நிர்பயா நிதி... பாதிக்கப்பட்ட பெண்கள் உண்மையிலேயே பயன்பெறுகிறார்களா? டேட்டா இதோ! | Is Nirbhaya fund reaching the needy

வெளியிடப்பட்ட நேரம்: 20:24 (15/09/2017)

கடைசி தொடர்பு:14:39 (16/09/2017)

நிர்பயா நிதி... பாதிக்கப்பட்ட பெண்கள் உண்மையிலேயே பயன்பெறுகிறார்களா? டேட்டா இதோ!

child abuse

சென்னை, போரூர் அருகே கடந்த பிப்ரவரி மாதம் ஏழு வயது சிறுமி ஹாசினி வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தஷ்வந்த் என்ற இளைஞர் கைதுசெய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது. இதனால், ஹாசினியின் பெற்றோர் கடும் வேதனை அடைந்துள்ளனர்.  

இதுபோன்ற உத்தரவுகளால், சட்டத்தின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவார்கள் என்று தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். 

நிர்பயா தொடங்கி ஹாசினி வரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடந்துவரும் வன்முறைகள் நின்றபாடில்லை. இதுபோன்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்காக அரசு என்னவிதமான நிதியை அளித்து வருகிறது என்பது பலரும் அறியாமல் உள்ளனர். அதுகுறித்து பார்ப்போம்.

'நிர்பயா' என்ற பெயரைச் சொன்னதுமே, ஆவேசமும் அழுகையும் வரும். அந்த அளவுக்கு 2012-ம் ஆண்டு, மரணத்தின் வாயிலில் கொடூரமாகத் திணிக்கப்பட்டார். இந்தியாவின் தலைநகரான டெல்லியிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாதபோது மற்ற மாநிலங்களில் எப்படி இருக்கும் என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்தது. உண்மையில், 'இந்தியாவின் பிற மாநிலங்களைவிட, டெல்லியில்தான் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகமாக நடக்கின்றன' என்று அதிர்ச்சி தருகிறது ஒரு புள்ளிவிவரம். 

நிர்பயா விஷயம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியபோதே... விநோதினி, நந்தினி, ஸ்வாதி என வரிசையாகப் பல பெண்கள் வன்முறைக்கு உயிரைவிட்டார்கள். நிர்பயாவின் மரணத்தின் வாயிலாக, பாலியல் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு 'நிர்பயா நிதியுதவி' வழங்க அரசு ஒப்புதல் அளித்து, அதற்கான நிதியையும் ஒதுக்கியது. அதேநேரம், வன்முறையில் ஈடுபட்டவர்களுக்குக் காலதாமதமாகத் தீர்ப்பு வழங்கியது. நாடே கொதித்துப் போராடிய இந்தத் துயரச் சம்பவங்களுக்குப் பிறகாவது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்திருக்கிறதா என்று பார்த்தால், அதிர்ச்சியே மிஞ்சுகிறது. 2011-ம் ஆண்டு டெல்லியில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 572 மட்டுமே. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் டெல்லியில் மட்டும் 2,155 வழக்குகள் பதிவாகியிருந்தன. 

இந்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Women and Child Development) கடந்த ஜனவரி மாதம் ஒரு ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. இதில், நிர்பயா நிதி எந்தெந்த மையங்கள்மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பயன்பட்டுவருகிறது, நிர்பயா நிதிக்காக அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது, அதன் பணிகள் என்னென்ன என்று குறிப்பிட்டுள்ளது. அதன்படி, 26.10.2015 அன்று முதன்முதலில் கூட்டப்பட்ட எம்பவர்டு கமிட்டி ஆஃப் ஆஃபீஸர்ஸ் (The Empowered Committee of Officers) என்கிற கமிட்டி, 26.11.15 முதல் 20.12.16 வரை ஏழு முறை கூடி விவாதித்துள்ளது. நிர்பயா நிதியின் கீழ், 18 திட்டங்களுக்கு 2195.97 கோடி ரூபாயை அரசிடமிருந்து பெற்றுள்ளது. மேலும், 16 திட்டங்களுக்கு 2187.47 கோடி ரூபாய்க்கான தேவைகள்குறித்து அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. 

பல வகை துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக, புகார் அளிக்கும் வகையிலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையிலும் 'One Stop Centre', ‘Universalisation of Women Helpline’, ‘Mahila Police Volunteer’ போன்ற சென்டர்கள் இந்தியா முழுக்க அமைக்கப்பட்டு இயங்கிவருகிறது. 

பலரும் அறிந்த சக்தி சென்டர்ஸ் (Sakhi Centres) என அழைக்கப்படும் ஒன் ஸ்டாப் சென்டர் (One Stop Centre) திட்டமானது, 2015 ஏப்ரல் முதல் தேதியிலிருந்து செயல்பட்டுவருகிறது. இதன்மூலம், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான முதலுதவி, மருத்துவ உதவி, வழக்குப் பதிவுக்கான போலீஸ் உதவி, சட்ட உதவி மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டுவருகிறது. இதற்காக, ஒவ்வொரு மாநிலத்திலும் இயங்கும் சென்டர்களுக்கு 186 OSC தரச்சான்றிதழும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த 186 சென்டர்களில் 79 ஒன் ஸ்டாப் சென்டர்கள் மட்டுமே நடைமுறையில் உள்ளது. 2017 ஜூலைக்குள் மற்ற சென்டர்களையும் செயல்படுத்தும் திட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லியிருந்தது. 

ஆபத்திலிருக்கும் பெண்கள் உடனடியாக ஹெல்ப் லைனைத் தொடர்புகொள்ளும் வகையில், இந்தியா முழுவதும் இருக்கும் ஒன் ஸ்டாப் சென்டர்களை ஒரே எண்ணில் இணைக்கவும் முடிவுசெய்துள்ளது. இதற்காக, தொலைதொடர்பு துறை, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 181 என்கிற எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் 18 மாநிலங்களில் இந்த எண் செயல்பாட்டில் உள்ளது. இதற்கான நிதியை, 33 மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ளது. 

மகிளா போலீஸ் வாலன்ட்டரிஸ் (Mahila Police Volunteers -MPVs) திட்டம்மூலம், பாதிக்கப்பட்ட பெண்களுக்காக, போலீஸ் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஹரியானா மாநிலத்தில்தான் முதன்முதலாக மகிளா போலீஸ் தன்னார்வ திட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த அமைப்பு 2016 டிசம்பர் 14-ல் தொடங்கப்பட்டது. மற்ற மாநிலங்களில் விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எமர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ் சப்போர்ட் சிஸ்டம் (Emergency Response Support System - ERSS) எனப்படும் மத்திய உள்விவகார அமைப்பானது, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழும்போது, உடனடி உதவியை அளிக்க 321.69 கோடி ரூபாயை, இந்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் பெற்றுள்ளது. பாதிப்புக்குள்ளான பெண்கள் 112 என்கிற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியது இந்த சிஸ்டத்தின் பொறுப்பு. 

சென்ட்ரல் விக்டிம் காம்பன்சேஷன் ஸ்கீம் (Central Victim Compensation Scheme -CVCF) எனப்படும் மத்திய அரசின் பாதிப்பு இழப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக, மாநிலத்துக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடந்த சுவாதியின் கொடூர கொலையில், பெரிதும் பேசப்பட்ட விஷயம், ரயில்வே ஸ்டேஷன்களில் சிசிடிவி அமைக்கவில்லை என்பது. எனவே, Integrated Emergency Response Management System என்கிற புராஜெக்ட்டுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க 983 ரயில்வே ஸ்டேஷன்களில் பெண் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். செக்யூரிட்டி கன்ட்ரோல் ரோம்ஸ் ஆஃப் ரயில்வே (Security Control Rooms of Railways) மூலமாக 182 செக்யூரிட்டி உதவி எண்கள் நடைமுறையில் உள்ளது. இத்துடன், மருத்துவ உதவிகள் மற்றும் ரயில்வே புரொடக்‌ஷன் ஃபோர்ஸ் (RPF) மற்றும் போலீஸூம் பாதுகாப்பில் இருக்கும். 

ஆந்திரப் பிரதேசத்தில் பிரபலமான 'அபயா புராஜெக்ட் புரபோசல்' (Abhaya Project Proposal) மூலமாகப் பெண்களுக்கானப் பாதுகாப்பை உறுதிசெய்தல் மற்றும் பெண் குழந்தைகள் பயணிக்கும்போது அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தருதல் போன்றவற்றுக்காக 138.49 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, ராஜஸ்தானின் ஏழு மாவட்டங்களில் பெண்களின் பாதுகாப்புக்காக 2071 கிராமப் பஞ்சாயத்துகள் 2016 முதல் 2019 வரை செயல்பட திட்டம் இயற்றப்பட்டது. அதற்காக, ஃப்ரெண்ட்ஸ் ஃபாரெவர் (Friends Forever) என்கிற திட்டம்மூலம் 10.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, செயல்பட்டுவருகிறது. சிறுமிகள் மற்றும் பெண்கள் சுதந்திரமாக நடமாடவும், அவர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யவும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

இப்படிப் பெண்களின் பாதுகாப்பு, பிரச்னைகள் மற்றும் வன்முறைகளைத் தீர்ப்பதற்காக இந்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால், 1530 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 400 கோடி ரூபாயை வேறு சில திட்டங்களுக்காக ஒதுக்கப்போகிறது. இப்படி நிர்பயா நிதியின் மூலமாகப் பெண்களின் பாதுகாப்புக்கு நாடு முழுவதும் பல திட்டங்கள் அமலில் இருந்தாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை. வீடு, சாலை, அலுவலகம் என ஒவ்வோர் இடத்திலும் பாலியல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 

இதுபோன்ற வன்முறைகளிலிருந்து எப்போது பெண்கள் முழுமையாக விடுபடுகிறார்களோ, அன்றுதான் இந்த நாடு சுபிட்சமாகும்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்