கேரளாவைப் புரட்டிப் போட்ட மழை!: கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்குப் பருவமழை கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, கேரளாவில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், கனமழையால் ஒருசில இடங்களில் நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இதுதொடர்பாக  ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் பினராயி விஜயன், ‘கேரளாவில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பதால் பேரிடர் மேலாண் துறையினரும் தீயணைப்புப் அடையினரும் முன்னெச்சரிக்கை நடவடிகையில் ஈடுபட்டு வருகின்றனர். மண் சரிவு ஏற்படும் வாய்ப்புள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்வது அவசியம்.

மீனவ மக்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை விடப்படுகிறது. தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது. மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மீட்புப் படையினர், காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.  

கடல் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. அளவுக்கு பலமாக வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையால், கோட்டயம்-திருவனந்தபுரம் இடையிலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு, இடுக்கி மாவட்டங்கள் மற்றும் ஆழப்புழா மாவட்டத்தின் கடலோரப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில், கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை ஒட்டிய பாலக்காடு மாவட்டத்தின் அட்டப்பாடி வனப்பகுதியில் பெய்துவரும் தொடர் கனமழையால், ஒருசில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கனமழையால் கொச்சி நகரின் சாலைப் பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!