Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காஷ்மீர் பிரச்னையை ஐ.நா-வில் எழுப்ப பாகிஸ்தான் திட்டம்?!

UN

நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டம் செப்டம்பர் 18-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், காஷ்மீர் பிரச்னையை, ஐ.நா-வில் எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக நீடித்துவரும் பிரச்னையாக காஷ்மீர் இருந்து வருகிறது. பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தோய்பா, ஜெய்ஸ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள், காஷ்மீர் எல்லைக்குள் தங்கள் அமைப்பின் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து, இந்திய மண்ணில் பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன. தவிர, காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, அதில் பாகிஸ்தானுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று தொடர்ந்து இந்திய அரசு தெரிவித்து வந்த போதிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், தீவிரவாதிகள் ஆயுதப்பயிற்சி பெறுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், ஐ.நா.சபையின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை தொடங்கி ஒருவார காலம் நடைபெறவுள்ளது. இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்துகொண்டு, வரும் 23-ம் தேதி ஐ.நா. சபை கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஷாகித் ககான் அப்பாஸி, ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஐ.நா. சபைக் கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதமர், காஷ்மீர் பிரச்னையை எழுப்புவார் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இதுபற்றி ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் அளித்த பேட்டியில், "இந்தியாவைப் பொறுத்தவரை முன்னேற்றம், எதிர்காலத்தை நோக்கிய திட்டங்கள், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து போன்ற விஷயங்களையே முன்னெடுத்து வைக்கும்.

UN

ஐ.நா குறித்த நிலைப்பாட்டில், நாங்கள் எங்கள் லட்சியத்தில் உறுதியாகவும், தீர்க்கமாகவும் உள்ளோம். அதே நேரத்தில் வேறு சில நாடுகள் (பாகிஸ்தான்), கடந்த காலத்தைப் பற்றியும், கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் பற்றியும் கவலைகொண்டுள்ளனர். அவர்கள், தற்காலத்துக்கு வருவதில்லை. அவர்கள் அந்தக்கால மனிதர்களாக உள்ளனர். 

குறிப்பிட்ட ஒரு பிரச்னையை பாகிஸ்தான், ஐ.நா. சபையில் முன்வைக்குமானால், அது பொதுச்சபையில் விவாதிக்கப்பட்ட விஷயமாக இருக்க முடியாது. பல ஆண்டுகளாக, பன்னெடுங்காலமாக அந்தப் பிரச்னையை எடுக்க வேண்டும் என்று அந்நாடு விரும்புகிறது. குறிப்பிட்ட எல்லைக்குள் அந்த நாடு தங்கள் சிந்தனையை சுருக்கிக்கொள்கிறது. அதைத் தாண்டி சிந்திப்பதில்லை" என்று தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸார் பற்றி கேட்டபோது, அவரை தீவிரவாதி என்று ஐ.நா. பிரகடனம் செய்யும் என்று நம்புவதாக பதிலளித்தார்.

சையது அக்பருதீன்"இவ்விஷயத்தில், இந்தியா அமைதியாக இருக்காது. மசூத் அஸாரை நீதியின் நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ளோம். தற்போது இந்தப் பிரச்னை ஐ.நா. குழுவின் முன் உள்ளது. அந்தக் குழு தன் கடமையை உறுதியுடன் நிறைவேற்றும் என்று நம்புகிறேன். அதே நேரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைக்கும். மசூத் பற்றி நிச்சயம் எடுத்துக்கூறி, நீதியை நிலைநாட்ட இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்" என்றார் அவர்.

தற்போது போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன்டானியோ கட்டர்ஸ் ஐ.நா சபையின் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

ஒவ்வொரு முறையும் ஐ.நா. சபை கூட்டங்களின்போது காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் எழுப்புவதும், அதற்கு இந்தியா சார்பில் பதிலடி கொடுப்பதும் நீடித்து வருகிறது. இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை அவ்வப்போது, ஐ.நா. மட்டுமல்லாது, இதர நாடுகளுக்குச் செல்லும் போதும், பிரதமர் உள்ளிட்ட இந்தியத் தலைவர்கள் எடுத்துக்கூறிய போதிலும், பாகிஸ்தான் தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement