’என் மகனை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்?’: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் கேள்வி!

'ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் என்னிடம் விசாரியுங்கள், என் மகனைத் தொந்தரவு செய்யாதீர்கள்' என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

ப.சிதம்பரம்

ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கிய விவகாரத்தில், அந்நியச் செலாவணி நிதிப் பரிவர்த்தனை முறைகேடு நடந்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உட்பட ஆறு பேருக்கு எதிராக டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அது தொடர்பான விசாரணை, தற்போது வரை நடைபெற்றுவருகிறது.

ஏர்செல் நிறுவனத்தில் ரூ.4 ஆயிரம் கோடியை முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் ஒப்புதலைக் கடந்த 2005-ம் ஆண்டு, மேக்சிஸ் நிறுவனம் கோரியிருந்தது. ஒப்புதல் தரவேண்டிய இந்த வாரியத்துக்கு நிதி அமைச்சராக இருப்பவர்தான் தலைவர். அப்போது நிதி அமைச்சராக இருந்தவர், ப. சிதம்பரம். மேக்சிஸ் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக அவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்பட்டது.

மேக்சிஸ் நிறுவனத்தின் ஒப்புதல் நிலுவையில் இருந்த நிலையில், ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் திடீரென சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலைக்குக் கைமாறின. அதன்பின், கடந்த 2006-ம் ஆண்டு, மேக்சிஸ் நிறுவனம் முதலீட்டுக்கு ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்த நிலையில், இந்தப் பங்குகளும் பெருந்தொகைக்கு விற்பனையாயின. இப்படியாகக் கடைசி நேரத்தில் ஏர்செல் பங்குகள் குறைந்த விலைக்குக் கைமாறியதே ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு என்று அப்போது சில செய்திகள் கசிந்தன.

இதுதொடர்பான வழக்கு விசாரணை குறித்து ப.சிதம்பரம் கூறுகையில், “ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் சி.பி.ஐ தவறான தகவல்களைப் பரப்புவது வருத்தமளிக்கிறது. அந்நிய நேரடி முதலீட்டு வாரியத்தின் பரிந்துரையை ஏற்று, திட்ட ஒப்பந்தத்துக்கு நான்தான் அனுமதி அளித்தேன். ஆனால், இது தொடர்பான விசாரணையில் என்னை விசாரிக்காமல் என் மகனைத் தொந்தரவு செய்யாதீர்கள்” எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!