கிரண்பேடி-நாராயணசாமி மோதலில் இப்போதைய அத்தியாயம் என்ன? | Kiran Bedi - Narayanasamy who fights over medical students

வெளியிடப்பட்ட நேரம்: 11:47 (18/09/2017)

கடைசி தொடர்பு:13:52 (18/09/2017)

கிரண்பேடி-நாராயணசாமி மோதலில் இப்போதைய அத்தியாயம் என்ன?

கிரண்பேடி

“கவர்னர் கிரண்பேடி மாநில வளர்ச்சிக்காக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக அரசின் மீது குறை கூறுவதும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை மிரட்டி வசைபாடுகிறார்” என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கடுமையாக விமர்சித்திருக்கிறார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண் இல்லாமல் முறைகேடாக சேர்க்கப்பட்ட 778 எம்.பி.பி.எஸ் மாணவர்களை தகுதி நீக்கம் செய்ததோடு இரண்டு வாரங்களுக்குள் அவர்களை கல்லூரிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. எம்.சி.ஐ-யின் காலதமதமான இந்த உத்தரவு மாணவர்களையும் பெற்றோர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றது.

இந்த விவகாரத்தில் ஆளுநர் கிரண்பேடிக்கும் அமைச்சரவைக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்திருக்கிறது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக கிரண்பேடி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதுகுறித்து இரு மாதங்களுக்கு முன்பு பேசிய அவர், “முறைகேடுகள் செய்ததற்கான ஆதாரங்கள் அழிக்கப்படும் முன் சென்டாக் நிறுவனத்தில் சிபிஐ ஆய்வு செய்ய வேண்டும்" என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இதன் பின்னர், சென்டாக் நிறுவனத்தை ஆய்வுசெய்த சிபிஐ ஆவணங்களை அள்ளிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

கிரண்பேடி

இந்நிலையில் தற்போது எம்.பி.பி.எஸ் மாணவர்கள் நீக்க விவாகரம் குறித்துப் பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, “கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி தனியார் கல்லூரி நிர்வாகங்கள் மற்றும் பெற்றோர் மாணவர் சங்கத்தினரை அழைத்து ஆளுநர் மாளிகையில் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் மருத்துவர் மாணவர் சேர்க்கை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சென்டாக் கலந்தாய்வு மூலமே நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தோம். ஆனால், அப்போது அதன்படி செய்வதாகக் கூறிச் சென்ற தனியார் கல்லூரி நிர்வாகங்கள் விதிமுறைகளை மீறி மாணவர் சேர்க்கையை நடத்தியிருக்கின்றன.

மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை கண்காணிக்க வேண்டிய புதுச்சேரி சுகாதாரத்துறை, சென்டாக் நிர்வாகம் தங்களது பொறுப்பு மற்றும் கடமைகளை சரியாகச் செய்யவில்லை. தனியார் கல்லூரிகளின் விதிமீறல்கள் குறித்த அறிக்கையை தலைமைச் செயலாளரிடம் கேட்டும் இதுவரை கிடைக்கவில்லை. எனவேதான் தற்போது மாணவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அதிகார வர்க்கமும், தனியார் கல்லூரி நிர்வாகங்களும்தான் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கவனமாக தங்கள் கடமைகளைச் செய்திருந்தால் இப்படியான சூழல் ஏற்பட்டிருக்காது. இந்த விவகாரத்தில் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி அரசுக்கும், தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.

இதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல் அமைச்சர் நாராயணசாமி, ”தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து பெறப்பட்ட 283 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ் இடங்களை வெளிப்படையாகவே நிரப்பினோம். இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவ மாணவர்களை நீக்கிய விவகாரத்தில் மாநில அரசுக்கு எந்தவித சம்மந்தமும் இல்லை. மேலும் அதில் தலையிடும் அதிகாரமும் இல்லை. எனினும் தனியார் கல்லூரி நிர்வாகங்களை அழைத்துப் பேச இருக்கிறோம். ஆனால், இந்த விவகாரத்தில் கவர்னர் கிரண்பேடியின் கருத்துப் பொறுப்பற்றது. அவர் மாநில வளர்ச்சிக்காக எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் அரசின் மீது குறை கூறுவதும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை மிரட்டி வசைபாடுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகானது அல்ல. மக்கள் நலத்திட்டங்கள் அனைத்துக்கும் அவர் முட்டுக்கட்டை போடுகிறார். மாநில அரசை முடக்குவதிலேயே அவர் குறியாக இருக்கிறார். விளம்பரத்துக்காக மட்டுமே பணி செய்யக் கூடாது.

இதுகுறித்து அவருக்கே கடிதம் அனுப்பியிருந்தும் அவர் மாற்றிக்கொள்ளவில்லை. இனி வரும் காலங்களில் கவர்னர் கிரண்பேடி தன்னை மாற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கின்றது" என்று தெரிவித்த அவர்,”பண மதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி போன்றவைகளால் சரிவடைந்துள்ள பொருளாதாரத்தை ஈடுகட்டவே பெட்ரோல், டீசல் மீதான வரிகள் மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 108 டாலர்களாக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை தற்போது 58 டாலர்கள் தான். 50% விலை குறைந்த நிலையிலும் பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்த்தி மக்கள் மீது வரிச்சுமையை தினித்துள்ளது மத்திய அரசு. இதன் காரணமாக சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்திருப்பதோடு பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் மக்களை சுரண்டும் வேலை. பெட்ரோல் விலை ஒரு வாரத்துக்கு பெட்ரோல் 5 ரூபாயும் டீசல் 4.50 ரூபாயும் உயர்ந்து பணவீக்கம் அதிகரித்திருப்பதோடு பெட்ரோல் டீசல் விலை விண்ணை எட்டியிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்துவதோடு மறைமுக வரியை விட்டு மக்களை சுரண்டும் வேலையை மத்திய அரசு நிறுத்த வேண்டும். விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்பார்” என்று தெரிவித்தார்.

கடந்த மாதம் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை குற்றச்சாட்டை காரணம் காட்டி, 95 முதுநிலை மருத்துவ மாணவர்களை அதிரடியாக வெளியேற்ற உத்தரவிட்டது எம்.சி.ஐ. அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் எம்.சி.ஐ-யின் இந்த அறிவிப்பு புதுச்சேரி அரசியலில் மீண்டும் புயலைக் கிளப்பியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close