ANI

ளர்ச்சியடைந்த நாடுகளில் இயக்கப்படும் புல்லட் ரயில்போல இந்தியாவிலும் அதிவேக புல்லட் ரயில் சேவையைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில், ஜப்பான் உதவியுடன், அகமதாபாத் - மும்பை வழித்தடத்தில் நாட்டிலேயே முதல்முறையாக இயக்கப்படவுள்ள புல்லட் ரயில் திட்டத்துக்கு பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேவும் இன்று அடிக்கல் நாட்டினர். 

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தபின், தாக்கல் செய்யப்பட்ட முதல் ரயில்வே பட்ஜெட்டில், 'இந்தியாவில் அதிவேக புல்லட் ரயில் இயக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் ரயில்வே துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பியூஷ் கோயல் நேற்று (13-9-17) செய்தியாளர்களிடம் பேசியபோது, ''நாட்டின், முதல் புல்லட் ரயிலை இயக்குவதற்கான பணிகள் நாளை (இன்று) தொடங்க இருக்கின்றன. அகமதாபாத்தில் நடக்கும் இந்த விழாவில், பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேவும், புல்லட் ரயில் பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டுகின்றனர்'' என்று தெரிவித்தார். அதன்படி, இந்தப் புல்லட் ரயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க ஜப்பான்  பிரதமர் ஷின்ஷோ அபே நேற்று குஜராத் வந்தார். அவருக்குச் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், மோடி விரும்பி அணியும் குர்தா உடை ஜப்பான் பிரதமருக்கும் வழங்கப்பட்டு, அவர் அந்த உடையில் தோன்றினார். 

இந்நிலையில், இன்று (14-9-17) காலை அகமதாபாத்தில் நடைபெற்ற புல்லட் ரயில் திட்ட அடிக்கல்நாட்டு விழாவில் மோடியும், ஷின்ஷோ அபேவும் கலந்துகொண்டு உரையாற்றினர். 

புல்லட் ரயிலின் சிறப்பம்சங்கள்!

இந்தியாவிலேயே முதல்முறையாகச் செயல்படுத்தப்பட உள்ள இந்தப் புல்லட் ரயில் திட்டமானது, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து மகாராஷ்டிர தலைநகர் மும்பைவரை இயக்கப்பட இருக்கிறது. இத்திட்டம் 1,10,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கான 81 சதவிகிதத் தொகையை (88 ஆயிரம் கோடி ரூபாயை) 0.1 சதவிகித  வட்டியில் ஜப்பான் அரசு கடனாக வழங்குகிறது. அகமதாபாத்திலிருந்து 508 கி.மீ தொலைவில் உள்ள மும்பையை இந்தப் புல்லட் ரயில், இரண்டு மணி நேரம் ஏழு நிமிடங்களில் கடக்கும். புல்லட் ரயிலின் வேகம் மணிக்கு 320 கி.மீ. ஆகவும் அதிகபட்ச வேகம் 350 கி.மீ. ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சபர்மதி, வதோதரா உள்ளிட்ட மொத்தம் 12 ரயில் நிலையங்களில் நின்றுசெல்லும் இந்தப் புல்லட் ரயில், 92 சதவிகிதத் தூரத்தை மேம்பாலத்திலும், 6 சதவிகிதத் தூரத்தைச் சுரங்கப்பாதை வழியாகவும், 2 சதவிகிதத் தூரத்தை தரைத்தளத்திலும் கடக்கும். 21 கி.மீ தூரம்வரை சுரங்கப்பாதையில் செல்லும் இந்தப் புல்லட் ரயில், அதில் 7 கி.மீ தூரம் வரை கடலுக்கு அடியில் பயணிக்கும். மோடியின் கனவுத் திட்டமான இந்தப் புல்லட் ரயில் திட்டம் வரும் 2022-ம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

''முடியாதது எதுவுமில்லை!''

இந்த விழாவில் பேசிய ஷின்ஷோ அபே, 'நமஸ்கார்' என்று ஆரம்பித்து தன் உரையைத் தொடங்கினார். ’'இந்தியா - ஜப்பான் உறவில் இன்று மிக முக்கியமான நாள். தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியப் பிரதமர் மோடி திட்டங்களை அமல்படுத்துகிறார். இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்குப் புல்லட் ரயில் திட்டம் அடையாளமாகத் திகழும். அடுத்தமுறை நான் இந்தியா வரும்போது மோடியுடன் இணைந்து புல்லட் ரயிலில் பயணிக்க விரும்புகிறேன். 'மேக் இன் இந்தியா' திட்டத்தின்கீழ் இந்தியாவில் பொருள்களை உற்பத்தி செய்ய ஜப்பான் ஆர்வமாக உள்ளது. இந்தியாவும் ஜப்பானும் இணைந்து பணியாற்றினால் முடியாததென எதுவுமில்லை. இந்தியாவை, குறிப்பாக குஜராத் மாநிலத்தை நான் மிகவும் விரும்புகிறேன். இந்தியாவுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும்செய்வேன். ஜப்பானில் புல்லட் ரயில் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, எந்த ஒரு விபத்தும் நடைபெறவில்லை. புல்லட் ரயில் தொழில்நுட்பம் இந்திய ரயில்வே அமைப்புக்கு எவ்வாறு உதவும் என்பதை ஜப்பான் அறிந்துள்ளது. உலகளாவிய உற்பத்தி முனையமாக இந்தியா உள்ளது. ஜப்பான்போல இந்தியாவும் பொருளாதாரத்தில் வளர்ச்சியடையும். இந்தியாவுக்குப் பாதுகாப்பான பயணம் அளிக்க உறுதியளிக்கிறோம்'' என்றார்.

''வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்!''

அவரையடுத்துப் பேசிய மோடி, ''இந்திய - ஜப்பான் உறவில் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். ஒரு நாட்டின் வளர்ச்சிக்குப் போக்குவரத்து மிக முக்கியம். 1964-ல் புல்லட் ரயில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஜப்பானின் வளர்ச்சி அதிவேகமானது. சர்வதேச அரங்கில் பிற நாடுகளுடன் போட்டிபோட புல்லட் ரயில் போன்ற நவீன வசதிகள் தேவை. சுற்றுச்சூழலை எந்தவகையிலும் இந்தப் புல்லட் ரயில் திட்டம் பாதிக்காது. இதற்குத் தனிப்பட்ட முறையில் ஷின்ஷோ அபே, ஆர்வம் காட்டுகிறார். இதில், எந்தக் குறையும் இருக்காது என்று உறுதி அளித்திருக்கிறார். குஜராத், மகாராஷ்டிரா மட்டுமல்ல; நாடே வளர்ச்சி அடைய புல்லட் ரயில் திட்டம் உதவும். இந்தியாவில் விரைவாகப் புல்லட் ரயில் கொண்டுவர உதவிய ஷின்ஷோ அபேவுக்கு நன்றி. இந்தியாவின் மிகச்சிறந்த நட்பு நாடாக ஜப்பான் எப்போதும் இருக்கும். இந்தியாவின் உண்மையான நண்பன் ஜப்பான் என்பது இந்த மேடையில் நிரூபணம் ஆகியுள்ளது. புல்லட் ரயில் திட்டம்மூலம் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்'' என்றார். 

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, மோடி அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான, ஜப்பான் நிதியுதவியுடன் புல்லட் ரயில் திட்டத்துக்கு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஷின்ஷோ அபே-யுடனான நட்பு, இந்தியா - ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான நல்லுறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்