வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (15/09/2017)

கடைசி தொடர்பு:15:20 (15/09/2017)

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பா.ஜ.க சொல்லும் ஏழு காரணங்கள்!

ந்தியாவில் கடந்த சில நாள்களாக பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருவதற்கு பா.ஜனதா ஏழு காரணங்களைத் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கும் முடிவு முதலில் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் தினசரி கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து பெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு தற்போது தினமும் பெட்ரோல் டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. 

சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஆளும் பா.ஜ.க மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. இந்நிலையில் தற்போது ஏற்படுள்ள இந்த விலை ஏற்றத்துக்கு மத்திய அரசு மட்டும் காரணம் இல்லை எனவும், அதற்கு ஏழு காரணங்களும் தெரிவித்துள்ளது. 

1. பெட்ரோல், டீசலின் சில்லறை விலை சர்வதேச தயாரிப்பு விலைகளோடு இணைக்கப்பட்டதாகும்.
2. ஹார்வி மற்றும் இர்மா புயலால் தற்போதைய சர்வதேச தயாரிப்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு திறன் 13% குறைந்துள்ளது.
3. சர்வதேசச் சந்தையில் பெட்ரோலைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவு 3 மாதங்களில் 18% உயர்ந்துள்ளது,
4. சர்வதேசச் சந்தையில் டீசல் கொண்டு போவதற்கான போக்குவரத்துச் செலவு 3 மாதங்களில் 20% உயர்ந்துள்ளது
5. கடந்த ஜுலை 1 முதல் செப்டம்பர் 13 வரையில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 13% உயர்ந்துள்ளது.
6. பல மாநிலங்கள் பெட்ரோல் / டீசல் மீதான வாட் வரியைக் கடுமையாக உயர்த்தியுள்ளது. (உதாரணம்: கேரளா 26% லிருந்து 34% வரை, டெல்லி 20% லிருந்து 27 % வரை பெட்ரோல் மீதான வாட் வரியை உயர்த்தியுள்ளது.)
7. கலால் வரியில் 42% தொகை மாநில அரசின் உள்கட்டமைப்பு மற்றும் நலத்திட்டங்களுக்காக அளிக்கப்படுகிறது. 

மேலும் சில ஊடகங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாகக் கூறியுள்ளனர். ஆனால், கடந்த 2013 -ம் ஆண்டு செப்டம்பர் 76.06 என்பதுதான் இந்தியாவில் அதிகபட்ச பெட்ரோல் விலை ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது.