ஊழல் செய்திகளைத் தடுக்க கொல்லப்படுகிறார்களா பத்திரிகையாளர்கள்? | journalists murdered because of investigative journalism

வெளியிடப்பட்ட நேரம்: 20:09 (17/09/2017)

கடைசி தொடர்பு:20:09 (17/09/2017)

ஊழல் செய்திகளைத் தடுக்க கொல்லப்படுகிறார்களா பத்திரிகையாளர்கள்?

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ்

துப்பாக்கிக்கு, துப்பாக்கி பதிலாக இருக்கலாம்... ஆனால், பேனாவுக்கு எதிராகத் துப்பாக்கித் தூக்குதல் எந்தவிதத்தில் நியாயம்? வன்மம் நிறைந்த மனித மனோபாவங்கள், இப்படித்தான் நடந்துகொள்ளும். கவுரி லங்கேஷ் கொலை இதைத்தான் உணர்த்துகிறது. கருத்தைக் கருத்தால் மோதவேண்டுமே தவிர, கழுத்தை நெரித்து மோதும் போக்கு சமீபகாலமாக அதிகமாகி வருகிறது. அதுவும் பத்திரிகையாளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள், இந்துத்துவ எதிர்ப்பாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் தொடர்ச்சியாகப் பலியிடப்படுகிறார்கள். கவுரி லங்கேஷ் கொல்லப்படும்போது கண்டனங்கள் குவிகின்றன... அதன்பிறகு அமுங்கிவிடுகின்றன. கவுரியைப்போலப் பலரும் கொல்லப்பட்டுள்ளார்கள். இதை நினைத்துப் பார்க்கும்போது பதற்றமாக இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் ஷாஜஹான்பூர் பகுதியில் பகுதிநேரப் பத்திரிகையாளர் ஆகச்  செயல்பட்டவர் ஜகேந்திர சிங். இவர், ஜூன் 2015-ல் அவரது வீட்டிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டுத் தீ வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரைக் கொலை செய்ததாக உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஒருவர், காவல் துறை ஆய்வாளர் உள்பட 9 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்தக் கட்சியைச் சேர்ந்தவரின் மணல் மற்றும் சுரங்கம் தோண்டுதல் தொடர்பாகப் பல்வேறு ஊழல் செய்திகளைத் தொடர்ந்து எழுதி வந்ததும், அங்கன்வாடி ஊழியரை அவரும், அவரது தொண்டர்களும் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்தது தொடர்பான செய்தியை வெளியிட்டதும் அதனால் ஏற்பட்ட பகையின் காரணமாக அவர்மீது இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக வாக்குமூலம் தந்துள்ளார். இந்த நிகழ்வுக்கு முன், அவரது முகநூல் பதிவுகளிலும் 'அந்தக் கட்சிக்காரரால் தன் உயிருக்கு ஆபத்து' என்று பதிவிட்டுள்ளார். 

ஆனால், காவல் துறையினரோ, ''ஒரு வழக்கு தொடர்பாக ஜகேந்திர சிங்கைக் கைதுசெய்ய அவரது வீட்டுக்குச் சென்றபோது காவல் துறையினரிடமிருந்து தப்பிப்பதற்காகத்தானே தீ வைத்துக்கொண்டார் என்றும், அவரைக் காப்பாற்றவே காவல் துறை முயன்றனர்'' என்றும் வழக்கைப் பதிவுசெய்துள்ளனர்.

இதே காலகட்டத்தில் சந்தீப் கோத்தாரி என்ற பத்திரிகையாளர் தீ வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது நடந்தது ஜூலை 2015. மத்தியப் பிரதேசம், பலஹத் மாவட்டம், கோடகி என்ற பகுதியில். இதுதொடர்பாக மூன்று பேரைச் சந்தேகத்தின் பெயரில் போலீஸார் கைதுசெய்துள்ளனர். அப்பகுதியில் நடைபெற்ற சுரங்க ஊழல் தொடர்பாகவும் சிட்ஃபண்டு ஏமாற்று வேலை தொடர்பாகவும் ஒருவர்மீது வழக்குத் தொடுத்துள்ளார், சந்தீப் கோத்தாரி. அந்த வழக்கைத் திரும்பப்பெறச் சொல்லி அவரை வற்புறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், அதற்கு அவர் மறுத்ததனால், அவரைச் சிலர் கடத்திச் சென்று தீ வைத்துக் கொலை செய்துள்ளனர்.  எரிக்கப்பட்ட பிணத்தை ஒருநாள் கழித்து மத்தியப் பிரதேசத்துக்கு அருகில் உள்ள வார்தா பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர்.

அதேபோல், பீகார் மாநிலம் சிவன் மாவட்டப் பகுதியில் உள்ள ராஜ்தேவ் என்ற பத்திரிகையாசிரியர்,  2016 மே மாதம் மூன்று நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இது நடந்தது சிவன் பகுதி காவல் நிலையத்துக்கு அரை கி.மீ அருகிலேயே. ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சார்பாக ஐந்து முறை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரின் ஊழல் தொடர்பாகத் தொடர்ந்து தான் பணிபுரிந்த பத்திரிகையில் எழுதி வந்துள்ளார். இதனால் அவர் பலமுறை கொலை மிரட்டலுக்குள்ளானபோதும் தொடர்ந்து அவரைப் பற்றி எழுதி வந்துள்ளார். அதன் காரணமாகவே இவரை அந்த எம்.பி கொலை செய்திருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. மேலும், அந்த எம்.பி-யிடம் இருந்த ஒரு பட்டியலில், கொலை செய்யப்பட வேண்டியவர்கள் யார் யார் என்ற வரிசையில் ராஜ்தேவின் பெயரும் இருந்ததாகக் காவல் துறை செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கும் கவுரி லங்கேஷின் கொலையும், இதே வரிசையில் சேர்ந்திருக்க வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆக, இக்கொலைகளை எல்லாம் பார்க்கும்போது பத்திரிகைச் சுதந்திரத்தின்மீது செலுத்தப்பட்ட வன்முறையாகவே தெரிகிறது என்கின்றன சமூக வலைதளங்கள்.

- அழகு சுப்பையா


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close