வெளியிடப்பட்ட நேரம்: 20:37 (14/09/2017)

கடைசி தொடர்பு:20:37 (14/09/2017)

தமிழகத்தில் தொழில் நகரம் அமைக்கப்படும்..! மோடி அறிவிப்பு

தமிழகம் உள்பட நான்கு மாநிலங்களில் தொழில் நகரங்கள் உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 


ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று பிரதமர் நரேந்திர மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் இணைந்து இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினர். அதன்பின்னர், காந்தி நகரில் நடைபெற்ற இந்தியா- ஜப்பான் உச்சி மாநாட்டில் மோடியும், ஷின்சோ அபேவும் கலந்துகொண்டனர். அதில் பேசிய மோடி, 'எனக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு பத்து ஆண்டுகளைக் கடந்தது. நான் ஒரு சிறிய ஜப்பான் இங்கு உருவாக வேண்டும் என்று நினைக்கிறேன்.

அந்தக் கனவு விரைவில் நிறைவேறும். வாரணாசி மாநாட்டு மையத் திட்டம் ஜப்பானின் கோய்டோ நகரத்துக்கும் வாரணாசிக்கும் இடையிலான கலசார உடன்பாட்டுக்கான அடையாளமாகும். ஜப்பான் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான வளங்கள் இந்தியாவில் இருக்கின்றன. 21-ம் நூற்றாண்டு ஆசியாவுக்கான நூற்றாண்டாக இருக்கும் என்று நான் உறுதியாக சொல்கிறேன். ஆசியா தற்போது உலக வளர்ச்சியின் மையமாக வளர்ந்துவருகிறது. தமிழகம், குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் ஜப்பான் நிறுவனங்களின் தொழில் நகரங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார்.